நான் உடனடியா மார்க் வுட்கிட்ட மன்னிப்பு கேட்டுட்டேன்.. களத்தில் என்ன நடந்தது? – கிளாசன் வெளியிட்ட முக்கிய தகவல்!

0
428
Klaasen

நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் முதல் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி இங்கிலாந்து அணியை 229 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பிரம்மாண்டமான பெரிய வெற்றியைப் பெற்றது.

இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியின் துவக்க ஆட்டக்காரரும் கேப்டனுமான டெம்பா பவுமா விளையாடாத காரணத்தினால், வலதுகை இளம் துவக்க ஆட்டக்காரர் ரீசா ஹென்றிக்ஸ் இடம் பெற்றார். கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி சிறப்பாக 85 ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

அடுத்து வாண்டர் டேசன் அரைசதம் அடித்து ஆட்டம் இழந்தார். மேலும் கேப்டன் எய்டன் மார்க்ரம் 42 ரன்கள் எடுத்தார். அடுத்து வந்த முக்கிய பேட்ஸ்மேன் டேவிட் மில்லர் 5 ரன்கள் வெளியேற தென் ஆப்பிரிக்க அணிக்கு பேட்டிங் செய்ய சாதகமான ஆடுகளத்தில் அழுத்தம் உருவானது.

இந்த இடத்திலிருந்து ஜோடி சேர்ந்த ஹென்றி கிளாசன் மற்றும் மார்க்கோ யான்சன் இருவரும் சேர்ந்து, 151 ரன்கள் என்று நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தது மட்டுமல்லாமல், குறுகிய நேரத்தில் அதிரடியாக ரன்கள் கொண்டு வந்து 399 ரன்கள் என்கின்ற மொத்தத்திற்கு தென் ஆப்பிரிக்க அணியை கொண்டு சென்றனர்.

இந்தப் போட்டியில் ஹென்றி கிளாசன் 67 பந்துகளில் 109 ரன்கள் குவித்து அசத்தினார். சதத்திற்கு முன்பாக மார்க் வுட் பந்துவீச்சை சந்தித்த அவர் இரண்டு முறை கால்களில் அடி வாங்கினார். இதற்குப் பிறகு அதே ஓவரில் அவர் சதத்தை எட்டினார். இந்த நேரத்தில் அவர் மிக ஆக்ரோஷமாக மார்க் முகத்தைப் பார்த்து சதத்தை கத்தி கொண்டாடினார். இதுகுறித்து இங்கிலாந்து கேப்டன் பட்லர் பேசியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

தற்பொழுது இது குறித்து கூறியுள்ள கிளாசன் “முதல் பகுதி விளையாட்டு முடிந்ததுமே நான் நேராக மார்க் வுட் இடம் சென்று மன்னிப்பு கேட்டுக் கொண்டேன். நான் விளையாடிக் கொண்டிருந்த பொழுது அவர் இரண்டு முறை என்னுடைய காலில் அடித்தார். இந்த போட்டி முடிவுக்காக நான் இங்கிலீஷ் வீரர்களுக்கு வருந்துகிறேன்.

ஆனால் நான் நடந்து கொண்டது அந்த நேர உணர்ச்சிவசத்தால் மட்டும்தான். சில நேரங்களில் அதைக் கட்டுப்படுத்துவது கடினமான ஒன்று. விளையாடி முடித்ததும் நான் அவரிடம் சென்று பேசினேன். எல்லாம் தீர்ந்துவிடும் என்று நம்புகிறேன்!” என்று கூறியிருக்கிறார்.

இது சம்பந்தமாக பேசிய இங்கிலாந்து கேப்டன் பட்லர் கூறும் பொழுது “சதம் அடித்ததற்காக அவர் உணர்ச்சிவசப்பட்டார் என்று நினைக்கிறேன். அவர் மார்க் வுட் முகத்துக்கு நேராக கொண்டாட வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கிறேன். மேலும் சில நொடிகளுக்குப் பிறகு அவர் மன்னிப்பு கேட்டார். அதனால் இங்கு எந்த மோசமான உணர்வுகளுக்கும் இடம் கிடையாது!” என்று கூறியிருக்கிறார்!