தோனியிடம் நான் இதை எதிர்பார்த்து ஆவலாய் காத்திருக்கிறேன் – ஏ.பி.டிவிலியர்ஸ் பேச்சு

0
107
Ab de Villiers about MS Dhoni

ஐ.பி.எல் என்றாலே சென்னை அணியோடு மோத போகும் எதிரணி யாரென்று தெரிந்துகொள்ளும் தொடர்தானே என்று நகைச்சுவையாய் சொல்வார்கள். அதில் உண்மையும் இல்லாமலில்லை. அந்தளவிற்கு அணியைக் களத்திற்கு வெளியிலும், உள்ளுக்குள்ளும் வழிநடத்தியவர் மகேந்திர சிங் தோனி.

நேற்று முன்தினம் யாரும் எதிர்பார்க்காத வகையில் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிக்கொள்வதாய் தோனி அறிவித்திருந்தார். இது சமூக வலைத்தளங்களின் மொத்தத்திலும் தீயாய் பரவியிருந்தது. கூடவே சி.எஸ்.கே அணி நிர்வாகம் ரவீந்திர ஜடேஜாவை புதிய கேப்டனாய் அறிவித்தது. பெரிய கேப்டன்சி அனுபவம் இல்லாத ஜடேஜா அனுபவம் பெறுவதற்காக, தோனி அணியின் நலன் கருதி தாமாய் இந்த முடிவை எடுத்திருப்பதாக, சி.எஸ்.கே அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் தெரிவித்திருந்தார்.

- Advertisement -

புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்ட ஜடேஜா, மிகப்பெரிய வீரர் ஒருவரின் இடத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது மகிழ்ச்சி என்றாலும் அவர் உருவாக்கி வைத்திருக்கும் வெற்றி மரபை முன்னோக்கி எடுத்துச் செல்ல வேண்மென்றும், ஆனால் தான் இதுக்குறித்து அதிகம் கவலைப்பட போவதில்லை என்றும், ஏனென்றால் தோனி தமது பக்கத்திலேயே இருக்கிறார் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில்தான் தற்போது ஐ.பி.எல்-ல் இருந்து ஓய்வு பெற்றிருக்கும் அதிநவீன கிரிக்கெட்டின் அடையாளமாகத் திகழுகின்ற, இரசிகர்களால் 360 என்று கொண்டாடப்படுகிற ஏ.பி.டிவிலியர்ஸ், தோனி கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிக்கொண்டது குறித்துக் கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

டிவிலியர்ஸ் தனது கருத்தில் “தோனியின் இந்த நகர்வில் எனக்குப் பெரிய ஆச்சரியமில்லை. உண்மையில் எனக்கு இதில் மகிழ்ச்சிதான். அவர் கடைசி ஐ.பி.எல் கோப்பையை வென்ற போதே கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிவிட்டார் என்றுதான் நினைக்கிறேன்” என்று தெரிவித்தவர்,

- Advertisement -

மேலும் தொடர்ந்து “தோனி இரசித்து அடிக்கவிருக்கும் பெரிய சிக்சர்களை பார்க்க ஆவலாய் காத்திருக்கிறேன். இனி அவர் வியூகங்கள் குறித்தும், வீரர்களைக் கண்காணிப்பது குறித்து யோசிக்கத் தேவையில்லை” என்று தன் எதிர்பார்ப்பை வெளிப்படுத்தி இருக்கார்.

ஸ்டம்ப்களுக்கு பின்னால் தோனி நிற்கும் எல்லா ஆட்டங்களிலும் அவர்தானே கேப்டன்!