ஹர்திக் பாண்டியா மேக்ஸ்வெல் யார் சிறந்த ஆல்ரவுண்டர்? – ரிக்கி பாண்டிங் பதில்!

0
2667
Ricky Ponting

இந்திய கிரிக்கெட்டில் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் என்றால் முதலில் நினைவுக்கு வருவது கபில்தேவ் தான். அதற்குப் பிறகு ஓரளவுக்கு குறிப்பிடும்படியாக வளர்ந்து வந்தது இர்பான் பதான். ஆனால் கபில்தேவ் அளவிற்கு யாரும் இப்பொழுது வரை இல்லை என்று கூட சொல்லலாம். தான் பங்கேற்ற காலம்வரை காயம் என்று ஒரு போட்டிகளில் கூட கபில்தேவ் விலகி இருந்தது கிடையாது. அந்த அளவிற்கு உடற்தகுதியோடு இந்திய அணிக்காக தொடர்ந்து விளையாடியவர்.

இவருக்குப் பிறகு இந்திய கிரிக்கெட்டில் ஒரு வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் என்று கூறினால் அது பரோடா வீரர் ஹர்திக் பாண்டியாதான். ஐபிஎல் தொடர் அணியான மும்பை அணியால் கண்டெடுக்கப்பட்ட இவர், அந்த அணிக்கு ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பான பங்களிப்புகளை தருவதை பார்த்த இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம், இவரை இந்திய அணிக்குள் கொண்டு வந்தது.

- Advertisement -

இந்திய அணிக்குள் வந்த ஹர்திக் பாண்டியாவின் முக்கியத்துவம் உணர்ந்து, அப்போதைய கேப்டன் மகேந்திர சிங் தோனி அவருக்கு அணிக்குள் பல வகைகளில் உதவியாக இருந்து ஊக்குவித்து வந்தார். பின்பு இந்திய அணியின் மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளுக்கும் நிரந்தர வீரராக மாறிய ஹர்திக் பாண்டியா, முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயத்தால் அவதியுற்று, அதற்காக அறுவை சிகிச்சை செய்து, பின்பு கிரிக்கெட்டில் இருந்து கொஞ்ச காலம் ஒதுங்கி இருந்து, அதற்குப் பிறகு ஐபிஎல் தொடருக்கு வந்து, குஜராத் அணியை வெல்ல வைத்து சாம்பியன் ஆக்கி, மீண்டும் இந்திய அணிக்குள் வந்து, தற்சமயம் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

இதேபோல் ஆஸ்திரேலிய அணிக்கு வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் மாடர்ன் கிரிக்கெட் ஷாட்களின் மூலம் அதிரடியான பங்களிப்பை அளித்து வருவதோடு, பார்ட் டைம் ஆப் ஸ்பின்னர் ஆகவும், ஒரு ஆல்-ரவுண்டராக சிறப்பான பங்களிப்பை அளித்து வருபவர் கிளன் மேக்ஸ்வெல். பார்ட் டைம் பந்துவீச்சாளராக இருந்தாலும் கூட சில நேரங்களில் இவரது பந்து வீச்சு மிக முக்கியமான தாக்கத்தை ஆட்டத்தில் ஏற்படுத்தக் கூடியதாக இருக்கிறது. மேலும் இவர் இப்படி பந்து வீசுவதால் கேப்டனுக்கு ஒரு ஸ்பின்னர் இடம் போவதற்கான தேவை உருவாவதில்லை. அணி தேர்வில் நல்ல நெகிழ்வு கிடைக்கிறது.

தற்போது ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மற்றும் லெஜெண்ட் வீரர் ரிக்கி பாண்டிங் இடம் ஹர்திக் பாண்டியா மற்றும் மேக்ஸ்வெல் இருவரில் யார் சிறந்த ஆல்ரவுண்டர் என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. இந்தக் கேள்வி அவரை மிகவும் சிரமப் படுத்தக் கூடிய ஒன்றாக அமைந்துவிட்டது. பின்பு இந்தக் கேள்விக்கான பதிலை நீண்ட விளக்கத்தோடு அவர் கூறினார்.

- Advertisement -

இதுபற்றி ரிக்கி பாண்டிங் கூறும்பொழுது ” ஹர்திக்கின் தொழில் வாழ்க்கையை எடுத்து பார்க்கும் பொழுது, கடந்த சில மாதங்கள் அவருக்கு மிகச்சிறப்பாக அமைந்திருக்கிறது. அவரை அணிக்குள் வைக்கும் விதத்தை பார்க்கும் பொழுது அவர் பந்துவீச்சில் நிறைய தாக்கத்தை உண்டாக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. மேலும் அவர் அணிக்காகவும் ரன்களை அடிக்கவும் வாய்ப்பு இருக்கிறது ” என்று கூறினார்.

அடுத்து அவர் மேக்ஸ்வெல் பற்றி கூறும் பொழுது ” டி20 கிரிக்கெட்டில் மேக்ஸ்வெல் மிகக்குறைவாகவே பந்துகளை சந்திக்கிறார். ஆனாலும் ஹர்திக்கைவிட மேக்ஸ்வெல் ஆஸ்திரேலியாவில் அதிக ரன்கள் அடிப்பார் என்று நினைக்கிறேன். அதே சமயத்தில் மேக்ஸ்வெல் விட ஹர்திக் பாண்டியா அதிக விக்கெட் எடுப்பார் என்று நினைக்கிறேன். அதனால் இது ஒரு டிரா ” என்று இந்த கேள்விக்கான பதிலை சமனில் முடித்து வைத்து இருக்கிறார் ரிக்கி பாண்டிங்!