“எப்படியா உனக்கு எல்லாமே வருது? உன்ன பார்த்தா பொறாமையா இருக்குதுயா!” – அஷ்வின் சக வீரர் பற்றி ஆச்சரியம்!

0
3195
Ashwin

இன்றைய கிரிக்கெட்டில் பல வீரர்களால் மிகவும் புத்திசாலித்தனமான வீரர் என்று புகழப்படக்கூடிய வீரராக இருப்பவர் இந்தியாவின் தமிழகத்தைச் சேர்ந்த சுழற் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின். அப்படிப்பட்ட அஷ்வினே தனக்கு ஒரு வீரரை பார்த்து மிகவும் பொறாமையாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

இங்கிலாந்து ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஐந்து போட்டிகள் கொண்ட ஆசஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் சில நாட்களுக்கு முன்பு இங்கிலாந்தில் நடைபெற்று முடிந்தது!

- Advertisement -

இந்தத் தொடரில் முதலில் நடைபெற்ற இரண்டு போட்டிகளை ஆஸ்திரேலியா வென்று தொடரில் சிறப்பான முன்னிலை பெற்று இருந்தது. எப்படியும் இந்த முறை 22 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா கைப்பற்றும் என்று அனைவரும் நினைத்திருந்தனர்.

ஆனால் இதற்கு அடுத்து இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணி நிர்வாகம் வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் கிறிஸ் வோக்ஸ் மற்றும் மார்க் வுட் இருவரையும் அணிக்குள் கொண்டு வந்தது. அதற்கு அடுத்த போட்டியை வென்று, அதற்கு அடுத்த போட்டியில் மிகச் சிறப்பாக விளையாடியும் டிரா ஆக, கடைசி போட்டியின் இறுதி நாளில் அபாரமாகப் பந்துவீச்சில் செயல்பட்டு போட்டியை வென்று தொடரை சமன் செய்தது.

தொடரின் ஆரம்பத்தில் இரண்டு போட்டிகளில் தோற்று பின்தங்கி இருந்து, பின்பு மீண்டு வந்து இங்கிலாந்து அணி தொடரை சமன் செய்தது இதுவரை நடைபெற்ற ஆசஸ் தொடர்களில் இந்த தொடரை மிகவும் சிறப்பான ஒன்றாக மாற்றி இருக்கிறது.

- Advertisement -

இந்தத் தொடரில் கிறிஸ் வோக்ஸ் பற்றி பேசி உள்ள அஸ்வின் “எனக்கு இவரைப் பார்க்கும் பொழுதுதான் மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு வீரர் எப்படி இங்கிலாந்து அணிக்கு உள்ளே வெளியே என்று போயும் வந்தும் கொண்டே இருந்தார். வேறு எந்த அணியாக இருந்தாலும் பிளேயிங் லெவனில் முதல் மூன்று வீரர்களில் ஒருவராக இருந்திருப்பார்.

இவருக்கு உள்ளங்கால் முதல் உச்சம் தலை வரை கிரிக்கெட் ஊறிப் போய் இருக்கிறது. இவரைப் பார்க்கும் போதெல்லாம் “எப்படியா உனக்கு மட்டும் எல்லாம் வருது?’ என்று பொறாமையாக இருக்கும். அப்படியான வீரர் இவர்.

ஏன் இப்படி சொல்கிறேன் என்றால், இவர் பிறவியிலேயே ஒரு தடகள வீரர் போன்றவர். இவர் பந்து வீச ஓடி வருவதே அவ்வளவு அழகாக இருக்கும். இவருக்கு சிறுவயதிலிருந்தே யாராவது ஓடுவதற்கு பழக்கி கொடுத்தது போல இருக்கும். மேலும் இவருடைய ஸ்பெல்லை வீசி முடித்ததும், இவரைப் பார்த்தால் கூட, இவரிடம் களைப்பே தெரியாது. மிகவும் சுறுசுறுப்பாக இருப்பார். அபாரமாக த்ரோ அடிப்பார். மேலும் பேட்டிங்கில் நல்ல டைமிங்கும் வைத்திருக்கக்கூடிய வீரர்.

இதற்கு முன்னால் இங்கிலாந்து அணியில் ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் ஸ்டூவர்ட் பிராட் இருவரும் இவரைப் போலவே மணிக்கு 130, 135 கிலோ மீட்டர் பந்து வீசுகின்ற காரணத்தாலும், மேலும் இடது கை வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் என்ற இடத்தில் சாம் கரன் வந்ததாலும், இவருக்கு அணியில் இடமில்லாமல் போயிருக்கிறது.

ஆனால் இப்பொழுது ஸ்டூவர்ட் பிராட் ஓய்வு பெற்றிருக்கும் பொழுது, இனி இவருக்கு அணியில் நிரந்தர இடம் உண்டு என்று தெரிகிறது. வேறொரு வகையில் யோசித்துப் பார்த்தால் இவர் நிரந்தரமாக அணியில் இருந்தால், இங்கிலாந்தின் பேட்டிங் லைன் அப் மிகவும் நீளமாகிவிடும் என்று ஒரு பக்கம் பயமாகவும் இருக்கிறது!” என்று கூறியிருக்கிறார்!