தனது விக்கெட் கொண்டாட்டம் யாரைப் போலானது எனும் ருசிகர தகவலைப் பகிர்ந்துள்ள ஆர்.சி.பி வீரர் ஹசரங்கா

0
67
Wanindu Hasaranga Wicket Celebration

ஐ.பி.எல் ட்வென்ட்டி ட்வென்ட்டி தொடரில் நேற்று நடந்த ஆட்டத்தில், கொல்கத்தாஅணியை வீழ்த்தியிருக்கிறது பெங்களூரு அணி. பந்துவீச்சில் சிறப்பாகச் செயல்பட்டு கொல்கத்தா அணியை 128 ரன்களுக்குள் சுருட்டியிருந்தாலும், ஆட்டத்தின் கடைசி ஓவரில் சிரமப்பட்டே பெங்களூர் அணி வென்றது.

இருந்த போதிலும், கெயில்-டிவிலியர்ஸ்-விராட்கோலி, டிவிலியர்ஸ்-விராட்கோலி என்று காலங்காலமாக இரண்டு, மூன்று வீரர்கள் ஆடினால் ஜெயிப்பதும், இல்லையென்றால் தோற்பதுமாக இருந்த பெங்களூர் அணி, இன்றைய ஆட்டத்தில் மூன்றாவது ஓவருக்குள்ளேயே கேப்டன் பாஃப் டூ பிளிசிசும், விராட்கோலியும் ஆட்டமிழந்த போதும், வில்லி, ரூதர்போர்டு, சபாஷ் அகமத், தினேஷ், ஹர்சல் என மற்றவர்கள் விளையாடி வெற்றி பெற்றது அந்த அணிக்கு நல்ல விசயமாகவும், புதிய தொடக்கமாகவும் இருக்கும்.

பெங்களூர் அணியின் பந்துவீச்சை எடுத்துக்கொண்டால், ஆகாஷ் தீப் ஓவருக்கு பத்து ரன்கள் மேல் தந்தாலும் வெங்கடேஷ், ராணா என்று முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். இறுதி பேட்ஸ்மேன்களாக கூட்டு சேர்ந்த பில்லிங்ஸ்-ரசலை ஹர்சல் வெளியேற்றினார். நடுவில் கேப்டன் ஸ்ரேயாஷ், சுனில்நரைன், ஜாக்சன் ஆகிய மிடில்-ஆர்டரை உடைத்து கொல்கத்தா குறைந்த ரன்னுக்கு சுருள முக்கிய காரணமாக இருந்தவர் இலங்கையின் ஹசரங்கா!

கடந்த ஐ.பி.எல் தொடரிலும் பெங்களூர் அணிக்காக வாங்கப்பட்ட ஹசரங்காவுக்கு இரண்டே போட்டிகளில் ஆறே ஓவர்கள் வீசத்தான் வாய்ப்பு கிடைத்திருந்தது. அதிலும் ஓவருக்கு பத்து ரன்களென அறுபது ரன்களை கொடுத்திருந்தார். ஆனால் இந்தத் தொடருக்காகப் பத்துக் கோடிக்கு வாங்கப்பட்டுள்ள ஹசரங்கா பெங்களூர் அணியின் முக்கிய வீரராகவே பார்க்கப்படுகிறார். முதல் போட்டியில் நாற்பது ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட் மட்டுமே எடுத்திருந்தாலும், கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் நான்கு ஓவர் வீசி, இருபது ரன்கள் மட்டுமே கொடுத்து, நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றிதோடு, அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களுக்கான பர்பிள் தொப்பியையும் பெற்றார்.

மேலும் ஆட்டநாயகன் விருதுபெற்ற ஹசரங்கா கூறுகையில், “முக்கியமான நேரத்தில் நான் நான்கு ரன்கள் மட்டுமே எடுத்தேன். ஆனால் பந்துவீச கடினமான பனிப்பொழிவு இருக்கும் சூழலில் சிறப்பாகப் பந்துவீசியிருப்பதும், அணி வெற்றி பெற்றிருப்பதும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆட்டத்திற்கு முன் எந்த அழுத்தத்தையும் நான் எடுத்துக்கொள்வதில்லை. இது என் வெற்றிக்குக் காரணமாக இருக்கலாமென்று நினைக்கிறேன்” என்று.

தொடர்ந்து அவரது விக்கெட் கொண்டாட்டத்தைப் பற்றிக் கேட்டபொழுது “நான் கால்பந்து வீரர் நெய்மரின் இரசிகன். எனவே அவரைப் போல் நானும் விக்கெட் எடுத்தால் கொண்டாடுகிறேன்” என்று தெரிவித்தார்!