அவர் மூத்த பந்துவீச்சாளர்தான் ஆனால்? – கவுதம் காம்பீர் சூசக குற்றச்சாட்டு!

0
104
Gambhir

நடைபெற்று வரும் 15வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று இரவு இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே ரசிகர்களுக்கு திக் திக் நிமிடங்களை தந்த மிகப்பெரிய பரபரப்பான ஒரு போட்டி நடந்து முடிந்து இருக்கிறது. வழக்கமாக இந்தியா-பாகிஸ்தான் மோதும் போட்டிகள் எப்படி இருக்குமோ அதைவிட சற்று கூடுதல் பரபரப்போடு இந்த போட்டி அமைந்தது!

இந்திய அணி இந்த முறை எடுத்ததும் தாக்குதல் என்று திட்டத்தோடு பேட்டிங்கை தொடங்கியது. இது ஆரம்பத்தில் வெற்றியை இந்திய அணிக்கு தந்தது. ஆனால் இதுவே பிற்பகுதியில் ரன் சேர்க்க முடியாமல் போனதற்கு காரணமாக அமைந்தது. இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் மற்றும் விராட் கோலி தவிர வேறு யாரும் அணிக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் ரன்களை தரவில்லை. பந்தை அடிக்க போய் விக்கட்டுகளை விட்டுவிட்டார்கள்.

- Advertisement -

இதையடுத்து களம் கண்ட பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர், ரவி பிஷ்னோயின் பந்துவீச்சில் முதலில் வெளியேறினாலும், ஆனால் சிறிது காயத்தோடு விளையாடிய முகமது ரிஸ்வான் 51 பந்துகளில் 71 ரன்கள் குவித்து பாகிஸ்தான் அணிக்கு வெற்றியை அருகில் கொண்டு வந்தார்.

பாகிஸ்தான் அணியுடனான முதல் ஆட்டத்தில் இந்திய அணி இடதுகை வீரரான ரவீந்திர ஜடேஜாவை 4-வது விக்கெட்டுக்கு அனுப்பிவைத்து, ஒரு புது முயற்சி செய்து அதில் வெற்றியும் பெற்றது. அதேபோல் நேற்று பாகிஸ்தான் அணி இடது கை சுழற்பந்து வீச்சாளர் முகமது நவாஸை 4-ஆவது விக்கெட்டுக்கு அனுப்பிவைத்து வெற்றியைப் பெற்றுள்ளது. அவர் 20 பந்துகளில் 42 ரன்களை குவித்து பாகிஸ்தான் அணியின் வெற்றியை மிகவும் எளிதாக்கி விட்டார். இதையடுத்து இறுதி நேரத்தில் ஆசிப் அலி மற்றும் குல்தில் ஷா இருவரும் தேவைக்கு ஆடி பாகிஸ்தான் அணியை வெற்றிபெற வைத்தனர்.

பாகிஸ்தானுக்கு எதிரான நேற்றைய போட்டியில் இந்திய அணியில் இரண்டு லெக் ஸ்பின்னர்கள், சாகல் மற்றும் ரவி பிஷ்னோய் இருந்தனர். தற்போது இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் இடதுகை துவக்க ஆட்டக்காரர் கௌதம் கம்பீர் தனது கருத்தை தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

இதுபற்றி கம்பீர் கூறும்பொழுது ” இன்று பிஷ்நோய் ஒரு அற்புதமான வேலையை செய்தார். இந்த ஆட்டத்தில் கடினமான ஓவர்களை வீசியவர் அவர்தான். ஆட்டத்தின் ஐந்தாவது ஓவரை வீசி பாகிஸ்தான் கேப்டன் விக்கெட்டை வீழ்த்தினார். மேலும் கடினமான ஆட்டத்தில் 18-வது ஓவரை மிகச் சிறப்பாக வீசினார். ஆவேஸ் உடல் தகுதியுடன் இருந்திருந்தால் இன்று பிஷ்னோய் விளையாடி இருக்க மாட்டார். இந்த அணியில் சாகல் மூத்த பந்துவீச்சாளராக இருந்தார். பாகிஸ்தான் அணியுடன் முதல் போட்டியில் விளையாடும் பிஷ்னோய் போன்ற ஒரு வீரர் உடன் ஒப்பிடும் பொழுது, சாகல் எளிதான ஓவர்களையே வீசினார்” என்று, சாகல் சரியாக செயல்படாததை சூசகமாக குறிப்பிட்டார்.

மேலும் நேற்று பாகிஸ்தான் அணியுடன் இந்தியா மோதிய போட்டியில் இந்திய வீரர்கள் யாரையாவது தவற விட்டீர்களா? ஹர்திக் பாண்டியா செயல்பாடு எப்படி? என்ற கேள்விகள் அவரிடம் முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த கம்பீர் ” இந்தியா யாரையும் தவற விட்டதாக நான் நினைக்கவில்லை. இந்தியா எதிர்பார்த்த நாள் நேற்று ஹர்திக் பாண்டியா வுக்கு அமையவில்லை. அது பரவாயில்லை. கிரிக்கெட் மிகப்பெரிய உயரமானது ” என்று கூறினார்!