“அவர் மிகவும் புத்திசாலி; அவர் செய்திருப்பது எளிதான விஷயம் கிடையாது!” – இந்திய இளம் வீரரைப் புகழ்ந்த கேப்டன் ரோகித் சர்மா!

0
566
Rohit sharma

இந்திய அணி ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியாமல் வெளியேறி இருந்தாலும் கடைசி ஆப்கானிஸ்தான் அணியுடன் நடந்த போட்டியில் விராட் கோலி மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சதமடித்து தனது நிலையான பேட்டிங் ஃபார்முக்கு திரும்பி வந்திருப்பது நல்ல அறிகுறியாக அமைந்திருக்கிறது.

இதையடுத்து இந்திய அணி ஆஸ்திரேலியாவில் அக்டோபர் நவம்பர் மாதங்களில் நடக்கவிருக்கும் டி20 உலகக் கோப்பைக்கு முன்பாக ஆஸ்திரேலிய அணியுடன் வருகின்ற செவ்வாய்க்கிழமை மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் மோத இருக்கிறது. இதையடுத்து சவுத் ஆப்பிரிக்கா அணியுடன் 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் மோத இருக்கிறது.

இப்போது ஆஸ்திரேலிய அணியுடன் செவ்வாய்க்கிழமை விளையாட இருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி பஞ்சாப் மாநில மொகாலியில் நடக்க இருக்கிறது. இந்தப் போட்டியை பஞ்சாபைச் சேர்ந்த இளம் இடது கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஸ்தீப் சிங் தவறவிட்டு இருக்கிறார்.

அர்ஸ்தீப் சிங் தற்போது பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகடமியில் பயிற்சி மற்றும் உடற்தகுதியில் கவனம் செலுத்தி வருகிறார். இதையடுத்து இவர் சவுத்ஆப்பிரிக்கா அணியுடன் இந்திய அணி மோத இருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு அணிக்கு திரும்புகிறார்.

ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் அணியுடன் முக்கியமான கட்டத்தில் ஒரு கேட்சை தவறவிட்டு சொந்த நாட்டு ரசிகர்கள் அதிக விமர்சனத்திற்கு உள்ளானார். அதே சமயத்தில் பாகிஸ்தான் நாட்டு முன்னாள் வீரர்களின் ஆதரவு அவருக்கு கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இவை தவிர இவர் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணியுடன் முக்கியமான கட்டத்தில் கடைசி ஓவரை மிக பிரமாதமாக பேசியிருந்தார்.

தற்போது இந்த இளம் வீரர் குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறியிருப்பதாவது ” அவர் பந்து வீசிய விதம் மிகவும் சுவாரசியமாக இருந்தது. அவர் தனது சர்வதேச கிரிக்கெட் பயணத்தின் முதல் ஆண்டில் அழுத்தம் மிகுந்த ஆட்டங்களில் பந்தை தரையிறக்கிய விதமும் செயல்பட்ட விதமும் அபாரமானது. இது அவ்வளவு எளிதான விஷயம் கிடையாது. அவர் பந்து வீச்சில் மிகவும் புத்திசாலி மற்றும் எளிமையான திட்டங்களை வைத்திருக்க கூடியவர். எங்களுக்கு ஒரு இடது கை வேகப்பந்து வீச்சாளர் தேவைப்பட்டார், அதற்காக எங்களுக்கு அவர் கிடைத்திருக்கிறார். ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணிக்குள் வந்திருக்கிறார்” என்று கூறினார்.

மேலும் தொடர்ந்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா இதுகுறித்து கூறும்போது ” நாங்கள் எப்போதும் பந்துவீச்சு தாக்குதலில் பல்வேறு வகை பந்துவீச்சு தாக்குதல்களை விரும்பினோம். அது இப்போது எங்களுக்கு முழுவதுமாக கிடைத்து இருக்கிறது. அர்ஸ்தீப் சிங் அணியில் இருப்பதால் அது சாத்தியமாகியிருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.