ஐபிஎல்-ல 6000+ ரன்கள் அடிச்சிருக்காரு, ஒவ்வொரு சீசனுக்கும் 500, 600 ரன்கள் அடிக்கிறார்; இந்த இந்திய வீரர் எப்படி டி20 டீம்ல இல்லாம இருக்கலாம்? – முகமது கைஃப் காட்டம்!!

0
4808

ஷிகர் தவான் ஐபிஎல் தொடரில் 6000 ரன்களுக்கும் மேல் அடித்திருக்கிறார். இவரை எப்படி இந்திய டி20 அணியில் எடுக்காமல் இருக்கலாம் என்று முகமது கைஃப் கடுமையாக கேள்வி எழுப்பினார்.

இந்திய அணியின் முன்னணி துவக்க வீரர் ஷிகர் தவான் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுகிறார். கடைசியாக 2021ம் ஆண்டு இலங்கை அணிக்கெதிராக டி20 போட்டியில் விளையாடினார். அதன் பிறகு அவர் டி20 போட்டிகளில் விளையாடவில்லை. தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வருகின்றன. ஆனால் ஐபிஎல் போட்டிகளில் ஒவ்வொரு சீசனுக்கும் சிறப்பாக விளையாடி வருகிறார்.

- Advertisement -

ஹைதராபாத், டெல்லி மற்றும் கடந்த ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணி என ஒவ்வொரு வருடமும் தான் விளையாடும் அணிக்கு அபாரமாக செயல்பட்டு வருகிறார். 2019 ஆம் ஆண்டு ஐ பி எல் தொடரில் 497 ரன்கள், 2020 ஆம் ஆண்டு ஐ பி எல் தொடரில் 600 ரன்கள் மற்றும் 2021 ஆம் ஆண்டில் 587 ரன்கள் என ஒவ்வொரு வருடமும் தவறாமல் நம்பிக்கையாக செயல்பட்டு வரும் இவருக்கு எப்படி இந்திய டி20 அணியில் வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வருகிறது என்று காரசாரமான கேள்வியை முன் வைத்திருக்கிறார் முன்னாள் இந்திய வீரர் முகமது கைஃப்.

“இந்திய அணியின் தேர்வு குழு மற்றும் தலைமை பயிற்சியாளர்கள் என அனைவரும் ஷிகர் தவானின் ஆட்டத்தை நன்கு அறிவர். அவர் டி20 போட்டிகளில் நன்றாக விளையாட மாட்டார் என்று ஒருபோதும் கூறிவிட முடியாது. அவர்கள் யோசிப்பது எல்லாம் இந்த இடத்தில் ஏற்கனவே நிறைய வீரர்கள் இருப்பதால் ஷிகர் தவான் உள்ளே எடுத்து வருவது சரியாக இருக்குமா? என்று மட்டுமே. ஆனால் ஐபிஎல் போட்டிகளில் 6000 ரன்களுக்கும் மேல் அடித்த ஒருவரை இந்திய டி20 அணியில் சரியாக விளையாட மாட்டார் என்று கூறிவிட முடியுமா? முடியாது. நிறைய வீரர்கள் அந்த இடத்திற்கு ஏற்கனவே இருந்தாலும் நன்றாக விளையாடிய ஒருவரை எப்படி மறுத்து வெளியில் அமர்த்த முடியும். அப்படி இருந்தால் தேர்வு குழுவினர் எடுக்கும் முடிவு எப்படி சரியானதா என்ற சந்தேகம் வருகிறது.” என கேள்வி எழுப்பினார்.

“ஷிகர் தவான் மிகச் சிறப்பான வெள்ளை பந்து கிரிக்கெட் வீரர் என்று நான் உணர்கிறேன். ஏனெனில் ஒவ்வொரு ஐபிஎல் தொடரிலும் 500 அல்லது 600 ரன்கள் அடித்து தொடர்ந்து நம்பிக்கை அளித்து வருகிறார். ஒவ்வொரு அணிக்கும் நம்பிக்கை அளிக்கும் துவக்க வீரரே தேவை. ஆகையால் கடந்த டி20 தொடரில் அவர் இல்லை என்பதற்காக அடுத்த தொடரில் அவரை எடுக்கக் கூடாது என்பது இல்லை. மீண்டும் அவருக்கு டி20 தொடரில் வாய்ப்பு கொடுக்க வேண்டும். டி20 உலக கோப்பையிலும் அவர் அபாரமாக செயல்படுவார் என நான் நினைக்கிறேன். என்று ஷிகர் தவானுக்கு ஆதரவாக முகமது கைஃப் ஆதரவு தெரிவித்தார்.

- Advertisement -