நல்லா கேட்டுக்கோங்க.. இந்தியா-பாகிஸ்தான் சீரிஸ் நடக்கனும்னா அதுக்கு ஒரே வழி இதான் – புதிய தலைவர் பேட்டி!

0
538

இந்தியா-பாகிஸ்தான் இருதரப்பு தொடர் நடக்க ஒரே வழி இதுதான் என பேட்டியளித்துள்ளார் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவர் நஜம் சேதி.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் மற்றும் சேர்மன் பொறுப்பில் இருந்த ரமீஷ் ராஜா, திடீரென அதன் மேல்மட்ட குழுவின் ஆலோசனைக்கு பிறகு பணியில் இருந்து நீக்கப்பட்டார். புதிய தலைவராக நஜம் சேதி நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

- Advertisement -

டி20 உலக கோப்பை தொடர் தோல்வி, ஆசியகோப்பை இறுதி போட்டியில் தோல்வியை தழுவியது மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 0-3 என்ற கணக்கில் இழந்தது என தொடர்ச்சியான மோசமான செயல்பாடுகளால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்த முடிவிற்கு வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகிறது.

நியமிக்கப்பட்ட அடுத்த நாளே தனது பணியை தொடங்கியுள்ளார் புதிய தலைவர் நஜம் செதி. மேலும் இந்திய-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இருதரப்பு தொடர் மற்றும் ஐசிசி தொடர்களை சொந்த நாடுகளுக்கு சென்று விளையாடுவது ஆகியவை பற்றியும் கருத்து தெரிவித்திருக்கிறார். அவர் பேசியதாவது:

“இருதரப்பு தொடர் நடைபெறுவதற்கு இரண்டு நாட்டு ரசிகர்களும் மிகவும் விரும்புகின்றனர். இதற்கு கிரிக்கெட் வாரியம் செவிசாய்க்கவில்லை என்றால் அது அவர்களுக்கு கொடுக்கும் அவமரியாதை. இரு தரப்பினரும் பொதுவான இடத்தில் ஆலோசனை நடத்தி பல்வேறு விதிமுறைகளை கொண்டு வந்து இருதரப்பு தொடர்கள் நடத்துவதற்கு என்னென்ன செய்ய வேண்டுமோ, அவற்றை செய்ய வேண்டும். ரசிகர்களின் மகிழ்ச்சி மிகவும் முக்கியமானது. அத்துடன் நிர்வாகத்திற்கும் போதிய வருமானங்கள் கிடைக்கும்.

- Advertisement -

விதிமுறைகள் பற்றி விவாதிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். பிசிசிஐ தயாராக இருக்கிறதா? என்பதை அவர்களிடம் கேட்க வேண்டும்.” என்றார்.

மேலும் வீரர்கள் மத்தியில் ஏதேனும் மாற்றங்கள் கொண்டுவரப்படுமா? என்ற கேள்விக்கு, “வீரர்கள் நன்றாக செயல்படுகிறார்கள், தவறு தலைமை மீது இருந்திருக்கிறது. ஒவ்வொன்றாக சரி செய்யப்படும். வீரர்களுக்கு போதிய வசதிகள் செய்து கொடுத்து அவர்களின் மேம்பாட்டிற்கு என்ன தேவை என்பது தொடர்ந்து கவனிக்கப்படும். ஒவ்வொரு வருடமும் அவர்களின் செயல்பாடு குறித்து பரிசீலனைகள் நடத்தப்படும்.” என்றும் பேசினார்.