200 அடிச்சதுக்கு கொண்டாடுறேன்னு சொல்லி, கால உடச்சிகிட்டது தேவையா? – கேள்விக்கு வார்னர் கொடுத்த சிறப்பான பதில்!

0
205

200 அடித்ததற்கு கொண்டாடியபோது காயம் ஏற்பட்டதற்கு விளக்கமளித்துள்ளார் டேவிட் வார்னர்.

ஆஸ்திரேலியா சென்றுள்ள தென்னாப்பிரிக்கா அணி டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி தோல்வியை தழுவியது.

இரண்டாவது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்றது. இதிலும் பரிதாபமாக இன்னிங்ஸ் மற்றும் 182 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. இதனால் 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலிய அணி.

ஆஸ்திரேலியா அணிக்கு முதல் இன்னிங்ஸில் அபாரமாக விளையாடிய டேவிட் வார்னர் இரட்டை சதம் அடித்தார். இதில் கூடுதல் சிறப்பு என்னவென்றால் இது அவருக்கு நூறாவது டெஸ்ட் போட்டியாகும். தனது நூறாவது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரர் ஆனார்.

சிறப்புமிக்க இந்த போட்டியில் இரட்டை சதம் அடித்த பிறகு, குதித்து சதம் அடித்ததை கொண்டாடினார் வார்னர். அப்போது இவருக்கு கால் பகுதியில் தசைப்பிடிப்பு ஏற்பட்டு போட்டியில் இருந்து பாதியிலேயே வெளியேற வேண்டிய நிலை வந்தது. உடனடியாக ரிட்டையர்ட் ஹர்ட் கொடுத்து வெளியேறினார்.

அடுத்த நாள் காலை மீண்டும் பேட்டிங் செய்ய வந்த அவர் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்து வெளியேறினார். இரட்டை சதம் அடிப்பதற்கு முன்னர் மைதானத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் அவ்வபோது பிரேக் எடுத்துக் கொண்டார்.

இப்படி இருக்கும் ஒரு சூழலில் எதற்காக உயரக்குதித்து கொண்டாட வேண்டும்? இப்படி காயம் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்? என்ற கேள்விகள் முன்வைக்கப்பட்டது. வார்னர் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ஈடுபட்ட போதும் இப்படி ஒரு கேள்வி அவர் முன் வைக்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த வார்னர் கூறுகையில்,

“நீங்கள் கேட்பது உண்மைதான். நான் நன்றாக விளையாடிக் கொண்டிருந்தேன். வழக்கமாக அடித்த சதம் போல இது இல்லாமல், எனது நூறாவது டெஸ்ட் என்பதால் அதை கொண்டாடுவதற்கு முயற்சித்து குதித்து கையை மேலே தூக்கினேன். அப்போது தசைப்பிடிப்பு ஏற்படும் ஏற்படாது என்பது பற்றிய சிந்தனை இருக்காது.

அந்த தருணத்தில் நாம் நிகழ்த்திக் காட்டியதை ஆக்ரோசத்துடன் வெளிப்படுத்த நினைப்போம். அது போல தான் நினைத்து கொண்டாடினேன். துரதிஷ்டவசமாக இப்படி ஆகிவிட்டது. வெயிலின் தாக்கம் வழக்கத்திற்கு மாறாக இருந்தது. பேட்டிங் செய்யும்பொழுது என்னால் அடிக்கடி சோர்வை உணர முடிந்தது. இறுதியாக இரட்டை சதம் அடைந்ததை நினைத்து மகிழ்ந்திருக்கிறேன். வெற்றிக்கு பங்காற்றியதிலும் எனக்கு மிகவும் மகிழ்ச்சி.” என்றார்.