எத்தனை முறை சொல்வது? சொன்னா கேட்டாதான? – இந்திய வீராங்கனை தீப்தி சர்மா இங்கிலாந்தில் நடந்ததைப் பற்றி விளக்கம்!

0
1378
Deepti

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் செய்தது. இதில் முதலில் விளையாடிய டி20 தொடரில் இந்திய அணி 1-2 என தொடரை இழந்தது.

இதற்கு அடுத்து நடந்த ஒருநாள் போட்டி தொடர் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணிக்கு மிகவும் முக்கியமானதொரு தொடராக அமைந்தது. காரணம், இந்திய பெண்கள் கிரிக்கெட் அணிக்காக கடந்த 20 வருடங்களாக ஒரு வேகப்பந்து வீச்சாளராக சிறப்பான பங்களிப்பை அளித்து வந்த ஜூலன் கோஸ்வாமி, அந்த ஒருநாள் போட்டி தொடரோடு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார்.

இதன் காரணமாக இந்தத் தொடர் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணிக்கு ஒரு உணர்ச்சிப்பூர்வமான தொடராக மாறியிருந்தது. அவருக்கு மிகச்சிறப்பான பிரியா விடை கொடுக்க வேண்டும் என்று விரும்பினார்கள். அதன்படியே முதல் இரண்டு போட்டிகளையும் வென்று தொடரை கைப்பற்றி இருந்தார்கள்.

ஆனால் ஜூலன் கோஸ்வாமியின் கடைசி சர்வதேச போட்டியான தொடரின் கடைசி போட்டியில் இந்திய அணிக்கு வெற்றி முன்பு மன்கட் ரன் அவுட் என்று சொல்லப்படுகிற முறையில் வந்தது பெரிய சர்ச்சையாகி விட்டது. இது விளையாட்டு உத்வேகத்திற்கு எதிரானது என்று பல தரப்பிலும் இருந்து கடுமையான விமர்சனங்கள் எழ ஆரம்பித்து விட்டது. இங்கிலாந்து ஆண்கள் கிரிக்கெட் அணியில் இந்நாள் வீரர்களான சாம் பில்லிங்ஸ், ஜேம்ஸ் ஆண்டர்சன் போன்றோர் சமூகவலைதளத்தில் கேலியான கருத்துக்களை முன்வைத்து ஆரம்பிக்க, அதற்கு இந்திய வீரர் அஸ்வின் பதிலடி தருவது என்று தொடர்ந்தது.

தற்பொழுது இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி நாடு திரும்பி உள்ளது. சர்ச்சையான அந்த ரன் அவுட்டை செய்த இந்திய வீராங்கனை தீப்தி சர்மா தற்பொழுது இது சம்பந்தமாக களத்தில் என்ன நடந்தது என்று விளக்கமாகக் கூறியிருக்கிறார்.

இது பற்றி அவர் கூறும் பொழுது “இங்கிலாந்து நாட்டில் அவர்களை ஒருநாள் தொடரில் 3-0 என வீழ்த்தி இருக்கிறோம். நிச்சயம் இது சரித்திரம். அந்த ரன் அவுட்டை செய்வதற்கு முன்னால், நாங்கள் அந்த வீராங்கனை இடம் திரும்பத் திரும்ப அவர் வெளியே போய்க் கொண்டிருப்பதை எடுத்துக் கூறினோம். இதுபற்றி நடுவர் இடமும் தெரிவித்து இருந்தோம். ஆனாலும் அந்த வீராங்கனை தொடர்ந்து வெளியே போய்க் கொண்டிருந்தார். எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை. அதனால் கிரிக்கெட் விதிகளுக்கு உட்பட்டு அவரை ஆட்டமிழக்கச் செய்வதுதான் எங்களது திட்டமாக இருந்தது. நாங்கள் எல்லாவற்றையும் விதி மற்றும் வழிகாட்டுதலின் படியே செய்தோம்” என்று விளக்கம் கூறியிருக்கிறார்.

மேலும் தொடர்ந்து பேசிய தீப்தி சர்மா “பாருங்கள் ஒவ்வொரு அணியுமே வெற்றி பெறத்தான் விரும்புகிறது. நாங்கள் ஜூலன்டிக்கு அவர் மறக்க முடியாத ஒரு பிரியா விடையை கொடுக்க விரும்பினோம். அதற்காக எங்களால் முடிந்த அனைத்தையும் செய்தோம். எங்கள் அணியில் ஒவ்வொரு வீரருக்கும் இது உணர்ச்சிகரமான தருணம் என்று நான் நம்புகிறேன். எனவே இதை யாரும் தடுக்க முடியாது. இது மைதானத்திற்கு உள்ளேயும் வெளியேயும் நிகழ்ந்தது. நாங்கள் இனி அவரை மைதானத்தில் இழப்போம். அவருடைய அர்ப்பணிப்பு எங்கள் அனைவருக்கும் போற்றத்தக்கது. அவரது போதனைகளில் இருந்து நாங்கள் கற்றுக் கொள்வோம்” என்று கூறியிருக்கிறார்.