போட்டியில் வெற்றிக் காணவில்லை என்றாலும் இவரின் ஆட்டம் பிரமிக்க வைத்தது – தோல்வி குறித்து ஹைதராபாத் கேப்டன் கேன் வில்லியம்சன் பேசியது

0
231
Kane Williamson about SRH loss against RR

2022-ஆம் ஆண்டிற்கான ஐ.பி.எல் 15-வது சீசனின் ஐந்தாவது போட்டி நேற்று மகாராஷ்ட்ராவின் புனேவிலுள்ள மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் கேன் வில்லியம்சன் தலைமையிலான ஹைராபாத் அணியை, சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி எதிர்கொண்டது!

டாஸ் வென்ற கேன் வில்லியம்சன் எல்லாக் கேப்டன்கள் போலவே பவுலிங் என அறிவிக்க, ராஜஸ்தானிற்கு ஓபனர்களாக களம் புகுந்த பட்லரும் ஜெய்ஸ்வாலும் நல்ல தொடக்கம் தந்தனர். பின்பு கேப்டன் சஞ்சு சாம்சன், படிக்கல், ஹெட்மயர் என எல்லோரும் அதிரடியில் இறங்க இருபது ஓவர்கள் முடிவில் இராஜஸ்தான் 6 விக்கெட்டுகளை இழந்து 210 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 27 பந்துகளில் 55 ரன்கள் குவித்தார்!

பின்பு 211 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி ஆட ஆரம்பித்த ஹைதராபாத் முன்வரிசை ஆட்டக்காரர்களை ஒற்றை இலக்கிலும், ரன்னே இல்லாமலும் வழியனுப்பி வைத்தனர் பிரசித் கிருஷ்ணாவும், ட்ரென்ட் போல்டும். இறுதியில் பவர்-ப்ளேவில் குறைந்த ஸ்கோர் அடித்த அணி என்ற மோசமான சாதனையோடு 61 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது ஹைதராபாத் அணி. ராஜஸ்தான் அணி தரப்பில் பிரசித் கிருஷ்ணா 4 ஓவர்கள் வீசி 16 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றினார். இவரது ஆரம்ப பந்துவீச்சே ஹைதராபாத் பவர்-ப்ளேவிலேயே தோற்றதிற்கு முக்கியக் காரணம்!

தோல்வி குறித்து ஹைதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் “நாங்கள் பந்தவீச்சில் ஆட்டத்தை அழகாகத் தொடங்கினோம். எங்களுக்கு நல்ல வாய்ப்புகளும் இருந்தது. இங்கு எல்லா ஆட்டங்களிலம் புதுப்பந்தில் நல்ல ஸ்விங் கிடைத்திருக்கிறது. நாங்கள் நல்ல அணியாகவே இருந்தோம் ஆனால் சில விசயங்கள் இன்று எங்கள் வழியில் அமையவில்லை. இது நல்ல ஆடுகளம். ராஜஸ்தான் அணி சிறப்பாக விளையாடியது. எங்கள் பக்கத்தில் நாங்கள் சரிசெய்ய வேண்டிய சில பக்கங்கள், விசயங்கள் இருக்கிறது. நோ-பால் விழுவது பொதுவான ஒரு விசயம் அல்ல. இது ஆச்சரியமான ஒன்றாக இருந்தது. அதுவும் நோ-பாலில் விக்கெட் கிடைப்பது நல்லதல்ல. நாங்கள் முன்னேற்றம் அடைய வேண்டிய பகுதிகளை ஆராய்வது முக்கியம். பந்து ஆரம்பத்தில் நகர்ந்தது பேட் செய்ய எங்களுக்குக் கடினமாக இருந்தது. இது ராஜஸ்தான் அணியின் நாள்” என்று கூறினார்.

மேலும் அவர் இந்தியாவின் அதிவேக பந்துவீச்சாளர் உம்ரான் மாலிக் பற்றி கூறும் பொழுது “அவரது பந்துவீச்சு நம்ப முடியாத அளவிற்கு உற்சாகம் தரக்கூடியதாக இருந்தது. அவரது பந்துவீச்சில் அவ்வளவு வேகம் இருக்கிறது. அவர் ஒரு கிரிக்கெட்டராக தொடர்ந்து பரிணாமம் அடைந்து வருகிறார். இளமையானவராகவும் இருக்கிறார். அவர் மதிப்பு மிக்க சில அனுபவங்களை கடந்த வருடம் பெற்றார். அவர் உறுதியாகச் சிறப்பாக வருவார் என்று நம்புகிறேன்” என்று கூறினார்.