2022 ஐ.பி.எல் ஏலத்தில் பங்கேற்குபம் தமிழக வீரர்கள் – அணியில் கிடைக்கும் வாய்ப்புகள் பற்றிய முழு அலசல்

0
63
Sharuk Khan and Sai Kishore

2022-ஆம் ஆண்டு ஐ.பி.எல்-ன் 15-வது சீசனுக்கான ஏலத்தில் வாங்கப்பட்டுள்ள, நம் தமிழக வீரர்களில், ஆடும் வாய்ப்பை யார் யார் பெறுவார்கள்? அவர்களின் ஐ.பி.எல்-ன் எதிர்காலம் என்ன? என்பது பற்றி இந்தச் சிறிய கட்டுரையில் மேலோட்டமாய் பார்ப்போம்!

ஹரி நிசாந்த்

இடக்கை துவக்க ஆட்டக்காரரான இவரை சென்னை அணி அவரின் அடிப்படையான 20 இலட்சத்திற்கு தக்க வைத்திருக்கிறது. ருது-உத்தப்பா-அம்பதி என மூன்று இந்திய துவக்க ஆட்டக்காரர்கள் இருக்க, ஆடும் அணியில் வாய்ப்பு என்பது வாய்ப்பே இல்லை என்பதுதான் உண்மை.

பாபா இந்திரஜித்

வலக்கை நடுவரிசை அதிரடி ஆட்டக்காரரான இவரை கொல்கத்தா அணி அடிப்படை விலை 20 இலட்சத்தில் வாங்கியிருக்கிறது. 2022 ரஞ்சி சீசனின் ஒரு போட்டியில் இரண்டு இன்னிங்சிலும் சதமடித்து அசத்தி இருந்தார். விக்கெட் கீப்பிங்பில் அசத்தும் வலக்கை பேட்ஸ்மேன் ஷெல்டன் ஜாக்சனையே வெளியில் வைப்பதால், இவருக்கும் வாய்ப்பு குறைவே.

நாராயணன் ஜெகதீசன்

விக்கெட் கீப்பிங் வலக்கை பேட்ஸ்மேனான இவரை அடிப்படை விலையான 20 இலட்சத்திற்குத் தக்க வைத்திருக்கிறது சென்னை. அம்பதி, உத்தப்பா, கான்வோ போன்றவர்கள் கீப்பிங் செய்வார்கள் என்பதால், விளையாடுவதற்கு இவருக்கும் வாய்ப்பு மிகக்குறைவு.

முருகன் அஷ்வின்

லெக்-ஸ்பின்னரான இவரை 1.6 கோடி கொடுத்து மும்பை எடுத்ததோடு விளையாடவும் வாய்ப்பளித்து வருகிறது. இந்த ஐ.பி.எல் தொடரில் இவருக்கு வாய்ப்பு அதிகம் கிடைக்கும். இவரும் சாதிப்பதற்கான தகுதிகளோடுதான் தெரிகிறார்.

சாய் கிஷோர்

இடக்கை சுழற்பந்து வீச்சாளரான இவரை 3 கோடி கொடுத்து புது அணியான குஜராத் வாங்கியிருக்கிறது. சையத் முஷ்டாக், விஜய் ஹசாரே டிராபியில் இவரது பந்துவீச்சு சிறப்பாகவே இருந்தது. குஜராத் அணியின் ஆடும் லெவனில் இவர் இடம் பெறுவதற்கான வாய்ப்புகள் சுமாராய் இருக்கவே செய்கிறது. வாய்ப்பு கிடைத்தால் சாதிப்பார் என்று நம்பலாம்.

நடராஜன்

யார்க்கர் கிங் என்று இரசிகர்களால் அழைக்கப்படும் நடராஜனை ஹைதராபாத் மீண்டும் 4 கோடிக்கு எடுத்திருக்கிறது. ஹைதராபாத் அணியின் ஆடும் லெவனின் நிரந்தர வீரர் என்றே இவரைச் சொல்லலாம். காயத்திலிருந்து மீண்டு வந்திருக்கும் நடராஜன் பழைய பந்துவீச்சு பார்மை தொடர வேண்டுமென்பதே நம் விருப்பம்.

ரவிச்சந்திரன் அஷ்வின்

தற்போதைய கிரிக்கெட் உலகின் முழுமையான ஒரே ஆப்-ஸ்பின்னர் நம் அஷ்வின்தான். லெக்-ஸ்பின்னர் சாஹலுடன் ஜோடி போட்டுவிட திட்டமிட்டு இவரை 5 கோடிக்கு ஏலத்தில் எடுத்திருக்கிறது ராஜஸ்தான். ஏறக்குறைய ராஜஸ்தானின் எல்லா ஆட்டங்களிலும் ஆடுவார் என்றே கூறலாம்.

தினேஷ் கார்த்திக்

விக்கெட் கீப்பிங் வலக்கை பேட்ஸ்மேனான இவரை பினிசருக்கான இடத்தில் 5.5 கோடி கொடுத்து எடுத்திருக்கிறது பெங்களூர். தினேஷ் கார்த்திக் சமீபத்திய பேட்டிங் “அட” வைக்கும் விதத்தில் சிறப்பாக இருப்பது நல்ல விசயம்.

வாஷிங்டன் சுந்தர்

ஆப்-ஸ்பின், வலக்கை பேட்ஸ்மேனான இவரை 8 கோடி கொடுத்து ஹைதராபாத் அணி அதிக நம்பிக்கை வைத்து எடுத்திருக்கிறது. பேட்டிங்கில் தொடர்ந்து இவர் உழைப்பது, இவரை மேலும் முன்னேற்றும் என்றே சொல்லலாம்.

ஷாரூக்கான்

இந்திய அணிக்காக விளையாடிய தமிழக வீரர்களை விட ஏலத்தில் அதிக விலைக்குப் போனவர். பஞ்சாப் அணி ஏலத்தில் சென்னை அணியோடு மல்லுக்கட்டி 9கோடிக்கு இவரை எடுத்திருக்கிறது. தமிழக அணிக்கு வெள்ளைப்பந்திலும் மட்டுமல்லாது, சிவப்புப் பந்திலும் தன் அதிரடி பேட்டிங்கில் அசத்தி வருகிறார். மிகப்பெரிய எதிர்காலம் இருக்கக்கூடிய வீரர்!