கேப்டன் மித்தாலி ராஜ் ஓய்வு ; இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனை அறிவித்தது பிசிசிஐ

0
139
Mithali Raj Indian womens cricket team

உலக கிரிக்கெட்டில் பெண்கள் கிரிக்கெட் என்பது இன்றும் பெரியளவில் இரசிகர்களை ஈர்த்தோ, பெரியளவில் வணிகத்தைக் கொண்டிருப்பதாகவோ இல்லை என்பதுதான் உண்மை. ஆனால் ஒவ்வொரு கிரிக்கெட் நாடுகளுமே பெண்கள் கிரிக்கெட்டிற்கு முக்கியத்துவம் தரவே செய்கின்றன!

இந்தக் காலக்கட்டத்திலேயே நிலை இப்படி எனும்போது இருபது ஆண்டுகளுக்கு முன்பு பெண்கள் கிரிக்கெட்டின் நிலை கீழேதான் இருந்தது. குறிப்பாக ஆசிய கண்டத்தில் நிலை இன்னும் மோசமாகவே இருந்தது.

இதில் இருபது ஆண்டுகளுக்கு முன்பு இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி வணிகத்தில் உயரத்தில் இருந்தாலும், உடற்தகுதி, பீல்டிங், வேகப்பந்து வீச்சு போன்ற துறைகளில் பின்தங்கிதான் இருந்தது. 1983ஆம் ஆண்டிற்குப் பிறகு ஐ.சி.சி நடத்திய எந்தத் தொடரிலும் இந்திய அணி 2011ஆம் ஆண்டு வரை சாம்பியன் ஆனதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படியான சூழலில் 1999ஆம் ஆண்டு இந்திய மகளிர் கிரிக்கெட்டில் அறிமுகமாகி தொடர்ந்து 23 ஆண்டுகளாக வீராங்கனையாக, கேப்டனாக பங்களித்து வந்த தமிழகத்தைச் சேர்ந்த மிதாலி ராஜ் ஓய்வு பெறுவதாய் அறிவித்திருக்கிறார்.

இவரது ஓய்வை அடுத்து இந்திய அணிக்கான புதிய கேப்டனாக பஞ்சாப்பை சேர்ந்த 33 வயதான ஹர்மன்ப்ரீத் கவுரை கேப்டனாக வருகின்ற இலங்கை அணியுடனான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் நியமித்திருக்கிறது. ஹர்மன் ப்ரீத் கவுர் மூன்று வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் இந்திய அணிக்காக விளையாடும் வீராங்கனை என்பது குறிப்பிடத்தக்கது!