அம்பத்தி ராயுடு ஓய்வு பெறப் போவதில்லை, அவர் அப்படி சொன்னதற்கான காரணம் இதுதான் – சிஎஸ்கே சிஇஓ அதிரடி

0
395

மும்பை மற்றும் சென்னை அணி என இரண்டிற்கும் சிறப்பாக விளையாடிய வீரர் என்கிற பெருமை அம்பத்தி ராயுடுவுக்கு உண்டு. 2010 முதல் தற்போது வரை கடந்த 13 ஆண்டுகளில் 187 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். 187 போட்டிகளில் மொத்தமாக 4187 ரன்கள் குவித்துள்ளார். அதில் 22 அரை சதங்கள் மற்றும் ஒரு சதம் அடங்கும். ஐபிஎல் தொடரில் இவருடைய பேட்டிங் ஆவெரேஜ் 29.28 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 127.26.ஆகும்.

13 ஆண்டுகளாக விளையாடிக் கொண்டிருக்கும் இவர் 2018 ஆம் ஆண்டு அதிகபட்சமாக ஒரு சீசனில் 602 ரன்கள் குவித்தார். அந்த ஆண்டு சென்னை அணி கோப்பையை வெல்ல இவரது பேட்டிங் மிகப்பெரிய காரணமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. மும்பை மற்றும் சென்னை அணி கோப்பையை வென்ற வருடங்களான 2013,2015,2017(மும்பை அணி) 2018 மற்றும் 2021ல்(சென்னை அணி) அந்த அணிகளுடன் இவர் கோப்பையை பகிர்ந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ஓய்வு பெறப்போவதாக ட்வீட் செய்து அதை டெலிட் செய்த அம்பத்தி ராயுடு

சில மணி நேரங்களுக்கு முன்னர் அம்பத்தி ராயுடு தன்னுடைய டுவிட்டர் கணக்கில் தான் ஓய்வு பெறப்போவதாக ஒரு டிவிட்டை பதிவு செய்தார்.

“நடப்பு ஐபிஎல் தொடர் உடன் நான் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெற்றுக் கொள்கிறேன். இதுவே என்னுடைய கடைசி ஐபிஎல் தொடர். 13 வருடங்களில் இரண்டு சிறந்த அணிகளுக்கு விளையாடிய சந்தோஷமும் பெருமையும் எனக்குள் எப்பொழுதும் இருக்கும். இந்த 13 வருடங்கள் எனக்கு அற்புதமாக கழிந்தது. இந்த நேரத்தில் எனக்கு அற்புதமான பயணத்தை அமைத்துக் கொடுத்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்”, என்று அம்பத்தி ராயுடு ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.
இவ்வாறு பதிவு செய்த ஒரு சில நிமிடங்களில் அந்த ட்வீட்டை அவர் டெலிட் செய்ததும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

அவர் ஓய்வு பெறப் போவதில்லை எங்களுடன் தான் இருக்கப் போகிறார்

இது சம்பந்தமாக சென்னை அணியின் சிஇஓ காசிவிஸ்வநாதனிடம் கேட்கப்பட்ட பொழுது அதை அவர் மறுத்துள்ளார்.
“இல்லை இல்லை அவர் ஓய்வு பெறப் போவதில்லை நடப்பு ஐபிஎல் தொடரில் அவருடைய பங்களிப்பில், அவருக்கு போதுமான திருப்தி இல்லாமல் இவ்வாறு ட்விட்டர் கணக்கில் பதிவு செய்து இருக்கலாம். இது ஒரு உளவியல் விஷயம் என்று எண்ணுகிறேன். அவர் ஓய்வு பெறப் போவதில்லை, எங்களுடன் தான் இருக்கப் போகிறார்” என்று அதிரடியாக கூறியுள்ளார்.

சென்னை அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் கூறிய இந்த செய்தி சென்னை அணி ரசிகர்கள் அனைவரையும் மகிழ்ச்சியடையச் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.