சென்னை அணியின் தோல்விகளுக்கு இதுதான் காரணம் – ஹர்பஜன் சிங் கருத்து

0
39
MS Dhoni and Harbhajan Singh

இந்த ஐ.பி.எல் சீசனின் சுவாரசியம் என்பதைத் தாண்டி, சாம்பியன் அணிகளான மும்பை, சென்னை அணிகளின் சரிவுதான் பெரிய விசயமாகப் பார்க்கப்படுகிறது. இந்த ஐ.பி.எல் தொடரில் முதல் எட்டு ஆட்டங்களிலேயே மும்பை அணி ப்ளே-ஆப்ஸ் வாய்ப்பை இழந்து விட்டது. சென்னை அணி தனது பத்தாவது ஆட்டத்தில் இழந்திருக்கிறது. ப்ளேஆப்ஸ் வாய்ப்பிற்கு இந்த இரு சாம்பியன் அணிகளும் மற்ற அணிகளோடு ஒரு சிறு போட்டியைக் கூட உருவாக்கவில்லை என்பதுதான், இரு அணிகளின் மிகப்பெரிய இரசிகர் வட்டாரங்களுக்குச் சோகமான விசயம். இவர்களின் இந்தச் சரிவு ஐ.பி.எல் தொடர் ஒளிப்பரப்பு டி.ஆர்.பி ரேட்டிங்கிலேயே சரிவை உண்டாக்கி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இரு அணிகளின் இந்த மோசமான சரிவுகளுக்கான காரணங்கள் என்ன என்பதை, குறிப்பாக சென்னை அணியின் தோல்விகளுக்குக் காரணங்கள் என்பதை, இந்த இரு அணிகளுக்காகவும் விளையாடியுள்ள, இந்திய அணியின் சாதனை சுழற்பந்து வீச்சாளர், முன்னாள் பிரபல இந்திய வீரர் ஹர்பஜன் சிங் விளக்கி இருக்கிறார்.

ஹர்பஜன் சிங் இதுக்குறித்து கூறிய விளக்கமாவது “தோனி போன்ற ஒரு கேப்டன் இருக்கும் இடத்திற்கு புதிதாய் ஒருவர் வந்து, அதைச் சரியாய் செய்திட முடிவது கடினமான விசயம். அவர் தன் தலைமையில் எல்லாக் கோப்பைகளையும் வென்றிருக்கிறார். அவரை கேப்டன் பொறுப்பிலிருந்து மாற்றுவது என்பது கடினமான விசயம். அவர் இன்னும் சிறப்பாகத்தான் செயல்படுகிறார் என்று நான் நினைக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர் “சென்னை மும்பை அணிகளில் ஜடேஜா, பும்ரா போன்ற வீரர்களைத் தவிர, எதிரணியை 150 ரன்களுக்குள் கட்டுப்படுத்தும் பவுலர்கள் இல்லை. ஏலத்தில் இந்த விசயத்தில் இரு அணிகளுமே தோற்றுவிட்டார்கள். லக்னோ, குஜராத் ஆகிய புதிய அணிகள் வலிமையான அணிகளாக ஏலத்தில் உருவாக்கியிருக்கிறார்கள். மற்ற அணிகளுமே வலிமையாய் இருக்கிறது. சென்னை, மும்பை அணிகளின் இந்த நிலை மற்றவர்களுக்கு ஒரு வாய்ப்பு” என்றார்.

தொடர்ந்து விளக்கிய அவர் “கேப்டன் பொறுப்பிற்கு ஜடேஜாவை முயற்சித்தார்கள். ஆனால் அது பலனளிக்கவில்லை. இப்பொழுது எம்.எஸ்.தோனியைத் தாண்டி சென்னை அணி எப்படிச் செயல்பட போகிறதென்று பார்க்க வேண்டும். அவருடைய இடத்தை யார் நிரப்ப போகிறார்கள் என்று தெரியவில்லை. அது அவ்வளவு சுலபமில்லை” என்று விளக்கத்தை முடித்தார்!