ஹர்திக் பாண்டியா – பென் ஸ்டோக்ஸ்; யார் சிறந்த ஆல்ரவுண்டர்? – ஷேன் வாட்சன் பளிச் பதில்!

0
184
Hardik pandya

ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர்களில், ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் மற்றும் சென்னை அணிகளுக்கு விளையாடி இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமான ஷேன் வாட்சன் மிக முக்கியமான ஒருவர்!

ஷேன் வாட்சன் 207 சர்வதேச போட்டிகளில் விளையாடி அதில் 297 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். மேலும் 10,950 ரன்களையும் குவித்திருக்கிறார். கிரிக்கெட் உலகில் எப்பொழுதுமே வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர்களுக்கு பெரிய எதிர்பார்ப்பும், அணியில் பெரிய மதிப்பும் இடமும் இருக்கும். ஏனென்றால் ஒரு வேகப்பந்துவீச்சாளர் அணிக்கு பல பயன்களை தரக்கூடியவர். இது மட்டுமல்லாமல் ஒருவர் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டராக உருவாவது மிகவும் கடினமான பணி!

இந்த வகையில் எடுத்துக்கொண்டால் தற்போதைய கிரிக்கெட் உலகில் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர்களில் மிகவும் முக்கியமானவர்களாக இருவர்தான் இருக்கிறார்கள். ஒருவர் இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ். மற்றொருவர் இந்திய அணியின் ஹர்திக் பாண்டியா!

இந்தியாவில் நேற்று நடந்து முடிந்த லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில், ஆஸ்திரேலிய லெஜென்ட்ஸ் அணிக்காக விளையாடி வந்த ஷேன் வாட்சனிடம், ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஹர்திக் பாண்டியாவின் தற்போதைய மிகப்பெரிய வளர்ச்சி பற்றியும், அவரை பென் ஸ்டோக்ஸ் உடன் ஒப்பிட்டும் கேள்விகள் கேட்கப்பட்டது.

இந்த இரண்டுக்கும் பதிலளித்த ஷேன் வாட்சன் அதில் ” இந்த நேரத்தில் ஹர்திக் பாண்டியா தனது ஆற்றலின் உச்ச நிலையில் இருக்கிறார். அவர் விளையாடுவதை பார்ப்பது ஒரு விருந்தாகும். வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர்கள் மற்றும் வேகப்பந்து வீச்சாளர்களை பார்ப்பது எனக்கு பிடித்த ஒன்று. அவர்கள் ஆட்டத்தில் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. அவர்களால் ஆட்டத்தில் எந்த நேரத்திலும் பந்துவீச்சு மற்றும் பேட்டிங் மூலம் எதிரணி இடமிருந்து தங்கள் பக்கம் ஆட்டத்தைக் கொண்டுவர முடியும்” என்று கூறினார்.

மேலும் யார் சிறந்த ஆல்ரவுண்டர் என்று தெரிவிக்கும்போது ” ஹர்திக் பாண்டியா இப்பொழுது விளையாடுவதை பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது. டி20 கிரிக்கெட்டை பொறுத்த வரை ஹர்திக் பாண்டியா தற்போது பென் ஸ்டோக்ஸுக்கு மேலே இருக்கிறார். ஹர்திக் பேட்டிங் செய்யும் விதம், அவர் பந்து வீசும் விதம் அவரது பன்முகத் தன்மையில் அவர் தனித்து தெரிகிறார்” என்று கூறியிருக்கிறார்.