3 ஃபார்மட்டிலும் இவர் தான் பெஸ்ட் – விராட் கோலியா? பாபர் அசாமா? கேள்விக்கு முன்னாள் கேப்டன் பதில்!

0
3929

மூன்று பார்மட்டிலும் இவர்தான் பெஸ்ட் என்று கருத்து தெரிவித்திருக்கிறார் முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன்.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மூன்று ஃபார்மட்டிலும் விராட் கோலி, பாபர் அசாம் இருவரில் யார் சிறந்த வீரர்கள்? என்ற போட்டி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முன்னாள் வீரர்கள் பலரும் இதை ஆரோக்கியமானதாக பார்க்கின்றனர்.

கடந்த சில வருடங்கள் விராட் கோலி சிறந்த பார்மில் இல்லை. ஆகையால் இந்த விவாதம் சற்று அமைதியாக இருந்தது. சமீபத்தில் அவரும் மீண்டும் பார்மிற்கு திரும்பி இருக்கிறார். மோசமான டி20 உலககோப்பை செயல்பாட்டில் இருந்து மீண்டு வந்திருக்கும் பாபர் அசாம், இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சதமடித்து மீண்டும் பார்மிற்கு திரும்பி இருக்கிறார். ஆகையால் தற்போது இந்த விவாதம் மீண்டும் எழுந்திருக்கிறது.

பாகிஸ்தான் சென்றுள்ள இங்கிலாந்து அணி மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 657 ரன்கள் குவித்தது.

அதுவும் முதல் நாளில் வரலாற்றுச் சாதனையாக 506/4 ரன்கள் அடித்திருந்தது. நான்கு இங்கிலாந்து வீரர்கள் சதம் விளாசினர். அதிரடியான இங்கிலாந்து அணியை பாகிஸ்தான் சமாளிக்குமா? என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், தக்க பதிலடி கொடுத்திருக்கும் பாகிஸ்தான் அணி மூன்றாம் நாள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 499 ரன்கள் அடித்திருக்கிறது. மூன்று பாகிஸ்தான் வீரர்கள் சதம் விளாசி இருக்கின்றனர்.

கேப்டன் பாபர் அசாம் 136 ரன்கள் அடித்தார். டெஸ்ட் போட்டிகளில் ஆயிரம் ரன்களையும் கடந்து இருக்கிறார். இவரது சராசரி தற்போது 91 ஆக இருக்கிறது. அபாரமாக செயல்பட்ட இவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

இவரது பேட்டிங்கை பாராட்டிய இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன், பாபர் அசாம் தான் மூன்று ஃபார்மட்டிலும் பெஸ்ட் என்று கூறியிருக்கிறார்.

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “மிகச்சிறப்பான சதம். எந்த போட்டியில் எப்படி ஆட வேண்டும் என்று தெளிவாக புரிந்து வைத்திருக்கிறார். மூன்று ஃபார்மட்டிலும் பெஸ்ட் என்று சந்தேகத்திற்கு இடமின்றி கூறுவேன்.” என பதிவிட்டார்.

மைக்கேல் வாகன் தொடர்ச்சியாக இந்திய வீரர்களை வம்புக்கு இழுப்பதை வாடிக்கையாக செய்து வருகிறார். தற்போது மீண்டும் ஒருமுறை பாபர் அசாம் தான் பெஸ்ட் என்று கூறியது கோலி ரசிகர்களை தூண்டியுள்ளது. அவர்களும் இதற்கு தக்க பதிலடி கொடுத்து, வங்கதேசம் டெஸ்ட் தொடரை பொறுத்திருந்து பாருங்கள் என்று ஹிண்ட் கொடுத்திருக்கின்றனர்.