2022 ஐ.பி.எலுக்கு அகமதாபாத் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமனம் – ஏலத்திற்கு முன் வாங்கப் போகும் 3 வீரர்கள் அறிவிப்பு

0
2999
Hardik Pandya Ahmedabad IPL Team Captain

இந்திய அணி தற்போது தென் ஆப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த நிலையில் தொடர் 1-1 என்று சமநிலையில் உள்ளது. மூன்றாவது டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெறும் என்றால் தென்னாப்பிரிக்க மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்றி சாதனை படைக்கலாம். ஒரு பக்கம் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் நடந்து கொண்டு வந்தாலும், ரசிகர்கள் இப்போதே ஐபிஎல் தொடருக்கு தயாராகி வருகின்றனர். இந்த முறை 8 அணிகளுக்கு பதிலாக 10 அணிகள் பங்கேற்கும் என்று முன்னமே பிசிசிஐ அறிவித்துவிட்டது. அகமதாபாத் மற்றும் லக்னோ என்று 2 புதிய அணிகள் புதிதாக ஐபிஎல் தொடரில் சேர்க்கப்பட்டுள்ளன.

வரும் பிப்ரவரி மாதத்தில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான ஏலம் நடைபெறவுள்ளது. ஏலத்திற்கு முன்பு ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக 4 வீரர்களை மட்டும் தக்க வைத்துக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. ஏற்கனவே இந்த நான்கு வீரர்களை தக்க வைத்துள்ளோம் என்று ஒவ்வொரு அணிகளும் அறிவித்துவிட்டன. தற்போது புதிதாக வந்த இரண்டு அணிகளுக்கும் மட்டும் ஏலத்திற்கு முன்பதாகவே 3 வீரர்களை மட்டும் அணியில் எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்த மூன்று வீரர்களில் 2 இந்தியர் மற்றும் ஒரு வெளிநாட்டு வீரர்களை தேர்வு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

தற்போது இரண்டு புதிய அணிகளில் ஒன்றான அகமதாபாத் அணி தக்க வைக்க போகும் மூன்று வீரர்கள் யார் யார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இரண்டு இந்திய வீரர்களாக இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா மற்றும் விக்கெட் கீப்பர் இஷன் கிஷன் ஆகியோரை வாங்க அகமதாபாத் அணி முடிவு செய்துள்ளது. இவர்கள் இருவருமே கடந்த ஆண்டு தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டு வீரராக ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கானை இந்த அணி ஒப்பந்தம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஷித் கான் தான் தற்போது டி20 கிரிக்கெட் டில் மிகச்சிறந்த சுழற்பந்து வீச்சாளர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த அணிக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாக இருப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடரில் இதன் மூலம் முதல் முறையாக ஹர்திக் கேப்டனாக களமிறங்குகிறார். மூன்று மிகவும் திறமை வாய்ந்த வீரர்களை இந்த அணி ஒப்பந்தம் செய்ய உள்ளதால் இப்போதே இந்த அணி குறித்து அதிக எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.