2022 டி20 உலகக் கோப்பைக்கு தினேஷ் கார்த்திக் தேவையில்லை ; பதிலாக இவர்களை தேர்வு செய்யலாம் – கவுதம் கம்பீர் அதிரடிக் கருத்து

0
249
Gautham Gambhir about Dinesh Karthik

யு.ஏ.இ-யில் கடந்த ஆண்டு நடந்த டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளோடு படுதோல்வியைச் சந்தித்து, அந்த உலகக்கோப்பையின் முதல் சுற்றோடு இந்திய அணி அதிர்ச்சிக்கரமாய் வெளியேறியது.

நவீன கிரிக்கெட் வடிவமான டி20 கிரிக்கெட் வடிவத்தில் மற்ற அணிகளை ஒப்பிடும் பொழுது, இந்திய அணியின் அணுகுமுறை மிகப் பழைமையானதாகவே இருக்கிறது. மற்ற அணிகளின் பேட்டிங் வரிசையின் துவக்கத்தில் இருக்கும் பிளாஸ்டர் பேட்ஸ்மேனோ, நடுவரிசையில் தாக்கி ஆடும் தைரியமான அணுகுமுறையைக் கொண்ட பேட்ஸ்மேனோ இந்திய அணியில் இல்லை. அதாவது இந்திய அணியில் இடம் தரப்படுவது இல்லை.

இதனால் டி20 போட்டிகளில் சேஸிங்கில் சிறப்பாகச் செயல்படும் இந்திய அணி, முதலில் பேட்டிங் செய்து நல்ல இலக்கை நிர்ணயிக்க தடுமாறியே வந்திருக்கிறது. யு.ஏ.இ-யில் நடந்த உலகக்கோப்பையிலும் முதலில் பேட்டிங் செய்தே பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளோடு தோற்றது.

இதனால் இந்திய கிரிக்கெட் வாரியம், ஒரு புதிய மனநிலை கொண்ட, தைரியமான பேட்டிங் அணுகுமுறையோடு விளையாட, ரோகித் சர்மா தலைமையில் வலியுறுத்தியது. இதன்படியே தற்போது இந்திய அணி தைரியமாய் அடித்து ஆடி விளையாடி வருகிறது.

இந்த நிலையில் நடந்து முடிந்த ஐ.பி.எல் தொடரில் மிகச்சிறப்பாக பேட்டிங்கில் பினிசிங் ரோலில் செயல்பட்ட தினேஷ் கார்த்திக்கிற்கு இந்திய டி20 அணியில் இடம் அளிக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்தும் தினேஷ் கார்த்திக் குறித்தும் பேசியுள்ள இந்திய முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் “நான் முன் கூட்டியே சொல்கிறேன். டி20 உலகக்கோப்பை பக்கத்தில் இருக்கிறது. தினேஷ் கார்த்திக் அதவரையில் தொடர்ந்து விளையாட வேண்டும். ஆனால் கடைசி மூன்று ஓவர்களில் மட்டும் அவர் பேட் செய்ய விரும்பினால், விசயங்கள் கடினமாகிவிடும். இந்தியா நிச்சயம் நம்பர் 7ல் ஒருவரை பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் பார்க்கும்” என்று கூறினார்.

மேலும் பேசிய அவர் “இதன்படி பார்த்தால் தினேஷ் கார்த்திக் அணியில் இருக்க மாட்டார். தீபக் ஹூடா, ரிஷாப் பண்ட் போன்றவர்கள் கட்டாயம் அணியில் இருப்பார்கள். நமக்கு கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ் கிடைத்துள்ளார். ரோகித் சர்மா மீண்டும் வந்தவுடன், தினேஷ் கார்த்திக் ஆடும் அணியில் இடம்பெறுவது கடினமாக இருக்கும். அவருக்கு ஆடும் அணியில் இடம் இல்லையென்றால், அணியில் இடம் கொடுப்பதால் எந்தப் பயனும் இல்லை. இதனால் அவரை டி20 உலகக்கோப்பை அணியில் எடுக்கமாட்டார்கள். அவர்கள் இளம் வீரர்களோடு போவதையே விரும்புகிறார்கள்” என்று விளக்கமாகக் கூறினார்!