26 விக்கெட்டுகள் வீழ்த்தி முதல் இடத்தில் இருக்கும் சாஹல் & ஹசரங்கா ; இன்று சாஹல் விக்கெட் எடுக்கவில்லை என்றால் பர்ப்பில் கேப் யாருக்கு தெரியுமா

0
81
Chahal and Hasaranga purple cap

2022 ஐ.பி.எல் பதினைந்தாவது சீசனின் இறுதிபோட்டி இன்று இரவு 8 மணிக்கு குஜராத் மாநில அகமதாபாத் நகரின் நரேந்திர மோதி மைதானத்தில் நடக்கவிரக்கிறது. இந்த இறுதிபோட்டியில் ஐ.பி.எல் தொடரின் புதிய அணியான குஜராத் அணியும், முதல் ஐ.பி.எல் சீசனின் சாம்பியனான ராஜஸ்தான் அணியும் மோதிக்கொள்கின்றன!

நடப்பு ஐ.பி.எல் தொடர் ஐ.பி.எல் கிரிக்கெட் இரசிகர்களுக்கு இதுவரையில் இல்லாத புதுவிதமான அனுபவத்தையே தந்திருக்கிறது. ஏனென்றால் கடந்த 14 வருட ஐ.பி.எல் சீசன்களில் மும்பை , சென்னை அணிகள் இல்லாமல் ப்ளேஆப்ஸ் சுற்று நடந்ததே இல்லை. அதேபோல் இந்திய நட்சத்திர பேட்ஸ்மேன்கள் விராட் கோலி, ரோகித் சர்மா இந்தத் தொடர் போல பேட்டிங்கில் சரிந்ததும் இல்லை. இந்திய இளம் வேகப்பந்து வீச்சாளர்கள் வேறெந்த ஐ.பி.எல் சீசனிலும் வெளிவரவும் இல்லை.

- Advertisement -

தற்பொழுது இந்த ஐ.பி.எல் தொடரில் மேலும் ஒரு புது சுவாரசியமான விசயம் ஐ.பி.எல் இறுதிபோட்டியில் எழுந்துள்ளது. அதிக ரன்கள் அடித்தவர்களுக்கு ஐ.பி.எல் தொடரில் ஆரஞ்ச் தொப்பியும், இறுதிபோட்டிக்குப் பிறகு விருதும், பணமும் கொடுக்கப்படும். அதேபோல் அதிக விக்கெட் எடுத்தவருக்கு பர்பிள் தொப்பியும், விருதும், பணமும் கொடுக்கப்படும்.

அதிக ரன் அடித்தவர்களுக்கான பட்டியலில் யாரும் எட்டிப்பிடிக்க ஆளில்லாத நிலையில் ராஜஸ்தான் அணியின் ஜோஸ் பட்லர் 824 ரன்கள் அடித்து முன்னணியில் இருக்கிறார். இந்த வருட ஐ.பி.எல் தொடரில் இவருக்குத்தான் ஆரஞ்ச் தொப்பியும், விருதும், பணமும் என்பது 100% உறுதியான ஒன்று!

ஆனால் அதிக விக்கெட் எடுத்தவர்களுக்கான பர்பிள் தொப்பி, விருத, பணம் யாருக்கு என்பதில்தான் இப்போது வரை இழுபறி நீடிக்கிறது. தொடரைவிட்டு வெளியேறி விட்ட பெங்களூர் அணியின் வனிந்து ஹசரங்கா 16 போட்டியில் 26 விக்கெட்டுகளை, ஓவருக்கு சராசரியாக 7.54 ரன்களை விட்டுக்கொடுத்து எடுத்திருக்கிறார். தற்பொழுது இறுதிபோட்டியில் விளையாட இருக்கும் ராஜஸ்தான் அணியின் யுஸ்வேந்திர சாஹலும் 16 ஆட்டத்தில் 26 விக்கெட்டுகளையே எடுத்திருக்கிறார். ஆனால் ஓவருக்கு சராசரியாக 7.92 ரன்களை விட்டுக்கொடுத்திருக்கிறார்.

- Advertisement -

அதிக விக்கெட் எடுத்தவர் யார் என்று பார்க்கும் பொழுது விக்கெட்டுகள் சமமாக இருந்தால், அடுத்து சராசரியாக ஒரு ஓவருக்கு விட்டுக்கொடுத்த ரன்களை பார்த்து வழங்குவார்கள். இந்த வகையில் தற்பொழுது சாஹல் ஹசரங்கா உடன் விக்கெட்டுகளில் சமமாகவும், எகானமியில் பின்தங்கியும் இருக்கிறார். சாஹல் பர்பிள் தொப்பியையும், விருதையும், பணத்தையும் பெற, ஒரு விக்கெட் எடுக்க வேண்டும். இல்லையென்றால் நான்கு ஓவர் முழுதாய் வீசி 5 ரன்களுக்குள் மட்டுமே தரவேண்டும். இந்த இரண்டில் ஒன்றைச் சாஹல் செய்யாவிட்டால் பர்பிள் தொப்பி விருது வனிந்து ஹசரங்காவிடம் செல்லும். தற்பொழுது இறுதிபோட்டியில் இந்தப் புது விசயம் சுவாரசியத்தைக் கூட்டியுள்ளது!