எதிர்பார்த்ததை விட நிறைய போட்டிகள் அமைந்துள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சி – 2022ஆம் ஆண்டிற்கான இந்திய அணியின் போட்டி அட்டவணை இணைப்பு

0
542
Rohit Sharma and Virat Kohli

இந்த ஆண்டை இந்திய அணி வெற்றி கணக்குடன் முடித்துள்ளது. தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில், இந்திய அணி வரலாற்று வெற்றி பெற்றுள்ளது. முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்ற செஞ்சுரியன் மைதானத்தில், இந்திய அணி ருசி பார்த்த முதல் வெற்றி இதுவாகும்.

வெற்றியுடன் 2022ஆம் ஆண்டில் இந்திய அணி காலடி எடுத்து வைக்கிறது. புதிய ஆண்டின் துவக்கத்தில் முதல் முறையாக இந்திய அணியை இரண்டு கேப்டன்கள் ( ஸ்பிளிட் கேப்டன்சி ) வழிநடத்த போகின்றனர். டெஸ்ட் அணியை விராட் கோலியும், ஒருநாள் மற்றும் டி20 அணியை ரோஹித் ஷர்மாவும் வழிநடத்த இருப்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த ஆண்டு இந்திய அணிக்கு கூடுதலாக நிறைய போட்டிகள் அமைந்துள்ளது.

2022 ஆம் ஆண்டிற்கான இந்திய அணியின் போட்டி அட்டவணை

ஜனவரி – தென்னாபிரிக்கா தொடர் :

தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 15ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. பின்னர் ஜனவரி 19 முதல் 23ஆம் தேதி வரை மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை மேற்கொள்ள இருக்கின்றனர்.

பிப்ரவரி – மேற்கிந்திய தீவுகள் தொடர் :

தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தை முடித்தவுடன் இந்திய அணி தனது சொந்த மண்ணிற்கு திரும்புகிறது. இந்தியாவில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் பிப்ரவரி 6ஆம் தேதி முதல் பிப்ரவரி 20ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

பிப்ரவரி மற்றும் மார்ச் – இலங்கை தொடர் :

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் பிப்ரவரி 25 ஆம் தேதி முதல் மார்ச் மாதம் 18ஆம் தேதி வரை இந்தியாவில் நடைபெற இருக்கிறது.

ஏப்ரல் மற்றும் மே மாதம் – ஐபிஎல் தொடர் :

2022 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் நடைபெறும். இரண்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் இந்தியாவில் ஐபிஎல் தொடர் நடைபெற இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜூன் மாதம் – தென் ஆப்பிரிக்க தொடர் :

ஐபிஎல் தொடர் நடந்து முடிந்தவுடன், தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற இருக்கிறது. இந்தத் தொடர் ஜூன் மாதம் 9ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 19ஆம் தேதி வரை இந்திய மண்ணில் நடைபெற இருக்கிறது.

ஜூலை மாதம் – இங்கிலாந்து தொடர் :

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான தொடர் முடிந்தவுடன் இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அங்கே ஒரு டெஸ்ட் போட்டி, 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற இருக்கிறது. ஜூலை மாதம் 1ஆம் தேதி தொடங்கி ஜூலை மாதம் 17ஆம் தேதி வரை மேற்கூறிய அனைத்து போட்டிகளும் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஜூலை மற்றும் ஆகஸ்ட் – மேற்கிந்திய தீவுகள் தொடர்

2019 ஆம் ஆண்டுக்குப் பின்னர் மீண்டும் இந்திய அணி மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அங்கே 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற இருக்கின்றது. இந்தத் தொடர்கள் ஜூலை முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான நாட்களில் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

செப்டம்பர் மாதம் – ஆசிய கோப்பை

2020 1 ஆம் ஆண்டிற்கான ஆசிய கோப்பை தொடர் இலங்கையில் செப்டம்பர் மாதத்தில் நடைபெற இருக்கின்றது. மேற்கிந்தியத் தீவுகள் சுற்றுப் பயணத்தை முடித்த பின்னர் இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. நடப்புச் சாம்பியனான இந்திய அணி மீண்டும் ரோஹித் ஷர்மா தலைமையில் ஆசிய கோப்பையை கைப்பற்றுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

அக்டோபர் மற்றும் நவம்பர் மாதம் – டி20 உலக கோப்பை தொடர் :

ஆசிய கோப்பை நடந்து முடிந்த பின்னர் ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. ரோஹித் ஷர்மா முதல் முறையாக இந்திய அணியை உலக கோப்பை தொடரில் இந்த ஆண்டு இறுதியில் வழிநடத்த இருக்கிறார். நீண்ட ஆண்டுகளாக ஐசிசியின் சர்வதேச கோப்பையை வெல்லாத இந்திய அணி, இந்த முறையாவது வெல்லுமா என்கிற எதிர்பார்ப்பில் அனைத்து இந்திய ரசிகர்களும் அந்த தொடரை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

நவம்பர் மற்றும் டிசம்பர் – வங்கதேச தொடர்

இந்த ஆண்டு இறுதியில் இந்திய அணி வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில் இந்திய அணி வங்கதேசத்திற்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது.