அடுத்த வருட ஐபிஎல் தொடருக்கு பெங்களூரு அணி தக்க வைக்கப்போகும் 3 வீரர்கள் – கௌதம் கம்பீர் கணிப்பு

0
195
Gambhir about RCB Retention

நடப்பு ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்று இன்றுடன் நிறைவு பெற இருக்கிறது. முதல் குவாலிபயர் ஆட்டத்தில் சென்னை மற்றும் டெல்லி அணிகள் மோதின. அதில் சென்னை அணி வெற்றிபெற்று நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அதன் பின்னர் நடந்த எலிமினேட்டர் ஆட்டத்தில் பெங்களூர் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின. அந்தப் போட்டியில் வெற்றி கண்ட கொல்கத்தா அணி இரண்டாவது குவாலிபயர் ஆட்டத்திற்கு தகுதி பெற்றது. மறுபுறம் பெங்களூர் அணி தொடரில் இருந்து வெளியேறியது.

இன்று இரண்டாவது குவாலிபயர் ஆட்டத்தில் டெல்லி மற்றும் கொல்கத்தா அணியில் விளையாட இருக்கின்றன. இதில் வெற்றி பெறும் அணி வருகிற 15ம் தேதி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் சென்னை அணியுடன் இறுதிப்போட்டியில் விளையாடும்.

- Advertisement -

இந்த வருடத்திற்கான ஐபிஎல் தொடர் வருகிற 15ம் தேதியுடன் வெற்றிகரமாக முடிந்து விடும். அடுத்த ஆண்டு நடைபெற இருக்கின்ற ஐபிஎல் தொடர் கடந்த சில ஆண்டுகளை விட மிக சுவாரசியமாக இருக்கப் போகிறது. தற்பொழுது உள்ள அனைத்து அணிகளும் தங்கள் அணியில் உள்ள மூன்று வீரர்களை மட்டுமே தக்க வைத்துக் கொள்ள முடியும். அதேசமயம் அடுத்த வருடம் புதிதாக இரண்டு அணிகள் உடன் சேர்த்து, மொத்தமாக 10 அணிகள் களம் இறங்கப் போகிறது.

தற்பொழுது உள்ள ஒவ்வொரு அணியும் எந்த 3 வீரர்களை தக்க வைத்துக் கொள்ளப் போகிறது என்று ஆவலுடன் அந்தந்த அணி ரசிகர்கள் இருக்கின்றனர். பெங்களூரு அணியை பொறுத்தவரையில் இந்த மூன்று வீரர்கள் நிச்சயமாக அந்த அணி நிர்வாகத்தால் தக்க வைக்கப்படுவார்கள் என்று முன்னாள் இந்திய வீரர் கவுதம் கம்பீர் தற்பொழுது கணித்து கூறியுள்ளார்.

கௌதம் கம்பீர் கணித்துள்ள அந்த மூன்று வீரர்கள்

கௌதம் கம்பீர் விராட் கோலி, கிளென் மேக்ஸ்வெல் மற்றும் சஹால் ஆகிய மூவரையும் பட்டியலிட்டுள்ளார். இந்த மூன்று வீரர்கள் நிச்சயமாக பெங்களூர் அணி நிர்வாகத்தால் அடுத்த வருடத்திற்கான ஐபிஎல் தொடருக்கு தங்க வைக்கப்படுவார்கள். இவர்கள் மூவரின் ஆட்டம் மற்றும் திறமை அடிப்படையில், அடுத்த வருடம் ஐபிஎல் தொடருக்கு இது சரியான தேர்வாக அமையும் என்று கௌதம் கம்பீர் கூறியுள்ளார்.

- Advertisement -

கௌதம் கம்பீர் கூறியுள்ள 3 வீரர்களில் விராட் கோலி பற்றி எந்தவித அறிமுகமும் தேவையில்லை. 14 வருடங்களாக தொடர்ந்து பெங்களூரு அணியில் விளையாடி வருகிறார். ஐபிஎல் தொடரில் 6000 ரன்களுக்கு மேல் குவித்து மிகப்பெரிய உச்சத்தில் அவர் இருக்கிறார். அடுத்த வருடம் பெங்களூரு அணியில் தான் கேப்டனாக விளையாடா விட்டாலும் நிச்சயமாக ஒரு வீரராக தொடர்ந்து அந்த அணியில் விளையாடுவேன் என்று விராட் கோலி நம்பிக்கையும் தெரிவித்திருக்கிறார். இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கையில் நிச்சயமாக விராட் கோலி அடுத்த ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்கே விளையாடுவார் என்று நாம் எதிர்பார்க்கலாம்.

கிரிக்கெட் போட்டிகளில் ஆல்ரவுண்டர் வீரர்கள் மத்தியில் மிகப்பெரிய அனுபவத்தை கொண்டுள்ள ஒரு வீரர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிளென் மேக்ஸ்வெல். நடப்பு ஐபிஎல் தொடரில் கூட பெங்களூர் அணிக்காக அதிகபட்சமாக 500 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார். இந்திய மைதானங்களிலும் அவரது ஆட்டம் மிக அற்புதமாக இருக்கும். எனவே அவரும் பெங்களூர் அணியில் இடம் பெற அதிக வாய்ப்பு உள்ளது.

இறுதியாக ஸ்பின் பந்து வீச்சில் பெங்களூர் அணிக்காக அற்புதமாக செயல்படக்கூடிய வீரர் சஹால். ஐபிஎல் தொடரில் 114 போட்டிகளில் விளையாடி 139 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றியிருக்கிறார். குறிப்பாக பெங்களூரு அணியை நெருக்கடியான நிலையில் சிக்கி தவிக்கும் பொழுது அவர் தன்னுடைய பந்துவீச்சின் மூலம் அந்த அணியை காப்பாற்றியிருக்கிறார். இந்திய மைதானங்களில் அவருடைய ஸ்பின் பந்து வீச்சு மிகப்பெரிய அளவில் எடுபடும். நிச்சயமாக அவரையும் பெங்களூரு அணி தக்கவைக்க அதிக வாய்ப்பு உள்ளது என்று நாம் நம்பலாம்.