மாற்று வீரராக களமிறங்கிய மார்னஸ் லபுஷேன் நம்பர் 1 டெஸ்ட் பேட்ஸ்மேனாக முன்னேற்றம் ; விராட் கோஹ்லி பின்னடைவு – வெளியானது புதிய ஐசிசி டெஸ்ட் தரவரிசை

0
647
Virat Kohli and Marnus Labuschagne

2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்தில் நடைபெற்ற ஆஷஸ் டெஸ்ட் தொடரில், ஸ்டீவ் ஸ்மித்துக்கு மாற்று வீரராக ஆஸ்திரேலிய அணியில் நுழைந்தவர் தான் இந்த மார்னஸ் லாபஸ்சாக்னே. பின்னர் தன்னுடைய அபாரமான பேட்டிங் திறமையால் டெஸ்ட் போட்டிகளில் நிரந்தர இடத்தை தக்க வைத்துக்கொண்டார். தற்போது ஆஸ்திரேலிய அணியின் ஒன் டவுன் பேட்ஸ்மேனாக தன்னுடைய ஆதிக்கத்தை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறார்.

தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆஷஸ் டெஸ்ட் தொடரில், முதல் இரண்டு போட்டிகளின் முடிவில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் இவரே முதலிடத்தில் இருக்கிறார். நான்கு இன்னிங்ஸ்களில் மொத்தமாக 228 ரன்கள் குவித்து தன்னுடைய அபாரமான ஃபார்மை உலக அரங்கிற்கு காண்பித்து வருகிறார்.

ஐசிசி டெஸ்ட் தரவரிசை புள்ளி பட்டியலில் முதலிடம்

இதற்கு முன்பே நல்ல டெஸ்ட் தரவரிசை புள்ளிகளை அவர் பெற்றிருந்த நிலையில், சமீபத்தில் நடந்த இரண்டு போட்டிகளில் மிக சிறப்பாக விளையாடிய காரணத்தினால் மேலும் அவரது டெஸ்ட் தரவரிசை புள்ளிகள் கூடியுள்ளது. தற்பொழுது 912 புள்ளிகளுடன் ஜோ ரூட்டை பின்னுக்குத்தள்ளி முதல் இடத்திற்கு அவர் முன்னேறியுள்ளார்.

இதுவரை 20 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடிய அவர், தற்பொழுது ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியது ரசிகர்கள் அனைவரையும் வியக்க வைத்துள்ளது. 20 டெஸ்ட் போட்டிகளில் 6 சதங்கள் மற்றும் 12 அரை சதங்கள் உட்பட 2113 ரன்களை அவர் இதுவரை குவித்திருக்கிறார். டெஸ்ட் போட்டிகளில் அவருடைய பேட்டிங் ஆவெரேஜ் 62.12 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 53.50 என்பது குறிப்பிடத்தக்கது.

மார்னஸ் லாபஸ்சாக்னேவை தொடர்ந்து 897 புள்ளிகளுடன் ஜோ ரூட் 2வது இடத்தில் இருக்கிறார். 884 புள்ளிகளுடன் ஸ்டீவ் ஸ்மித் மூன்றாவது இடத்திலும், 879 புள்ளிகளுடன் கேன் வில்லியம்சன் 4-வது இடத்திலும், 797 புள்ளிகளுடன் ரோகித் சர்மா 5வது இடத்திலும் இருக்கின்றனர்.

ஆறாவது இடத்தில் இதற்கு முன் விராட் கோலி இருந்த நிலையில் அவரை பின்னுக்கு தள்ளி, தற்போது 775 புள்ளிகளுடன் வார்னர் ஆறாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.ஏழாவது இடத்தில் 756 புள்ளிகளுடன் விராட் கோலி இருப்பது குறிப்பிடத்தக்கது.