அடுத்து இந்தியாவுக்கு தான் வரேன், அங்கேயும் செஞ்சுரி அடிப்பேன்.. எங்களோட டார்கெட் இந்தியா – ஸ்டீவ் ஸ்மித் பேட்டி!

0
591

பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடருக்காக ஆஸ்திரேலியா அணி இந்தியாவிற்கு வரவிருக்கிறது. இது பற்றி தனது சமீபத்திய பேட்டியில் பேசியுள்ளார் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித்.

சர்வதேச இருதரப்பு டெஸ்ட் தொடர்கள், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு அங்கமாக நடைபெற்று வருகிறது. அதில் ஒன்றாக, தென் ஆப்பிரிக்கா அணி ஆஸ்திரேலியாவிற்கு சென்று மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றியது.

சிட்னியில் நடந்த மூன்றாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இதில் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் 30வது டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்தார். துவக்க வீரர் உஸ்மான் கவாஜா கடந்த ஆண்டு இருந்த டெஸ்ட் ஃபார்மை இந்த வருடமும் தொடர்கிறார்.

475/4 என இருந்தபோது மழை பெய்துகொண்டே இருந்ததால் டிக்ளேர் செய்தது. நடுவில் ஒருநாள் முழுவதும் ஆட்டம் தடைபட்டது. இந்த மழை பெய்தது தென் ஆப்பிரிக்கா அணிக்கு சாதகமாக அமைந்துவிட்டது. இல்லையெனில் இன்னிங்ஸ் தோல்வியை தழுவ நேர்ந்திருக்கவும் வாய்ப்புள்ளது.

தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரை முடித்துவிட்டு ஆஸ்திரேலியா அணி நேரடியாக இந்தியாவிற்கு வந்து ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாட உள்ளது. 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் தொடர் இந்திய அணிக்கு மிகவும் முக்கியம்.

இந்த டெஸ்ட் தொடரை கைப்பற்றினால் மட்டுமே இறுதிப்போட்டிக்குள் நுழைய முடியும். ஏற்கனவே ஆஸ்திரேலியா அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டது குறிப்பிடத்தக்கது.

ஆனாலும், இந்த டெஸ்ட் தொடரை கைப்பற்றியே தீருவோம். இந்தியாவில் டெஸ்ட் தொடரை வெல்வது எனது கனவு என பேசியுள்ளார் ஸ்டீவ் ஸ்மித். அவர் பேசியதாவது:

“நான் இந்தியாவில் இதுவரை டெஸ்ட் தொடரை வென்றதில்லை. ஆகையால் இது எனக்கு கனவு. எனது சிறந்த ஃபார்மை இந்தியாவிலும் தொடர்வேன். இந்திய அணியை வீழ்த்துவதற்கு எங்களுக்கு கிடைத்து அரிய வாய்ப்பு இது. ஏற்கனவே பைனலுக்கு தகுதி பெற்றுவிட்டோம் என்பதால் அலட்சியமாக இல்லாமல் முழு முனைப்பை காட்டுவோம்.

கடந்த 12 மாதங்கள் எங்களுக்கு சிறப்பாகவே அமைந்திருக்கிறது. அதே ஃபார்ம் இந்தியாவிலும் தொடர வேண்டும். ஹெட், லபுச்சனே, கேரி ஆகியோரின் சிறந்த ஃபார்மும் அணிக்கு கூடுதல் பலத்தை சேர்கிறது. கம்மின்ஸ் நன்றாக எடுத்துச்செல்கிறார்.” என்றார்.