“ரிஷப் பண்ட்டை வெளில உக்கார வைக்கணும், அதுக்கு பதில் யார் உள்ளே வரணும்னா..” – கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கருத்து!

0
675

ரிஷப் பண்ட்டிருக்கு இனி ஓய்வு கொடுங்கள் என்று அறிவுறுத்தியுள்ளார் முன்னாள் இந்திய வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்.

இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப்பன்ட் தனது மோசமான பேட்டிங் ஃபார்மை மீண்டும் மீண்டும் தொடர்ந்து வருகிறார். உலகக்கோப்பை தொடரில் அவர் சரிவர செயல்படாதது பெரும் எதிர்ப்பை கிளப்பியது.

நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரிலும் சொதப்பினார். அதன் பிறகு நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் டாப் 3 பேட்ஸ்மேன்கள் அரைசதம் அடித்தனர். ஆனால் அடுத்து வந்த ரிஷப் பன்ட் 23 பந்துகளில் 15 ரன்கள் அடித்தார்.

பண்ட் இரண்டாவது ஒருநாள் போட்டியின் பிளேயிங் லெவனில் இருந்தார். நன்றாக விளையாடிய சஞ்சு சாம்சன் பிளேயிங் லெவனில் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் ரிஷப் பண்டிற்கு சிறிது காலம் ஓய்வு கொடுத்து அவருக்கு சர்வதேச போட்டிகளின் முக்கியத்தை புரிய வைக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்திருக்கிறார் முன்னாள் இந்திய வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்.

“ரிஷப் பண்ட்டிற்கு ஓய்வு கொடுத்து அனுப்ப வேண்டும். இந்திய அணிக்கு விளையாட வேண்டும் என்றால் இன்னும் சில காலம் காத்திருக்க வேண்டும் என்று அவரிடம் கூற வேண்டும். வாய்ப்புகளை சரியாக பயன்படுத்துவதில்லை.

முதலில் யார் இந்த ரிஷப் பண்ட்? அணியில் வாய்ப்புக்காக ஏங்கும் வீரர்கள் இல்லையா?. சர்வதேச போட்டிகளில் கிடைக்கும் வாய்ப்புகளை எவ்வளவு அலட்சியமாக பயன்படுத்தி வருகிறார். இதனால் நான் மிகவும் அதிருப்தி அடைந்தேன். நிச்சயம் இனியும் அவரை அணியில் தொடர்வது சரியாக இருக்காது. வெளியில் அமர்த்த வேண்டும்.

சஞ்சு சாம்சன் போன்ற வீரர் வாய்ப்புகளுக்காக ஏங்கி வரும் பொழுது, இப்படி பல வாய்ப்புகள் கிடைப்பதை சொதப்புவது பொறுப்பில்லாத தனம். உலகக்கோப்பை அரை இறுதியில் அபூர்வமான வாய்ப்பு கிடைத்தது. அப்போது தனது அதிரடியை வெளிப்படுத்தி இருந்தால் கிரிக்கெட் வாழ்க்கையில் அது எவ்வாறு மாறி இருக்கும். இந்த புரிதல் அவருக்கு இல்லை எனில், எப்படி அணியில் வைத்திருப்பது? சிறிது காலம் வெளியில் அமர்த்தி வாய்ப்புக்காக ஏங்க வைப்பது தான் சரியான முடிவாக இருக்கும்.” என்றார்.