இந்திய அணி தேர்வு எப்படி இருக்கு? ஹர்சா போக்லே சொன்ன கருத்து

0
357

நியூசிலாந்துக்கு எதிரான டி20 ஒருநாள் அணி மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளுக்கான டெஸ்ட் அணி என இரவு 3 அணியை பிசிசிஐயின்  புதிய தேர்வு குழு அறிவித்துள்ளது. இந்த நிலையில் அணி தேர்வு குறித்து கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்சா போக்லே வெளியிட்டுள்ள கருத்தை தற்போது பார்க்கலாம்.

ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடி வரும் சர்பிராஸ் கானுக்கு டெஸ்ட் அணியில் இடம் கிடைக்கவில்லை. இதற்கு வருத்தம் தெரிவித்துள்ள ஹர்ஷா போக்லே, உள்ளூர் கிரிக்கெட்டில் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வரும் சர்பிராஸ்க்கு வாய்ப்பு தரப்படாதது மிகவும் கடினமான முடிவு. அவர் தனக்கான வாய்ப்பை உருவாக்கினார். இதற்கு மேல் என்ன செய்தால்தான் அணியில் இடம் கிடைக்கும் என எனக்கு தெரியவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

இதை போன்று டி20 கிரிக்கெட் அணியில் பிரித்விஷா சேர்க்கப்பட்டது தவிர்க்க முடியாதது என்று ஹர்சா போக்லே குறிப்பிட்டுள்ளார். எனினும் ஏற்கனவே இஷான் கிஷன்,ருத்துராஜ் ஆகிய வீரர்கள் உள்ள நிலையில் பிரித்விஷாவுக்கு எப்படி வாய்ப்பு கிடைக்கும் என்பதை பார்க்க ஆவலுடன் இருக்கிறேன் என்று ஹர்சா போக்லே குறிப்பிட்டார்.

அதே போன்று டி20 அணியில் ரோகித் சர்மா விராட் கோலி ஆகியோர் சேர்க்கப்படாதது இறுதி முடிவு போல் தெரியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

டெஸ்ட் அணியில் சூர்யகுமார் சேர்க்கப்பட்டது கவனத்தை ஈர்த்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்திய அணியில் நான்கு பந்துவீச்சாளர்கள் விளையாடினால் மட்டுமே சூரியகுமாருக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.ஜடேஜா இந்திய அணிக்கு நீண்ட காலத்திற்குப் பிறகு திரும்பி இருப்பதாக குறிப்பிட்டுள்ள ஹர்சா, ரஞ்சி ஆட்டத்தில் விளையாட வைத்துவிட்டு பின் இந்திய அணியில் சேர்ப்பது சரியானதாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.