பெங்களூர் அணிக்காக திருமணத்தை நிறுத்திவிட்டு வந்தவர்; இன்று இந்திய அணியில்; தினேஷ் கார்த்திக் குறித்து ரஜத் பட்டிதார் நெகழ்ச்சி!

0
4066
DK

மத்தியப்பிரதேச அணிக்காக உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களில் விளையாடி வரும் இருபத்தி ஒன்பது வயதான ரஜத் பட்டிதாரின் கிரிக்கெட் வாழ்க்கை கதை வித்தியாசமானது!

இந்த ஆண்டு அவர் ஐபிஎல் தொடரில் தனது பழைய அணியான பெங்களூரு அணிக்குள் வந்தது ஒரு வித்தியாசமான திருப்புமுனையாக அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் அமைந்தது!

- Advertisement -

கடந்த ஆண்டு பெங்களூர் அணியில் இடம் பெற்று இருந்த ரஜத் பட்டிதாரை இந்த ஆண்டு பெங்களூர் அணி நிர்வாகம் மெகா ஏலத்தில் வாங்கவில்லை. இதைவிட பெரிய துயரமாக அவரை யாருமே வாங்கவில்லை. இத்தனைக்கும் அவரது அடிப்படை விலை வெறும் 20 லட்ச ரூபாய்.

இந்த நிலையில்தான் பெங்களூர் அணிக்காக வாங்கப்பட்ட லவ்னித் சிசோடியா என்ற இளம் இந்திய வீரர் காயம் அடைந்து அணியை விட்டும் தொடரை விட்டும் வெளியேறினார். அப்பொழுது கடைசி நேரத்தில் வேறு வழியில்லாமல் ரஜத் பட்டிதாரை பெங்களூர் அணி நிர்வாகம் தங்கள் அணியில் சேர்த்தது.

ஐபிஎல் ஏலத்தில் யாரும் வாங்காத காரணத்தால் இவரது பெற்றோர்கள் இவருக்கு திருமணத்தை ஏற்பாடு செய்து வைத்திருந்தார்கள், ஆனால் திடீரென்று பெங்களூர் அணியில் இருந்து அழைப்பு வர திருமணத்தை நிறுத்திவிட்டு ஐபிஎல் தொடருக்கு வந்தார். அங்கிருந்துதான் இவரது கிரிக்கெட் வாழ்க்கையில் எல்லாம் மாற ஆரம்பித்தது. கடந்த ஆண்டு பார்த்த இவரது பேட்டிங் போல் இந்த ஆண்டு இல்லை ஏதோ ஒரு துல்லியமும் முதிர்ச்சியும் தெரிந்தது. பிளேஆப் சுற்றில் சதம் மற்றும் அரை சதம் என தொடர்ந்து அடித்த ஒரே வீரர் என்ற சாதனையை படைத்தார்.

- Advertisement -

இதற்கடுத்து ஐபிஎல் தொடரை முடித்துவிட்டு மத்தியபிரதேச அணிக்காக விளையாடி ரஞ்சிக் கோப்பையை வென்றார். அடுத்து இந்திய ஏ அணியில் இடம் பெற்றார். அங்கும் சதம் விளாசி தற்போது தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியில் இடம் பிடித்து இருக்கிறார். இவரது கிரிக்கெட் பயணம் ஒரு வீரர் காயம் அடைந்ததில் இருந்து எங்கெங்கோ மாறி தற்பொழுது இந்திய அணிக்குள் இவரை அழைத்து வந்திருக்கிறது.

இவர் தேர்வு செய்யப்பட்டதை அறிந்த தினேஷ் கார்த்திக் இவரை வாழ்த்தி “உங்களை இந்திய அணியில் பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது நீங்கள் இதற்கு தகுதியானவர்” என்று ட்வீட் செய்திருந்தார். இருவரும் ஒரே அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்திய அணிக்கு அவர் தேர்வானது குறித்தும், தினேஷ் கார்த்திக்கின் வாழ்த்து ட்வீட் குறித்தும் ரஜத் பட்டிதார் நெகிழ்ந்து பேசியுள்ளார். அதில் ” ஐபிஎல் தொடரில் விளையாடி சதமடித்த ஆட்டம்தான் இந்தப் பெரிய வாய்ப்பை வாங்கித் தந்திருக்கிறது. இதெல்லாம் எனக்கு ஒரு கனவாக இருக்கிறது” கூறியிருக்கிறார்.

தினேஷ் கார்த்திக்கின் வாழ்த்து ட்வீட் பற்றி கூறும் பொழுது ” அவரது வாழ்த்து ட்வீட்டை பார்த்தேன். அந்த ட்விட் என்னை மிகவும் மகிழ்ச்சி அடைய வைத்தது. அவருடன் ஐபிஎல் தொடரில் விளையாடியது என்னை அதிகம் நம்பிக்கை அடைய வைத்தது. சொல்லப்போனால் அவர் எனக்கு ஒரு முன்மாதிரி. இந்தியாவுக்காக பல ஆண்டுகள் விளையாடி வரும் அவரது வாழ்த்து எனக்கு மிகவும் முக்கியமானது. அவர் என்னை நன்றாக உணர்ந்தவர்” என்று கூறியிருக்கிறார்!