“விராட் கோலி எப்படி விளையாடனுங்கறது ரோகித் சர்மா கையில்தான் இருக்கு” – விராட் கோலியின் இளம்வயது பயிற்சியாளர்!

0
130
Virat Kohli

இந்திய அணியின் மிக முக்கியமான ஆட்டக்காரரான விராட் கோலி, நடந்து முடிந்த 15வது ஆசிய கோப்பை தொடரில், தான் இழந்திருந்த பேட்டிங் பார்மை மீட்டெடுத்து கொண்டுவந்தார். இந்தத் தொடரில் மொத்தம் 5 ஆட்டங்களில் 276 ரன்கள் குவித்தார். இதில் இரண்டு அரை சதங்கள் ஒரு சதம் அடங்கும். இரண்டரை வருட காலம் சதம் அடிக்காமல் இருந்ததற்கு முற்றுப்புள்ளி வைத்ததோடு, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தையும் பதிவு செய்தார்.

ஆஸ்திரேலியாவில் அக்டோபர் நவம்பர் மாதங்களில் நடக்கவிருக்கும் டி20 உலகக் கோப்பைக்கு முன்பாக விராட் கோலி பேட்டிங்கில் நல்ல நிலைக்கு வந்திருப்பது இந்திய அணிக்கு மிகப்பெரிய நல்ல விஷயம். இந்திய அணி உலகக் கோப்பையை வெல்லுவதற்கான வாய்ப்பு சதவீதத்தை விராட் கோலி திரும்பி வந்திருப்பது அதிகரிக்கிறது.

இந்த டி20 உலகக் கோப்பைக்கு முன்பாக இந்திய அணி உள்நாட்டில் ஆஸ்திரேலியா மற்றும் சவுத் ஆப்பிரிக்கா அணிகள் உடன் தலா 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இதில் முதலாவதாக ஆஸ்திரேலியா அணியுடனான டி20 தொடரின் முதல் போட்டியில் இன்று பஞ்சாப் மாநிலத்தில் மொகாலி நகரில் விளையாடுகிறது.

சமீப காலங்களில் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சில் சுழற்பந்துவீச்சாளர் ஆடம் ஜாம்பாவின் பந்துவீச்சு மிக முக்கியமானதாக இருந்து வருகிறது. கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய அணி டி20 உலகக் கோப்பையை கைப்பற்றியதில் இவரது பந்துவீச்சு ஒரு மிக முக்கிய காரணமாக இருந்தது. இவரது பந்து வீச்சில் விராட் கோலியின் பேட்டிங் பெரிய வெற்றிகரமாக இருந்தது இல்லை. சமீப காலங்களில் நிறைய முறை இவரிடம் விராட்கோலி ஆட்டமிழந்து இருக்கிறார். ஐபிஎல் தொடரில் இருவரும் ஒரே அணியில் இருந்திருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் விராட் கோலியின் இளம் வயது பயிற்சியாளர் ராஜ் குமார் சர்மா இதைப் பற்றி பேசி இருக்கிறார். அவர் கூறும் பொழுது “ஆடம் ஜாம்பாவின் நல்ல பந்துகளுக்கு விராட்கோலி மதிப்பளித்து விளையாட வேண்டும். அவர் தவறி வீசும் பந்துகளை மட்டுமே தாக்கி விளையாட வேண்டும். ஜாம்பாவை சமாளிப்பதில் விராட் கோலி ஒரு சம நிலையைக் கண்டறிய வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

இதற்கடுத்து விராட் கோலியின் பேட்டிங் அணுகுமுறை எப்படி அமையும் என்பதையும் பேசியிருக்கிறார். இது பற்றி அவர் கூறும் பொழுது ” விராட்டின் ஸ்டிரைக் ரேட் இந்திய தொடக்க ஆட்டக்காரர்கள் என்ன மாதிரியான தொடக்கம் கொடுக்கிறார்கள் ரோகித்சர்மா என்ன மாதிரியான பேட்டிங் பார்மில் இருக்கிறார் என்பதை பொறுத்தே அமையும். நீங்கள் எப்பொழுதும் பிளான் பி வைத்திருக்க வேண்டும். அப்பொழுதுதான் தொடக்க வீரர்கள் தவறும் பொழுது தாக்கி ஆட முடியாத சூழ்நிலையில், நிலைமைகளை ஆழமாக பார்த்து பேட் செய்ய முடியும். இதைத்தான் விராட்கோலி செய்கிறார். இதுதான் அவரை இந்த கிரிக்கெட் வடிவத்தில் ஒரு மேட்ச் வின்னர் ஆக ஆக்கியது” என்று கூறியிருக்கிறார்.