இந்த இந்திய வீரர் மட்டும் பாகிஸ்தானில் இருந்திருந்தால், இந்நேரம் சர்வதேச போட்டியில் விளையாடி இருந்திருப்பார் – கம்ரன் அக்மல்

0
5826

நடப்பு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் விளையாடி வரும் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த உம்ரான் மாலிக் இந்திய ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து நாட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரிலேயே ஒரு சில போட்டிகளில் களமிறங்கி மிக அற்புதமாக பந்துவீசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

அதன் காரணமாகவே கடந்த ஆண்டு இறுதியில் நடந்து முடிந்த உலகக் கோப்பை டி20 தொடரில் இந்திய அணிக்கு நெட் பவுலராக அவர் விளையாடியது குறிப்பிடத்தக்கது. நடப்பு ஐபிஎல் தொடரிலும் அவர் மிகச் சிறப்பாகவே விளையாடி வருகிறார். உம்ரான் மாலிக் குறித்து ஒரு சில வார்த்தைகளை, பாகிஸ்தானைச் சேர்ந்த நட்சத்திர கிரிக்கெட் வீரர் கம்ரன் அக்மல் தற்பொழுது பேசியிருக்கிறார்.

அவர் மட்டும் இந்நேரம் பாகிஸ்தானில் இருந்திருந்தால்…

ஐபிஎல் தொடரில் உம்ரான் மாலிக்கின் ஆட்டம் ஒவ்வொரு போட்டியிலும் மெருகேறி கொண்டு போகிறது. ஒவ்வொரு பந்தையும் அவர் 150 கிலோ மீட்டர் வேகத்தில் வீசுகிறார். ஒரு சில சமயத்தில் அவர் 155+ கிலோ மீட்டர் வேகத்திலும் தொடர்ச்சியாக பந்து வீசுகிறார். அவர் மாத்திரம் பாகிஸ்தானில் இருந்து இருந்தால் நிச்சயமாக இந்நேரம் சர்வதேச போட்டியில் களம் இறங்கி விளையாடி இருந்திருப்பார் என்று கம்ரன் அக்மல் கூறியுள்ளார்.

மேலும் பேசிய அவர் அவருடைய எக்கானமி விகிதம் அதிகமாக இருந்தாலும் அவருடைய பௌலிங் ஸ்ட்ரைக் ரேட் மிக அற்புதமாக இருக்கின்றது. ஒவ்வொரு போட்டியிலும் விக்கெட் எடுக்கக் கூடிய ஆற்றல் நிறைந்த பந்து வீச்சாளர் அவர். ஒரு சமயத்தில் இந்தியாவில் ஆகச் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் குறைவாக இருந்தனர். ஆனால் தற்பொழுது ஜஸ்பிரித் பும்ரா,முகமது ஷமி,முகமது சிராஜ், நவ்தீப் சைனி தற்பொழுது உம்ரான் மாலிக் என நிறைய பேர் இருக்கின்றனர், அது நல்ல விஷயம் என்றும் பாராட்டு தெரிவித்துள்ளார்.

நடப்பு சீசனில் உம்ரான் மாலிக்

நடப்பு ஐபிஎல் தொடரில் 11 இன்னிங்ஸ்களில் விளையாடி உள்ளார் 15 விக்கெட்டுகளை இதுவரை கைப்பற்றியுள்ளார். இவருடைய பௌலிங் எக்கானமி 9.1 ஆகும். மறுபக்கம் இவருடைய பௌலிங் ஆவெரேஜ் 24.27 மற்றும் பௌலிங் ஸ்ட்ரைக் ரேட் 16.00 மட்டுமே ஆகும்.

ஹைதராபாத் அணிக்கு லீக் தொடரில் இன்னும் மூன்று போட்டிகள் மீதமுள்ள அந்த மூன்று போட்டியிலும் வெற்றி பெறும் பட்சத்தில் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும். எஞ்சியுள்ள 3 ஆட்டங்களில் உம்ரான் மாலிக் தன்னுடைய அணிக்கு எவ்வாறு பங்களிக்க போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.