“அவர் பந்துவீச்சில் சாதாரணமாகவே ஈர்க்கிறார்” – சக பந்துவீச்சாளர்கருக்கு அஷ்வின் பாராட்டு!

0
141
Ashwin

இன்றைய கிரிக்கெட் உலகில் ஆப் ஸ்பின் பந்துவீச்சை எடுத்துக்கொண்டால், அதில் இருக்கும் பெரும்பாலான வகைகளை வீசக்கூடிய முழுமையான ஒரு ஆப் ஸ்பின் பந்து வீச்சாளர் என்றால் அது இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின்தான்!

அஷ்வின் இதுவரை 86 டெஸ்ட் போட்டிகளில் 162 இன்னிங்ஸ்களில் 442 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை புரிந்திருக்கிறார். ஒரு இன்னிங்சில் 37 முறை 5 விக்கெட்டுகளையும், ஒரு ஆட்டத்தில் ஏழு முறை பத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கிறார். 111 ஒருநாள் கிரிக்கெட் இன்னிங்ஸ்களில் 151 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். ஐம்பத்தி ஏழு டி20 போட்டிகளில் ஐம்பத்தி ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.

அஷ்வின் சிறிது காலத்திற்கு முன்பு இந்திய வெள்ளை பந்து கிரிக்கெட்டிலிருந்து ஒதுக்கப்பட்டு, இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடும் வாய்ப்பை பெற்றார். இடது கை சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா உடன் இணைந்து இவர் வெள்ளை பந்து போட்டிகளில் இடம் பெற்று வந்தார். பின்பு மணிக்கட்டு சுழற்பந்து வீச்சாளர்களான சாகல் மற்றும் குல்தீப் வந்தபிறகு விரல் சுழற்பந்து வீச்சாளரான இவருக்கு வாய்ப்பு அமையவில்லை.

சிறிது காலத்துக்குப் பின் சாகல் குல்தீப் ஜோடி சறுக்கியதற்குப் பிறகு கடந்த டி20 உலகக்கோப்பை அணியில் இவருக்கு இடம் கிடைத்தது. அதற்கடுத்து மீண்டும் கழற்றிவிடப்பட்ட இவருக்கு, இந்த ஆண்டு டி20 உலக கோப்பை இந்திய அணியில் மீண்டும் இடம் கிடைத்திருக்கிறது. ஆஸ்திரேலியாவுடன் சமீபத்தில் நடந்த டி20 தொடரில் அணியில் இருந்தும் இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அதே சமயத்தில் தற்போது தென் ஆப்பிரிக்க அணியுடன் நடந்துவரும் டி20 தொடரின் முதல் ஆட்டத்தில் இவருக்கு விளையாட வாய்ப்பு அளிக்கப்பட்டது. அந்த போட்டியில் 4 ஓவர்கள் வீசி வெறும் 8 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து.

தென்ஆப்பிரிக்கா அணியுடனான இந்த போட்டியில் அஷ்வின் உடன் பந்து வீசிய இன்னொரு சுழற்பந்துவீச்சாளர் இடதுகை பந்துவீச்சாளர் அக்சர் படேல். ஆஸ்திரேலிய அணியுடனான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மூன்று ஆட்டங்களில் மிகப்பெரிய ஸ்கோர் அமைந்த போட்டிகளாக இருந்தது. இப்படிப்பட்ட தொடரில் அக்சர் படேல் பந்து வீச்சு மிகவும் சிறப்பாக இருந்தது. இவர்தான் அந்த தொடரின் தொடர்நாயகன் விருதையும் பெற்று இருந்தார்.

தற்போது அக்சர் படேல் குறித்து உலகின் தலை சிறந்த சுழற்பந்து வீச்சாளரான அஷ்வின் சிலர் பாராட்டு கருத்துக்களை கூறியிருக்கிறார். ” பெரிய ஸ்கோர் கொண்ட தொடரில், அக்சர் படேல் மிகவும் சிக்கனமாக பந்துவீசி விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருந்தார். மிஸ்டரி ஸ்பின், கூக்ளி, ரிஸ்ட் ஸ்பின் என்று சுழற்பந்து வீச்சாளர்கள் கவனம் செலுத்தும் கிரிக்கெட் உலகில், இவர் மரபான இடது கை சுழற்பந்து வீச்சில் மிகச் சிறப்பாக செயல்படுகிறார். இந்த வகையில் இவர் அதிகம் ஈர்த்திருக்கிறார்” என்று தெரிவித்திருக்கிறார்.

மேலும் தொடர்ந்து பேசிய அஷ்வின்
” டி20 கிரிக்கெட்டில் சுழற்பந்து என்று வரும்பொழுது, மிஸ்டரி, கூக்ளி, ரிஸ்ட் ஸ்பின், விரல் ஸ்பின் என்று சிலவைகள் சில நேரங்களில் ட்ரெண்டாக இருக்கும். இது ஒரு சுழற்சி. அடுத்தடுத்து மாறி மாறி மீண்டும் மீண்டும் வரும். நாங்கள் இதை புரிந்து இதற்கேற்றவாறு எங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.