ஐபிஎல் 2022 : மூன்றாவது போட்டியிலும் மண்ணைக் கவ்விய சென்னை ; தோல்விக்கு என்னக் காரணம் ?

0
76
CSK Team 2022

என்னதான் ஆயிற்று சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு? ஐ.பி.எல் வரலாற்றில் இதுவரை இல்லாத முதல் மூன்று ஆட்ட தோல்விகள் ஏன்? மகேந்திர சிங் தோனி திடீரென கேப்டன்சியில் இருந்து விலகியது அணியைப் பாதிக்கிறதா?

முதல் ஆட்டம் கொல்கத்தா அணியுடன் 131 ரன்களுக்கு சுருண்டு, பந்து வீசாத முன்பே படுதோல்வி. இரண்டாவது ஆட்டம் புதுஅணியான லக்னோ அணியுடன் சிறப்பாக பேட்டிங்கில் செயல்பட்டும், பீல்டிங்கில், ஆன்-பீல்ட் கேப்டன்சியில் சொதப்பியதால் மீண்டும் தோல்வி.

தற்போது பஞ்சாப் அணியுடன் பந்துவீச்சில் ஓரளவு சுமாராகச் செயல்பட்டு, பஞ்சாப் அணியை 180 ரன்களுக்குள் மடக்கித் தப்பித்தாலும், மீண்டும் பேட்டிங்கில் சொதப்பி மிக மோசமாய் 126 ரன்களுக்குள் சுருண்டு தோற்றியிருக்கிறது.

தீபக் சாஹர் எதிர்பாரத விதமாய் காயத்தால் ஆட முடியாதது நிறைய பாதிப்புகளை உண்டாக்கி இருப்பது உண்மைதான். மேலும் இரண்டாவது ஆட்டத்தில் 140 கி.மீ மேல் பவர்ப்ளேவில் வீசும் ஆடம் மில்னே காயமடைந்ததும், அதே போட்டியில் காய்ச்சலால் மைக்கேல் ஜோர்டான் ஆட முடியாததும் பெரிய பின்னடைவாய் அமைந்தது.

மேலும் ஒரே அணிக்குள் இரு தலைமையென்பது எப்போதும் சரிவராது. இதுதான் இரண்டாவது ஆட்டத்தில் 19வது ஓவரை சிவம்துபேவை வீசவைத்ததிற்குக் காரணம். இதை சில முன்னாள் வீரர்கள் குறிப்பிட்டு பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.

தீபக் சாஹர் இல்லாததால் பவர்ப்ளேவில் வெற்றிகரமாகச் செயல்பட சென்னைக்கு பந்துவீச்சாளர்கள் இல்லை. ஆடம் மில்னே ஆட முடியாததும் பின்னடைவாய் இருக்கிறது. ஒருபுறம் பீல்டிங் படுமோசமாய் இருக்கிறது. பந்துவீச்சு சுமாராய் அமைந்த இந்த ஆட்டத்தில் மீண்டும் பேட்டிங் பிரச்சினையாகி இருக்கிறது. ஆனால் அணியிலிருக்கும் புதிய வீரர்கள் தவிர எல்லாரும் அனுபவமும் திறமையும் வாய்ந்தவர்கள். இவர்கள் ஒரு அணியாக ஆட்டத்தில் இணைந்து தவறுகளைச் சரிசெய்து கொண்டு, நேர்மறையாக விளையாடினால் மட்டுமே வெற்றி சாத்தியம்!

ஆட்டம் முடிந்து பேசிய சென்னை அணி கேப்டன் ஜடேஜா பார்ம் இல்லாமல் தவிக்கும் ருதுராஜ் பற்றி “நாங்கள் அவருக்கு ஆதரவாக இருந்து பார்ம்க்கு திரும்ப உதவியாக இருப்போம். அவர் சிறந்த தரமான வீரர். அவர் வலிமையாகத் திரும்பி வருவார்” என்று கூறியிருக்கார்!