தொடர்ச்சியாக 7 ஓவர்கள் வீசியது ஏன்? – தீபக் சஹர் ஓபன் டாக்!

0
1284

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தொடர்ந்து ஏழு ஓவர்களை எதற்காக வீசினேன் என்று தீபக் சஹர் மனம் திறந்து பேசி இருக்கிறார்.

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் காயம் காரணமாக வெளியில் இருந்த சில இந்திய வீரர்களுக்கு தற்போது மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. கே.எல் ராகுல் தனது உடல் தகுதியை நிரூபித்து மீண்டும் இந்திய அணிக்குள் நுழைந்திருக்கிறார். ஐபிஎல் தொடருக்கு முன்பாக திடீரென காயம் ஏற்பட்ட தீபக் சஹர் கடந்த ஆறு மாத காலமாக எந்தவித கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடவில்லை. தற்போது அவருக்கும் இந்த தொடரில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. மேலும் குல்தீப் யாதவ் மீண்டும் உள்ளே வந்திருக்கிறார்.

தீபக் சஹர் முதல் ஒருநாள் போட்டியில் அபாரமாக பந்து வீசினார். முதல் ஓவரிலிருந்து தொடர்ந்து ஏழு ஓவர்கள் அவர் வீசினார். இதற்கு முன்னர் இதுபோன்று அவர் செய்ததில்லை. மேலும் அந்த ஏழு ஓவர்களில் 29 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினார். இதனால் அவருக்கு ஆட்டநாயகன் விருதும் கொடுக்கப்பட்டது.

போட்டி முடிந்த பிறகு பேட்டி அளித்த அவர் எதற்காக தொடர்ந்து ஏழு ஓவர்களை வீசினேன் என்று பதில் அளித்தார். “ஒவ்வொரு முறையும் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பும் பொழுது அந்த போட்டியில் நல்ல ரன்கள் அல்லது முக்கியமான விக்கெட்டுகள் என ஏதேனும் ஒன்றில் பங்களிப்பை கொடுத்தால் அடுத்தடுத்த போட்டிகளில் அது நல்ல மனநிலையை கொடுக்கும். கிட்டத்தட்ட ஆறு மாதம் காலங்கள் நான் எந்த கிரிக்கெட் போட்டியிலும் விளையாடாமல் வெளியே இருந்தேன். முதல் சில மாதங்கள் மனதளவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. மீண்டும் எப்போது கிரிக்கெட் போட்டிகளை விளையாடுவேன் என்று ஏங்கினேன்.

காயத்திலிருந்து மீண்டு வந்த பிறகு முதல் நாள் பயிற்சியில் தொடர்ந்து ஆறு ஓவர்கள் வீசினேன். அது எனக்கு நிறைய நம்பிக்கையை கொடுத்தது. எனது பங்குவீச்சிலும் சில நுணுக்கங்களை நான் மாற்றிக் கொண்டேன். இந்த போட்டியில் தொடர்ந்து ஏழு ஓவர்கள் வீசினேன். எனது உடல் தகுதி தற்போது நல்ல நிலையில் இருக்கிறது. கேஎல் ராகுல் இடம் நான் சென்று பந்து நன்றாக ஸ்விங் ஆகிறது. இன்னும் சில ஓவர்களை வீசுகிறேன் என்று கேட்டேன். அப்போது எனக்கு அனுமதி கொடுத்தார். ஆகையால் ஐந்து ஓவர்கள் மட்டுமே வீசுவதற்கு திட்டமிட்டு இருந்த நான் ஏழு ஓவர்கள் வரை வீசினேன். எனது உடல் தகுதியும் அதற்கு ஒத்துழைத்தது. டி20 உலக கோப்பை தொடரில் இடம் பெறுவது என் கையில் இல்லை. நன்றாக செயல்படுவதற்கு காத்திருக்கிறேன். இதனை கருத்தில் கொண்டு தேர்வு குழு அதிகாரிகள் தான் முடிவு செய்ய வேண்டும்.” என்றும் மனம் திறந்து பேசினார்.

ஜிம்பாப்வே மற்றும் இந்தியா இரு அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி ஹரரே மைதானத்தில் வருகிற ஆகஸ்ட் 20ஆம் தேதி நடைபெற இருக்கிறது.