இந்திய அணி சில வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்றது. இதற்காக 50 கோடிக்கும் மேல் பரிசு தொகையை இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்திருக்கிறது. இந்த பரிசுத் தொகையை பிரித்துக் கொள்வது குறித்து கவாஸ்கர் இந்திய பயிற்சியாளர் கம்பீருக்கு கேள்வி எழுப்பி இருக்கிறார்.
கிரிக்கெட் உலகத்தில் தற்போது இந்திய கிரிக்கெட் வாரியம் வேறு எந்த கிரிக்கெட் வாரியங்களை விடவும் மிகப்பெரிய பொருளாதாரத்தைக் கொண்டதாக இருக்கிறது. இதன் காரணமாக யாரும் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு இந்திய அணி ஐசிசி தொடர்களை வெல்லும் பொழுது பரிசுத்தொகையை அளித்து அசத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
உலகமே வியந்த பரிசுத்தொகை
கடந்த முறை நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரை இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் கைப்பற்றியது. அப்பொழுது இந்திய கிரிக்கெட் வாரியம் ஒட்டுமொத்த இந்திய அணிக்கும் மற்றும் பயிற்சியாளர்கள் குழுவுக்கும் சேர்த்து 125 கோடி ரூபாய் பரிசுத் தொகையை அறிவித்தது. இந்த அளவிற்கு கிரிக்கெட்டில் யாரும் பரிசை இதற்கு முன்பு கொடுத்தது கிடையாது.
இந்த நிலையில் ராகுல் டிராவிட் தன்னுடைய பயிற்சியாளர் குழுவை விட தனக்கு அதிக பரிசு தொகை வேண்டாம் என்று மறுத்துவிட்டார். மேலும் பயிற்சியாளர் குழுவுக்கு வழங்கப்பட்ட அதே அளவு தொகையை தானும் பெற்றுக் கொள்வதாக அறிவித்தார். இதைத்தொடர்ந்து எல்லோருக்கும் சமமான தொகையை இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. ராகுல் டிராவிட் செயல் அனைவராலும் பாராட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ராகுல் டிராவிட்டை கம்பீர் பின்பற்றுவாரா?
இது குறித்து கேள்வி எழுப்பி இருக்கும் சுனில் கவாஸ்கர் பேசும் பொழுது ” இந்திய அணி டி20 உலகக்கோப்பை தொடரை வென்ற பிறகு, இந்திய கிரிக்கெட் வாரியம் மிகப்பெரிய பரிசு தொகையை அறிவித்தது. அப்பொழுது தனது பயிற்சியாளர் குழுவினரை விட தனக்கு அளிக்கப்பட்ட பெரிய பரிசு தொகையை ராகுல் டிராவிட் ஏற்கவில்லை. இதைத்தொடர்ந்து அவர் பரிசுத்தொகையை தனது பயிற்சியாளர் குழுவுடன் பகிர்ந்து கொண்டார்”
இதையும் படிங்க : விராட் கோலிக்கு எதிரா.. முதல் முறையாக இதை செய்ய ரொம்ப ஆர்வமா இருக்கேன்.. என் ரோல் இதான் – சிராஜ் பேட்டி
“தற்போது இந்திய கிரிக்கெட் வாரியம் சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்றதற்காக பரிசுத் தொகையை அறிவித்து 15 நாட்களுக்கு மேல் ஆகிறது. ஆனால் ராகுல் டிராவிட்டை பின்பற்றி கம்பீர் அதே வழியில் செல்வாரா? என்பது குறித்து நாம் இதுவரையில் எதுவுமே கேட்கவில்லை. இல்லை ராகுல் டிராவிட் எடுத்த முடிவு நல்ல முடிவு கிடையாதா? அப்படித்தான் எல்லோரும் நினைக்கின்றார்களா?” என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.