2022 ஐ.பி.எல் ஏலத்தில் பங்கேற்கும் தமிழக வீரர்கள் பட்டாளம் வொளியீடு

0
1547
TN Players in 2022 IPL Auction

இரண்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் இந்தியாவில் ஐபிஎல் தொடர் நடைபெற இருப்பதால் கடந்த இரண்டு ஆண்டுகளை விட இந்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடர் மீதான எதிர்பார்ப்பு தற்பொழுதே எகிற தொடங்கியுள்ளது. மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் இந்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் நடைபெறும் என்று நாம் எதிர்பார்க்கலாம்.

இந்தாண்டு ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் வருகிற பிப்ரவரி மாதம் 12 மற்றும் 13 ஆம் தேதி அன்று பெங்களூரில் நடைபெற இருக்கிறது. அனைத்து அணிகளும் தற்போது தங்களது இருப்பு தொகைக்கு ஏற்றவாறு எந்தெந்த வீரர்களை மெகா ஏலத்தில் கைப்பற்றலாம் என்பது குறித்து ஆலோசனை செய்ய தொடங்கிவிட்டன.

மொத்தமாக 590 வீரர்கள் தங்களுடைய பெயரை இந்த ஆண்டு ஐபிஎல் மெகா ஏலத்தில் இணைத்துள்ளனர். இதில் இந்திய வீரர்களின் எண்ணிக்கை 370 என்பது குறிப்பிடத்தக்கது. அயல்நாடுகளில் இருந்து மொத்தமாக 220 வீரர்கள் தங்களுடைய பெயர்களை இணைத்துள்ளனர். வெளிநாட்டு வீரர்கள் மத்தியில் அதிகபட்சமாக ஆஸ்திரேலியாவில் இருந்து மட்டும் 47 வீரர்கள் தங்களுடைய பெயரை இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழகம் சார்பாக ஐபிஎல் ஏலத்தில் களமிறங்கியிருக்கும் வீரர்கள் பட்டாளம்

தமிழ்நாட்டிலிருந்து ஐபிஎல் தொடரில் வீரர்கள் விளையாடுவது ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஐபிஎல் தொடரின் ஆரம்பத்தில் தமிழக வீரர்கள் மிகக் குறைந்த அளவிலேயே காணப்பட்டனர். ஆனால் அதன் பின்னர் நிறைய தமிழக வீரர்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்க தொடங்கி தங்களுடைய திறமையை நிரூபித்து, பின்னர் இந்திய அணியில் விளையாடியும் அசத்தினர்.

இந்த ஆண்டு ஐபிஎல் மெகா ஏலத்தில் முந்தைய வருடங்களை விட நிறைய வீரர்கள் தங்களுடைய பெயரை இணைத்துள்ளனர். தற்பொழுது அவர்கள் யார் யார் என்று பார்ப்போம்.

ரவிச்சந்திரன் அஸ்வின், வாஷிங்டன் சுந்தர்,தினேஷ் கார்த்திக், ஹரி நிஷாந்த், தங்கராசு நடராஜன், ஷாருக்கான், ஜகதீசன், முருகன் அஸ்வின், சித்தார்த், சாய் கிஷோர்,விஜய் சங்கர், சஞ்சய் யாதவ், சந்தீப் வாரியர்,சாய் சுதர்சன், இந்திரஜித், அருண் கார்த்திக், பெரியசாமி, சிலம்பரசன், பாபா அபராஜித், அலெக்சாண்டர்,கிஷன் குமார், முரளி விஜய்,விவேக் ராஜ்,சோனு யாதவ், அதிசயராஜ் டேவிட்சன், வி கௌதம், எம் முகமது, நிதிஷ் ராஜகோபால் மற்றும் ஜே கௌஷிக்.

மொத்தமாக இருபத்தி ஒன்பது வீரர்கள் தற்போது தமிழகம் சார்பாக இந்தாண்டு ஐபிஎல் மெகா ஏலத்தில் கலந்து கொள்ள இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் நல்ல தொகைக்கு ஏலம் போக வேண்டும் என்பதே தற்போது அனைத்து தமிழக ரசிகர்களின் ஆசையாக உள்ளது. அடுத்த மாதம் இவர்களுள் எந்தெந்த வீரர்கள் எவ்வளவு தொகைக்கு ஏலம் போகிறார்கள் என்பதை நாம் பொறுத்திருந்து பார்ப்போம்.