எதிரணிக்கு மட்டுமல்ல இவர் இந்திய அணிக்கும் ஆபத்தானவர்தான் – இந்திய வீரர் பற்றி ஆசிஷ் நெக்ரா அதிர்ச்சி கருத்து!

0
3179
Sky

இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து, ஆஸ்திரேலியாவில் அக்டோபர் நவம்பர் மாதங்களில் நடக்க இருக்கிற டி20 உலகக் கோப்பை தொடருக்கு, கேப்டன் ரோகித் சர்மா மற்றும் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் தலைமையின் கீழ் இந்திய அணி உருவாக்கப்பட்டு வந்தது!

இந்தியா டி20 அணி முன்பு முதலில் பேட் செய்து நல்ல இலக்கை கொண்டுவருவதில் தடுமாறிக் கொண்டிருந்தது. ரோகித் சர்மா ராகுல் டிராவிட் கூட்டணி இதை மாற்றி பேட்ஸ்மேன்கள் அனைவரையும் தைரியமான முறையில் ஆடுவதற்கு தயார் செய்தது. இதனால் இந்திய அணியின் பவர் பிளே ஸ்கோரும், மொத்தச் ஸ்கோரும் அதிகரிக்க ஆரம்பித்தது.

உள்நாட்டில் நியூசிலாந்து, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை என இந்திய அணியின் டி20 தொடர்களில் பெரிய வெற்றிகளைப் பெற்றது. இதற்கு அடுத்து ஐபிஎல் தொடர் முடிந்து நாட்டில் நடந்த தென் ஆப்பிரிக்கா டி20 தொடர், அயர்லாந்து, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் விளையாடிய டி20 தொடர்களில் மிக அபாரமாக செயல்பட்டது.

ஆனால் இதற்கு அடுத்து நடந்த ஆசிய கோப்பையில் எல்லாம் மாறிப் போனது. இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர்களான ஜஸ்பிரித் பும்ரா, ஹர்ஷல் படேல் காயத்தால் விளையாடவில்லை. மேலும் ஆசிய கோப்பையில் நடுவில் காயத்தால் டி20 உலக கோப்பை தொடர் வரை வெளியேறினார் ரவீந்திர ஜடேஜா. தற்போது ஜஸ்பிரித் பும்ராவும் காயத்தால் டி20 உலக கோப்பை இந்திய அணியில் இருந்து வெளியேறி இருக்கிறார். இதெல்லாம் சேர்ந்து கேப்டன் மற்றும் பயிற்சியாளரை பெரும் தலைவலிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

இப்படியான சூழ்நிலையில் இந்திய அணி நிர்வாகத்திற்கு ஆறுதலான ஒரே விஷயம் சூரியகுமார் யாதவின் தைரியமான ஆட்ட அணுகுமுறை இந்திய அணிக்கு சிக்கலான நேரங்களில் பெரிய வெற்றிகளை கொண்டு வந்து கொண்டிருக்கிறது. ஆஸ்திரேலியா மற்றும் சவுத்ஆப்பிரிக்கா அணிகளுடன் அவர் தற்போது ஆடியிருக்கும் டி20 ஆட்டங்கள் மிக அற்புதமானவை.

இப்படி மிகச் சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்து வெளிப்படுத்தி கொண்டிருக்கும் சூர்யகுமார் யாதவ் பற்றி, இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும், தற்போது ஐபிஎல் தொடரில் குஜராத் அணியின் தலைமை பயிற்சியாளரான ஆசிஷ் நெக்ரா பெரிய கவலை ஒன்றை தெரிவித்திருக்கிறார்.

சூரியகுமார் பேட்டிங் பற்றி ஆஷிஸ் நெக்ரா கூறும்பொழுது ” சூரியகுமாரின் பேட்டிங் அணுகுமுறை இருபக்கமும் கூர்மை கொண்ட வாள். ஸ்கோர் போர்டை பற்றிக் கவலைப்படாமல் அவர் தனக்கென ஒரு ஆட்ட முறையை அமைத்துக் கொண்டுள்ளார். ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு வசதியாக தட்டையாக இருக்கும் பொழுது இந்த அணுகுமுறை வேலை செய்கிறது ” என்று கூறினார்.

மேலும் தொடர்ந்து பேசிய ஆசிஷ் நெக்ரா ” ஆனால் இன்று ( நேற்று ) பேட்டிங் செய்வதற்கு மிகவும் கடினமான ஒரு ஆடுகளத்தில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி சீக்கிரமே ஆட்டம் இழந்ததால், சூரியகுமார் விளையாடிய ஆட்ட முறைக்கு அவரும் அவர்களோடு சேர்த்து வெளியே போய் இருக்கும் நிலைமை வந்து இருக்கும். அவர் ஆடும் முறையில் எப்போது வேண்டுமானாலும் விக்கெட் பறிபோய்விடும் ” என்று கவலை தெரிவித்திருக்கிறார்!