” உம்ரான் மாலிக்கைப் போல் என்னால் வேகமாக பந்துவீச முடியாது ; இது மட்டுமே செய்யப் போகிறேன் ” – ஹர்ஷல் பட்டேல் பேச்சு

0
63
Umran Malik and Harshal Patel

31 வயதான ஹர்சல் படேல் குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரைச் சேர்ந்த மிதவேகப் பந்துவீச்சாளர்.. இவர் 2009-11 ஆண்டுகளில் குஜராத் மாநில கிரிக்கெட் அணிக்காக விளையாடினார். பின்பு 2011ஆம் ஆண்டிலிருந்து ஹரியானா மாநில கிரிக்கெட் அணியில் தொடர்கிறார்.

இவர் முதன் முதலில் ஐ.பி.எல் தொடரில் 2012ஆம் ஆண்டு ராயல் சேலன்ஞர்ஸ் பெங்களூர் அணியால் 40 இலட்சத்திற்கு வாங்கப்பட்டு அறிமுகம் ஆனார். அதிலிருந்து மூன்று ஆண்டுகள் 2016ஆம் ஆண்டு வரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடினார்.

அடுத்து 40 இலட்சத்திற்கு 2017ஆம் ஆண்டு டெல்லி அணிக்குச் சென்றவர், 2018ஆம் ஆண்டு மெகா ஏலத்தில் 20 இட்சத்திற்கு மட்டுமே மீண்டும் டெல்லி அணியால் வாங்கப்பட்டார். 2018-19 இரண்டு ஆண்டுகள் டெல்லி அணிக்காக விளையாடிய இவரை மீண்டும் பெங்களூர் அணி 2020ஆம் ஆண்டு வாங்கியது.

இங்கிருந்துதான் இவரின் கிரிக்கெட் வாழ்க்கையில் ஏறுமுகம் ஆரம்பித்தது. 2020ஆம் ஆண்டு ஐந்து போட்டிகள் மட்டுமே விளையாட வாய்ப்பு கிடைக்க, அதில் மூன்று விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்துகிறார். ஆனால் அதற்கடுத்த 2021ஆம் ஆண்டு இவரது பந்துவீச வந்தாலே விக்கெட்டுகள் வரிசையாய் விழ ஆரம்பிக்க, அந்த ஆண்டு ஐ.பி.எல் சீசனில் 15 போட்டிகளில் 32 விக்கெட்டுகளை வீழ்த்துகிறார். இதுதான் 15 வருட ஐ.பி.எல் வரலாற்றில் ஒரு பந்துவீச்சாளரின் மிகச்சிறப்பான செயல்பாடு ஆகும். இதற்குப் பிறகு இந்திய டி20 அணியிலும் தேர்வாகிறார். மேலும் இந்த ஆண்டு நடந்த ஐ.பி.எல் மெகா ஏலத்தில் பெங்களூர் அணியால் 10.75 கோடிக்கு வாங்கவும்பட்டார்!

மிகச்சிறப்பான ஸ்லோ-பால்களை வீசக்கூடிய இவர், இந்த வகையான பந்துவீச்சை தனது பிரத்தியேக ஆயுதமாக வைத்திருக்கிறார். இவர் தனது பந்துவீச்சு குறித்துக் கூறும்பொழுது “நான் வேகமாக பந்துவீசுவது குறித்துக் கவலைப்படுவதில்லை. ஏனென்றால் என்னால் உம்ரான் மாலிக் போல வேகமாக வீச முடியாது. நான் என்னுடைய தனிப்பட்ட பந்துவீச்சு திறனை சர்வதேச போட்டிகளுக்கான தரத்தில் மேம்படுத்தவே விரும்புகிறேன். எனது முழுக்கவனமும் இது குறித்துதான் இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்!