“சூரியகுமார் இனிமேல் விளையாட கூடாதுனு நினைக்கிறேன். ஆனால்…” – கேப்டன் ரோகித் சர்மா!

0
5592
Rohitsharma

தென் ஆப்பிரிக்க ஆண்கள் கிரிக்கெட் அணி 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட இரண்டு தொடர்களில் விளையாட இந்தியா வந்துள்ளது!

இதில் முதலில் நடைபெறும் டி20 தொடரில் 2-0 என இந்திய அணி முன்னிலையில் இருக்கிறது.இந்தத் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது!

நேற்று அசாம் மாநிலம் கவுகாத்தி மைதானத்தில் இரண்டாவது போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டிக்கான டாஸ் வென்ற தென் ஆப்ரிக்க கேப்டன் முதலில் இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். இந்திய அணியில் முதல் நான்கு பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடி இந்திய அணியை 200 ரன்கள் தாண்ட வைத்து, 20 ஓவர்கள் முடிவில் 237 ரன்களை எட்ட வைத்தார்கள்.

இதற்கு அடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி இரண்டாவது ஓவரில் 2 விக்கெட்டை இழந்து, பத்தாவது ஓவரின் போது 3 விக்கெட் இழப்பிற்கு 70 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது களத்தில் இருந்த இடக்கை பேட்ஸ்மேன்கள் குயின்டன் டி காக் மற்றும் டேவிட் மில்லர் இருவரும் சேர்ந்து அதிரடியில் மிரட்டி விட்டார்கள். குயின்டன் டி காக் அரைசதம் அடிக்க, டேவிட் மில்லர் சதம் அடித்து மிரட்டினார். இறுதியில் இந்திய அணி16 ரன்கள் வித்தியாசத்தில் ஒருவழியாக வெற்றி பெற்றது.

இந்தப்போட்டியில் இந்திய டி20 அணியின் தற்போதைய சூப்பர் மேன் சூரியகுமார் யாதவ் 22 பந்துகளில் 61 ரன்கள் குவித்தார். இதில் தலா 5 பவுண்டரிகள் 5 சிக்ஸர்கள் அடக்கம். வழக்கம் போல் அவர் மைதானத்தில் எல்லா பக்கங்களுக்கும் பந்தை தரையிலும் காற்றிலும் எல்லைக்கோட்டை கடக்க வைத்தார்.

போட்டி முடிந்து சூரியகுமார் பேட்டிங் பார்மை எப்படி தக்க வைக்கிறீர்கள்? என்ற கேள்வியை ஹர்ஷா போக்லே கேப்டன் ரோஹித் சர்மாவிடம் முன்வைத்தார். வழக்கம்போல் கேப்டன் ரோகித் சர்மா அவருக்கே உரிய பாணியில் பதிலளித்தார்.

இதுபற்றி ரோகித் சர்மா கூறும்போது
” பாகிஸ்தான் அணியுடன் அக்டோபர் 23ஆம் தேதி நடக்கும் போட்டி வரை அவரை இனி ஆட வைக்க வேண்டாம் என்றுதான் நினைக்கிறேன். ஆனால் சூர்யகுமார் யாதவ் விளையாட்டை விரும்பும் ஒரு வீரர். அவர் எப்போதும் விளையாடிக் கொண்டே இருக்க வேண்டும் என்று நினைப்பவர். தொடர்ந்து விளையாடுவது அவருக்கு ஒரு மகிழ்ச்சியான விஷயம். எனவே நாங்கள் அவரை மகிழ்ச்சியாக வைத்திருக்க விரும்புகிறோம்” என்று சூசகமாக அவர் தொடர்ந்து விளையாடுவார் என்று தெரிவித்திருக்கிறார்.

மேலும் சூரியகுமார் பேசியதாவது
“ரோகித் மற்றும் ராகுல் அமைத்த அடித்தளத்தை நான் பலமாக்க எண்ணினேன். நான் உள்ளே சென்று அதற்கேற்றபடி மகிழ்ச்சியாக விளையாடினேன். டேவிட் மில்லர் மிகச் சிறப்பாக விளையாடினார் பார்ப்பதற்கு அருமையாக இருந்தது. நீங்கள் பயிற்சி செய்யும் பொழுது தெளிவாக இருக்க வேண்டும். முதலில் பேட் செய்யும் பொழுது இதுதான் இலக்கு என்று மனதில் தீர்மானம் செய்ய முடியாது. களத்திற்கு சென்று அதிரடியாக நிலைத்து நின்று விளையாட வேண்டும். இதன் மூலம் ஒரு பெரிய இலக்கை கொண்டுவரவேண்டும் இதுதான் எனது வழிமுறை ” என்று கூறியிருக்கிறார்!