ஜிம்பாப்வே தொடர்: இந்திய அணியில் புதிதாக இணைகிறார் ஆர்சிபி ஆல்ரவுண்டர் – பிசிசிஐ அறிவிப்பு!

0
597

ஜிம்பாவே செல்லும் இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக ஆர்சிபி வீரர் சபாஷ் அகமது சேர்க்கப்பட்டிருக்கிறார்.

வருகிற ஆகஸ்ட் 18ம் தேதி இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதும் மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர் துவங்க இருக்கிறது. இத்தொடரில் இந்திய அணிக்கு கே எல் ராகுல் கேப்டன் பொறுப்பேற்று விளையாடுகிறார். சில இளம் வீரர்களுக்கும் இந்த அணியில் வாய்ப்புகள் கொடுக்கப்பட்டிருந்தது. குறிப்பாக வாஷிங்டன் சுந்தர் சிறிது இடைவேளைக்கு பிறகு மீண்டும் இந்திய அணியில் இடம் பிடித்தார்.

- Advertisement -

இங்கிலாந்தின் கவுன்டி அணியில் விளையாடி வந்த வாஷிங்டன் சுந்தர், 50 ஓவர்கள் தொடரில் பீல்டிங் செய்து கொண்டிருக்கும்போது தவறுதலாக கீழே விழுந்து தோள்பட்டையில் மிகுந்த காயம் ஏற்பட்டுவிட்டது. இதனால் ஜிம்பாவே தொடரில் இருந்து அவர் நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக மேற்கு வங்காளத்தை சேர்ந்த ஆர்சிபி வீரர் சபாஷ் அகமது முதல் முறையாக இந்திய அணிக்கு அழைக்கப்பட்டிருக்கிறார்.

உள்ளூர் போட்டியில் மிகச் சிறப்பாக விளையாடியுள்ள சபாஷ் அகமது 47க்கும் மேல் சராசரி வைத்திருக்கிறார். லிஸ்ட் ஏ போட்டியில் இரண்டு சதங்கள் உட்பட பல அரை சதங்களையும் அடித்திருக்கிறார். 2022 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்கு விளையாடிய இவர், 11 போட்டிகளில் 219 ரன்கள் அடித்து 30 சராசரி வைத்திருக்கிறார். மேலும் மிடில் ஆர்டரில் சில முக்கியமான போட்டிகளில் நன்றாக பங்களிப்பை கொடுத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். மேலும் பந்துவீச்சில் நான்கு விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். வாஷிங்டன் சுந்தரின் ஆல்ரவுண்ட் இடத்தை நிரப்புவதற்கு இவர் சரியான வீரராக இருப்பார் என்பதால் பிசிசிஐ இந்த வாய்ப்பை கொடுத்திருக்கிறது.

முதல்முறையாக இந்திய அணிக்கு அழைக்கப்பட்டது குறித்து மனம் திறந்து பேசிய சபாஷ் அஹமது, “கிரிக்கெட் விளையாடும் ஒவ்வொருவருக்கும் இந்திய அணியின் ஜெர்சி அணிய வேண்டும் என்பது வாழ்நாள் கனவாக இருக்கும். மேற்கு வங்காள கிரிக்கெட் வாரியம் என் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தது. தொடர்ந்து நிறைய வாய்ப்புகள் கொடுத்தது. அங்கு நல்ல பங்களிப்பை கொடுக்க முடிந்ததால் தற்போது இந்திய அணிக்கும் விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. எனக்கு பக்க பலமாக இருந்தால் நிச்சயம் பந்துவீச்சு மற்றும் பேட்டிங் இரண்டிலும் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு பங்களிப்பை கொடுப்பேன். இந்த தருணத்தில் எனது ஆலோசகர் மற்றும் பயிற்சியாளர் இருவருக்கும் நன்றிகளை கூறிக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன். தொடர்ந்து பல ஆண்டுகள் அவர்கள் என் மீது நம்பிக்கை கொண்டு பக்கபலமாக இருந்து வந்தார்கள்.” என உருக்கமாக பேட்டி அளித்தார்.

- Advertisement -