உமேஷ் யாதவ் இந்தியாவின் லெஜெண்டாக வந்திருக்கவேண்டியவர்; தேர்வுக்குழுவின் அலட்சியத்தால் பாதி கிரிக்கெட் வாழ்க்கையை இழந்தார் – தினேஷ் கார்த்திக் பேட்டி!

0
330

உமேஷ் யாதவ் போன்ற தலைசிறந்த வேகப்பந்துவீச்சாளர் மிகப்பெரிய உயரத்தை எட்டியிருக்க வேண்டும். தேர்வுக்குழுவினரின் அலட்சியத்தால் பாதி கிரிக்கெட் வாழ்க்கையை இழந்து விட்டார் என்று கருத்து தெரிவித்துள்ளார் தினேஷ் கார்த்திக்.

இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் உமேஷ் யாதவ், அணியில் கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிறகும் இந்திய அணியில் தற்போது வரை நிரந்தர இடம் கிடைக்காமல் தவித்து தருகிறார்.

- Advertisement -

ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இவரை எடுக்கவில்லை. மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது, பிளேயிங் லெவனில் எடுக்கப்பட்டார்.

கிடைத்த இந்த ஒரு வாய்ப்பில் அபாரமாக பந்து வீசி 5 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார். இவர் எடுத்த முக்கியமான மூன்று விக்கெட்டுகளால் மட்டுமே இந்திய அணியால் ஆஸ்திரேலியாவை முதல் இன்னிங்சில் 197 ரன்களுக்குள் சுருட்ட முடிந்தது.

இது மட்டுமல்ல, இதற்கு முன்னரும் பலமுறை கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் தாக்கம் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார் உமேஷ் யாதவ். அண்மையில் இந்திய மைதானங்களில் அதிவிரைவாக 100 விக்கெட்டுகளை வீழ்த்திய வேகப்பந்துவீச்சாளர் என்று சாதனையையும் படைத்தார்.

- Advertisement -

இத்தகைய சிறப்புமிக்க வேகப்பந்துவீச்சாளர் மிகப்பெரிய உச்சத்தை அடைந்திருக்க வேண்டும். தேர்வுக்குழுவினரின் அலட்சியத்தால் அணியில் உரிய அங்கீகாரம் கிடைக்காமல் போனது என தினேஷ் கார்த்திக் கருத்து தெரிவித்துள்ளார்.

“உமேஷ் யாதவ் கடந்து வந்த பாதையை நாம் கவனிக்க வேண்டும். சுரங்கப்பாதையில் வேலை செய்பவரின் மகனாக இருந்துகொண்டு பல கடினமான முயற்சிக்குப் பிறகு இந்திய அணிக்குள் இடம் பிடித்திருக்கிறார். 2008 ஆம் ஆண்டு விதர்பா அணிக்காக விளையாடிய இவர், தனது அபாரமான பந்துவீச்சு மூலம் 2010 ஆம் ஆண்டு இந்திய அணிக்குள் இடம் பிடித்தார்.”

“பந்துவீச்சாளருக்கு இவ்வளவு விரைவாக சர்வதேச அணியில் இடம் கிடைப்பது எளிதானது அல்ல. இஷாந்த் சர்மா, முகமது சமி மற்றும் உமேஷ் யாதவ் மூவரும் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சிக்கு பலம் சேர்த்தனர். பும்ரா வந்தபின், உமேஷ் யாதவ் ஓரம் கட்டப்பட்டார்.”

“ஒரு கட்டத்தில் அவர் நன்றாக செயல்பட்டும் கவனிக்கப்படாமல் போனார். 2021ல் நடந்த ஐபிஎல் ஏலத்தின் முதல் சுற்றின்போது அவரை எந்த அணியும் எடுக்க முன்வரவில்லை. அந்த தருணத்தில் உமேஷ் எப்படி மனம் உடைந்திருப்பார் என்று என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.”

“அவரது அசத்தலான பந்துவீச்சிற்கு மிகப்பெரிய உயரத்தை அவர் நிச்சயம் எட்டியிருக்க வேண்டும். தேர்வுக்குழுவால் இவரது பாதி கிரிக்கெட் வாழ்க்கை பாழாகிவிட்டது.” என்று தினேஷ் கார்த்திக் பேசினார்.

2022 ஆம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தின் முதல் சுற்றில் உமேஷ் யாதவ் எடுக்கப்படவில்லை. பின்னர் இரண்டாவது சுற்றில் கொல்கத்தா அணி இவரை எடுத்தது. அதே ஐபிஎல் சீசனில் 12 போட்டிகளில் 16 விக்கெட்டுகள் வீழ்த்தி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார். இவரது சராசரி வெறும் 7.01 மட்டுமே. மீண்டும் இந்திய டி20 அணியிலும் இடம்பிடித்தார் என்பது வரலாறு.