சச்சினைவிட இவருக்கு பவுலிங் பண்ண ரொம்ப பயந்தேன்; முன்னாள் இந்திய வீரரை பற்றி பேசிய பிரட் லீ!

0
407

சச்சினை விட இந்த வீரருக்கு பவுலிங் செய்ய மிகவும் பயந்தேன் என்று இந்திய துவக்க வீரர் பற்றி மனம் திறந்து பேசியிருக்கிறார் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வேகப்பந்து பேச்சாளர் பிரட் லி.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அச்சுறுத்தலான பந்துவீச்சாளர்களில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் ஆஸ்திரேலியா வேகப்பந்துவீச்சாளரான பிரட் லீ. இவரை எதிர்கொள்ள பலரும் அஞ்சுவர். சச்சின் டெண்டுல்கர், பிரைன் லாரா, ஜக்குவஸ் காலிஸ், விரேந்திர சேவாக் மற்றும் சமகாலத்தில் விளையாடி வரும் விராத் கோலி என தலைசிறந்த வீரர்களுக்கு பந்துவீசி மிரட்டியுள்ளார்.

- Advertisement -

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சச்சின் டெண்டுல்கரை அதிக முறை ஆட்டமிழக்கச் செய்த வேகப்பந்துவீச்சாளர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. அதிகபட்சமாக 14 முறை சச்சின் டெண்டுல்கரை ஆட்டமிழக்க செய்திருக்கிறார். குறிப்பிடத்தக்க விதமாக 1999 ஆம் ஆண்டு இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர், 2008 ஆம் ஆண்டு இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் மற்றும் 2003 ஆம் ஆண்டு உலகக் கோப்பை என மிக முக்கியமான தொடர்களில் சச்சின் டெண்டுல்கரை அவுட் செய்திருக்கிறார்.

அந்த காலகட்டத்தில் சச்சின் டெண்டுல்கருக்கு பந்துவீச மிகவும் கடினமாக இருந்தது என்று பல நேர்காணல்களில் பிரட் லீ குறிப்பிட்டிருக்கிறார். சமீபத்தில் மற்றொரு இந்திய வீரரை குறிப்பிட்டு இவருக்கு பந்து வீசுவதற்கும் எனக்கு மிகவும் சவாலாக இருந்தது. மேலும் கடினமாக இருந்தது என்றே கூறலாம் என தனது பேட்டியில் குறிப்பிட்டு இருக்கிறார்.

2003 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடரில் பாக்சிங் டே டெஸ்ட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்றது. அப்போது இந்திய அணியின் துவக்க வீரர் விரேந்திர சேவாக் வானவேடிக்கைகளை நிகழ்த்தி 195 ரன்கள் அடித்திருந்தார். இப்போட்டியில் அவர் பிரட் லீயின் பந்துவீச்சை துவம்சம் செய்தது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியை குறிப்பிட்டு பேசிய பிரட்லீ,

- Advertisement -

“மிகவும் கொடூரம், அச்சுறுத்தல் என பல வார்த்தைகளை உபயோகித்தாலும் விரேந்திர சேவாக் பற்றி கூறுவதற்கு சரியானதாக இருக்காது. ஏனெனில் அவரது ஆட்டம் அப்போது யூகிக்க முடியாத அளவிற்கு இருந்தது. சிரித்துக் கொண்டே இருப்பார். ஆனால் பந்தை அவ்வளவு எளிதாக சிக்ஸர் விளாசி விடுவார், டெஸ்ட் போட்டி ஒருநாள் போட்டி என எதையும் மனதில் கொள்ளாமல் முதல் பந்தில் சிக்சர் அடிப்பதற்கு உன்னிப்பாக இருப்பார். அதை அவர் நிகழ்த்தியும் காட்டியிருக்கிறார். அவருக்கு பந்துவீச எனக்கு மிகவும் சவாலாக இருந்தது. என்னால் எந்த பந்தை வீசுவது என்றே யோசிக்க முடியாத அளவிற்கு அவரது பேட்டிங் அப்போது இருந்தது. சரியான லென்த் மற்றும் வேகத்தை பயன்படுத்தி அவரை விக்கெட் எடுத்து விட்டேன் என்று நினைத்தால், அடுத்த நொடியே சிக்சர் அடித்து விட்டு என்னை பார்த்து மென்மையாக சிரிப்பார்.

சேவாக் எங்களுக்கு கிட்டத்தட்ட சச்சின் டெண்டுல்கர் போலவே இருப்பார். அவரது பேட்டிங் சிலநேரம் சச்சின் போலவே இருக்கும். சச்சின் டெண்டுல்கரை அவுட் செய்துவிட்டோம் என நினைத்தால், இன்னொரு சச்சின் டெண்டுல்கராக சேவாக் வந்து நிற்பார். எங்களுக்கு மிகவும் சவாலானதாக இருந்தது. அவரை திட்டமிட்டு எடுத்து விடலாம்; சென்ற போட்டியில் இப்படித்தான் ஆட்டம் இழந்தார் என நாங்கள் ஒன்று நினைத்தால், அவர் அதை எல்லாம் தவிடு பொடியாக்கி வேறொரு விதமாக பவுண்டரி அடிப்பார். மிகவும் சிறந்த வீரராக இருந்தார். சந்தேகம் இன்றி நான் குறிப்பிடுவேன்.” என்று சேவாக் பற்றி புகழாரம் பேசியிருக்கிறார் பிரட் லீ.