இவரால் எப்படிங்க முடியும்? “நேற்று மேக்ஸ்வெல் செய்ததை பாகிஸ்தானுக்கு இவர் செய்ய வேண்டும்!” – ஷாகித் அப்ரிடி ஆச்சரியமான கருத்து!

0
2073
Afridi

நடப்பு உலககோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக பாகிஸ்தான் அணி தோற்றுவதில் இருந்து, இந்த உலகக் கோப்பை தொடரை சுற்றி பாகிஸ்தான் அணி குறித்தான பேச்சுகள் மட்டும்தான் இருந்து வருகிறது.

அந்த அளவிற்கு பாகிஸ்தான் அணியின் ஒட்டுமொத்த கிரிக்கெட்டையும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தோல்வி பாதிப்படைய வைத்திருக்கிறது. விமர்சனங்கள் பல முனைகளில் இருந்து வந்து கொண்டிருக்கின்றன.

- Advertisement -

பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர்களில் முகமது யூசுப் மட்டுமே அணிக்கு ஆதரவான கருத்தை முன்வைத்து பேசி இருக்கிறார். மற்ற எல்லா முன்னாள் வீரர்களுமே பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் மற்றும் பாகிஸ்தான் அணி, கேப்டன் என்று எல்லோரையும் விமர்சன வட்டத்திற்குள் கொண்டு வந்தே இருக்கிறார்கள்.

இது மட்டும் இல்லாமல் சில காலமாக பாகிஸ்தான் அணிக்குள் என்ன மாதிரியான செயல்பாடுகள் இருந்து வருகிறது? அணிக்குள் என்ன மாதிரியான அரசியல் இருக்கிறது? என்பது குறித்து, பல திடுக்கிடும் தகவல்களை முன்னாள் வீரர்கள் வெளிப்படுத்தி வருகிறார்கள்.

இதற்கு உச்சமாக உலகக் கோப்பை தொடரின் நடுவில் கேப்டனாக பாபரை நீக்கினால் கூட தவறு கிடையாது என்ற கருத்துக்கள் முன்வைக்கப்படுகிறது. மேலும் பாகிஸ்தான் கிரிக்கெட் மாற வேண்டும் என்றால் மீதம் இருக்கும் எல்லா ஆட்டத்திலும் பாகிஸ்தான் தோற்க வேண்டும் என்று கம்ரன் அக்மல் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

- Advertisement -

இந்த நிலையில் தற்போது பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சாகித் அப்ரிடி விமர்சனங்களை ஒதுக்கி வைத்து விட்டு, பாகிஸ்தான் அணி அடுத்து என்ன செய்தால் முன்னேற்றம் காண முடியும் என்பது குறித்து கொஞ்சம் ஆரோக்கியமான கருத்தை கொண்டு வந்திருக்கிறார். ஆனால் அவர் சொல்வதை செய்ய முடியுமா? என்பதுதான் சிக்கல்.

நேற்று நெதர்லாந்து அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய அணியின் அதிரடி வீரர் மேக்ஸ்வெல் 40 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். சிறந்த பவர் ஹிட்டிங் மூலமாக அவர் அதிரடியாக ரன்கள் கொண்டு வந்தார். அவரைப் போலவே பாகிஸ்தானில் ஒரு வீரர் விளையாட வேண்டும் என்று அப்ரிடி கேட்டிருக்கிறார்.

இதுகுறித்து அப்ரிடி கூறும் பொழுது “மேக்ஸ்வெல் விளையாடியது மிகச்சிறந்த கிளாஸ் பவர் ஹிட்டிங் இன்னிங்ஸ். எங்கள் அணிக்கும் இதே போல இப்திகார் அகமது ஒரு பங்கை வகிக்க முடியும் என்று நான் நினைக்கிறேன். அவரிடம் அதற்கான திறமைகள் இருக்கிறது. மேலும் இந்தியாவில் பவர் ஹிட்டிங் விளையாடுவதற்கான ஆடுகளங்கள் இருக்கின்றன. தற்பொழுது அனைவரும் சிறப்பாக செயல்பட வேண்டும்!” என்று கூறி இருக்கிறார்!