சூர்யகுமாருக்கு மாற்றாக பிளேயிங் லெவனில் வரக்கூடிய ஒரே தகுதியான வீரர் இவர் தான் – தினேஷ் கார்த்திக் கருத்து!

0
2412

மூன்றாவது டி20 போட்டியில் இவரை நான் பிளேயிங் லெவனில் பார்க்க வேண்டும். சூரியகுமார் யாதவுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்திருக்கிறார் தினேஷ் கார்த்திக்.

டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக நம்பிக்கை நட்சத்திரமாக இருந்து வரும் சூரியகுமார் யாதவ், டி20 உலக கோப்பையில் 6 போட்டிகளில் 239 ரன்கள் அடித்து அசத்தினார். அதற்கு முன்பு ஆசிய கோப்பையிலும், இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரிலும் அபாரமாக விளையாடி இந்த 2022 ஆம் ஆண்டில் மட்டுமே ஆயிரம் ரன்களை கடந்துள்ளார்.

- Advertisement -

உலக கோப்பை முடித்த கையோடு இந்திய அணி நியூசிலாந்து சென்று டி20 தொடரில் விளையாடுகிறது. முதல் டி20 போட்டி மழை காரணமாக ரத்து ஆனது. இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது.

இதில் சூரியகுமார் யாதவ் 55 பந்துகளில் 111 ரன்கள் அடித்து சர்வதேச டி20 போட்டியில் தனது இரண்டாவது சதத்தை பதிவு செய்தார். தொடர்ச்சியாக அவருக்கு ஓய்வு கொடுக்கப்படாமல் டி20 போட்டிகளில் விளையாட வைக்கப்படுகிறார். அடுத்து வரவிருக்கும் நியூசிலாந்துடனான ஒருநாள் தொடரிலும் அவர் இருக்கிறார்.

இந்நிலையில் மூன்றாவது டி20 போட்டியில் சூரியகுமார் யாதவிற்கு ஓய்வு கொடுத்துவிட்டு சஞ்சு சாம்சனை உள்ளே எடுத்து வந்தால் அது சரியாக இருக்கும் என்று கருத்து தெரிவித்திருக்கிறார். தினேஷ் கார்த்திக் அவர் கூறுகையில்,

- Advertisement -

“தற்போது இருக்கும் இந்திய அணியில் சூரியகுமார் யாதவிற்கு ஒரே மாற்று வீரர் சஞ்சு சாம்சன். சூரியகுமார் யாதவுக்கு ஓய்வு கொடுக்க விரும்பினால், அந்த இடத்தில் சாம்சனை விளையாட வைக்க வேண்டும்.

ஏனெனில் சூரியகுமார் நிச்சயம் ஒருநாள் போட்டிகளிலும் விளையாடுவார். இப்படி தொடர்ச்சியாக விளையாடும் பொழுது அவருக்கு சுணக்கம் ஏற்படலாம். ஆகையால் நடுவில் ஓரிரு போட்டிகளில் ஓய்வு கொடுக்க வேண்டும் என நினைக்கும் பட்சத்தில் இந்த மூன்றாவது போட்டி சரியாக இருக்கும். மற்ற வீரர்கள் அனைவரும் குறைந்த வாய்ப்புகளை பெற்றிருந்தனர். ஆகையால் அவர்கள் தொடர்ந்து விளையாட வேண்டும்.” என்றார்.

மேலும் சஞ்சு பற்றி பேசிய அவர், “நியூசிலாந்து மைதானம் பந்துவீச்சிற்கு சாதகமாக இருக்கும். ஆகையால் சஞ்சு சாம்சன் வேகப்பந்துவீச்சை நன்றாக விளையாடுவார். அதேபோல் ஷார்ட்-பிட்ச் பந்துகளை அபாரமாக எதிர்கொள்வார். இந்த வகையிலும் சாம்சன் சரியான வீரராக இருப்பார்.

ஆனால் ஹர்திக் பாண்டியாவின் எண்ணங்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும். தற்போது தான் அணியின் கேப்டனாக வந்திருக்கிறார். தொடர்ச்சியான வெற்றிகளை கொடுப்பதற்கு விரும்புவார். அந்த வகையில் மிகச்சிறப்பான வீரர்களை மட்டுமே அணியில் வைத்துக் கொள்ள வேண்டும் என நினைப்பார். ஆகையால் அதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.” என்றார்.