சென்னை அணியில் இணைவதற்கு முன் வரை இவரின் திறமை எனக்குத் தெரியாமல் இருந்தது – மைக் ஹஸ்ஸி ஆச்சரியம்

0
873
Mike Hussey CSK

ஐ.பி.எல் பதினைந்தாவது சீஸன் முதல் வாரத்தைக் கடந்து இரண்டாம் வாரத்திற்குள் சென்றிருக்கிறது. முதல் வாரத்தில் சென்னை, மும்பை, ஹைதராபாத் என ஐ.பி.எல் கோப்பைகளை கைப்பற்றிய அணிகள் தோல்வியைத் தழுவ, புதிய அணிகளான குஜராத், லக்னோ அணிகளின் செயல்பாடுகள் சிறப்பா அமைந்திருக்கின்றன.

இந்த நிலையில் ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர், மிஸ்டர் கிரிக்கெட் என்று அழைக்கப்படுபவரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துணைப் பயிற்சியாளருமான மைக் ஹஸ்ஸி சக அணியின் வீரர் மொயீன் அலியைப் பற்றி சில சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

அதில் அவர் “நேர்மையாக சொல்வதென்றால் மொயீன் அலி நம்ப முடியாதளவு சிறப்பான வீரர். அவரை மிக நெருக்கமாக சென்னை அணியில் பார்க்காத வரை அவரின் திறமை எனக்குத் தெரியவில்லை. சென்னை அணியில் பார்த்த பொழுதான் அவரின் திறமை என்னை ஆச்சரியப்படுத்தியது. அவர் கவரக்கூடிய வகையில் அழகாக விளையாடும் சிறப்பான பேட்ஸ்மேன்” என்று புகழ்ந்து கூறியிருக்கிறார்.

2020 ஐ.பி.எல் சீசனில் சி.எஸ்.கே அணி முதல்முறையாக ப்ளேஆப்ஸ்க்குள் நுழைய முடியாமல் வெளியேறி இருந்தது. 2021 ஐ.பி.எல் சீசனில் சி.எஸ்.கே. மீண்டும் பழைய வெற்றிப்பாதைக்குத் திரும்பியதோடு கோப்பையையும் கைப்பற்றி அசத்தி இருந்தது. இதில் பாஃப், ருதுராஜின் பங்களிப்பு எந்த அளவிற்கு முக்கியமானதோ, மொயீன் அலியின் பங்களிப்பும் முக்கியமானது.

2021 சென்னை சாம்பியனான ஐ.பி.எல் சீசனில் 15 ஆட்டங்களில் 357 ரன்களை 137 ஸ்ட்ரைக்ரேட்டில் அடித்திருந்தார். ஆறு விக்கெட்டுகளை கைப்பற்றி பந்துவீச்சிலும் தன் பங்களிப்பைத் தந்திருந்தார். பவர்ப்ளே முடிந்து எதிரணியின் பந்துவீச்சை தாக்குவதற்கு, சென்னை அணிக்கு முக்கிய ஆயுதமாய் மொயீன் அலி இருக்கிறார்!