இப்படி டீம் எடுத்தால் எப்படி? – ரவி சாஸ்திரி விளாசல்!

0
91
Ravi shasthri

தற்போது நடந்து கொண்டிருக்கும் 15ஆவது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் இலங்கை என்று அடுத்தடுத்து இந்திய அணி தோல்விகளை தழுவி ஏறக்குறைய இறுதிப் போட்டிக்கான வாய்ப்பில் இருந்து வெளியேறி விட்டது என்றே கூறலாம்.

இந்திய அணியின் இந்த வெளியேற்றம் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மட்டும் அல்லாமல் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்களையும் மிகுந்த ஏமாற்றமடைய செய்திருக்கிறது. இந்திய அணியில் ஆடும் அணிக்கான வீரர்களின் தேர்வு பலரையும் பல குழப்பங்களை அடையச் செய்திருக்கிறது.

- Advertisement -

முதல் போட்டியில் ரிஷப் பண்ட் வெளியே இருந்தார் தினேஷ் கார்த்திக் உள்ளே இருந்தார். அதற்கு அடுத்த ஆட்டத்தில் இருவரும் உள்ளே இருந்தார்கள். அதற்கு அடுத்த ஆட்டத்தில் ரிஷப் பண்ட் உள்ளே இருந்தார் தினேஷ் கார்த்திக் வெளியே இருந்தார். பிறகு சூப்பர் ஃபோர் சுற்றில் முதல் ஆட்டத்தில் ரவி பிஷ்னோய் உள்ளே இருந்தார். ஆனால் அடுத்த ஆட்டத்தில் அவர் வெளியே போய் அஸ்வின் வந்தார்.

இது மட்டும் இல்லாமல் வேகப்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கக் கூடிய துபாய் மைதானங்களில் விளையாடும் இந்திய அணி 3 வேகப்பந்து வீச்சாளர்களோடு மட்டுமே தொடரின் ஆரம்பத்தில் வந்தது. ஹர்திக் பாண்டியா நான்காவது வேகப்பந்து வீச்சாளராக அணியில் இருந்தார். யாராவது ஒரு வேகப்பந்துவீச்சாளர் அன்றைய போட்டியில் விளையாட முடியாமல் போனால், ஒரு கூடுதல் சுழற்பந்து வீச்சாளர் தான் விளையாட வேண்டும் என்ற நிலை இருந்தது. அதற்கு தகுந்தார்போல் ஆவேஸ் கான் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, இந்திய அணிக்கு பின்னடைவு உருவாகி, தற்போது ஆசிய கோப்பை தொடரில் இருந்து வெளியேறும் நிலைக்கு வந்திருக்கிறது.

இதுகுறித்து அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும் பந்துவீச்சாளருமான வாசிம் அக்ரம் இருவரும் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துரையாடினார்கள்.

- Advertisement -

அப்பொழுது ரவி சாஸ்திரி ” நீங்கள் வெற்றி பெற வேண்டி இருக்கும் பொழுது நீங்கள் சிறப்பாக தயாராக வேண்டும். குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர்களின் தேர்வு சிறப்பாக இருந்திருக்க வேண்டும். இங்குள்ள நிலைமைகள் உங்களுக்கு நன்றாக தெரியும் இங்குள்ள ஆடுகளங்கள் பெரிதாக சுழற்பந்து வீச்சாளர்களுக்கு ஒத்துழைக்காது. இப்படி இருக்கும் பொழுது, மூன்று பிரதான வேகப் பந்துவீச்சாளர்களோடு மட்டும் இவர்கள் வந்தது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ஒரு கூடுதல் வேகப்பந்துவீச்சாளர் தேவை. முகமது சமி போன்ற ஒரு வேகப்பந்துவீச்சாளர் வீட்டில் உட்கார்ந்து கொண்டு குதிக்காலை குளிர்வித்து கொண்டிருப்பது சரியான ஒன்றல்ல. இது என்னை திகைக்க வைக்கிறது. ஐபிஎல் தொடருக்கு பிறகு அவரால் வர முடியவில்லை” என்று தெரிவித்தார்.

அப்பொழுது குறுக்கிட்ட வாசிம் அக்ரம் ரவிசாஸ்திரி இடம், அணியை தேர்வு செய்வதில் பயிற்சியாளரின் பங்கு உள்ளதா என்று கேட்டார். அதற்குப் பதிலளித்த ரவிசாஸ்திரி ” அவர் இருப்பார். ஆனால் தேர்வின் ஒரு பகுதியாக இருக்க மாட்டார். அவர் இப்படி ஒரு அணி இருக்கலாம் என்று மட்டும் தான் கூறுவார். ஆனால் அணி தலைவர் தான் இறுதியாக ஒரு அணி எப்படி வேண்டுமோ அப்படி எடுத்துக் கொள்வார். என்னுடைய தேர்வு எப்படி இருந்திருக்கும் என்றால், ஒரு கூடுதல் வேகப்பந்து வீச்சாளர் இருந்திருக்க வேண்டும். அப்படி இல்லாது போனதால் 15, 16 ஆவது ஓவர்களில் சுழற் பந்துவீச்சாளர்கள் வீச வேண்டிய சூழல் உருவாகிறது. இது ஆட்டத்தில் தர்மசங்கடமான சூழ்நிலையை கொண்டுவரும்” என்று தெரிவித்திருக்கிறார்!