வெளியானது டி20 ரேங்கிங்; ஸ்கையை தோட்ட சூரியகுமார் யாதவ்!!

0
4270

ஆஸ்திரேலியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுடன் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு பேட்டிங்கில் சிறப்பான பங்களிப்பை கொடுத்த சூரியகுமர் யாதவ், சர்வதேச டி20 தரவரிசை பட்டியலில் நல்ல முன்னேற்றம் கண்டிருக்கிறார்.

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டி20 போட்டிக்கு பிறகு, சர்வதேச டி20 தரவரிசை பட்டியல் ஐசிசி தரப்பிலிருந்து வெளியிடப்பட்டது.

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி 187 ரன்களை சேஸ் செய்து வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. அப்போட்டியில் வெறும் 36 பந்துகளை சந்தித்து 69 ரன்கள் அடித்து ஆட்டத்தின் போக்கை இந்திய அணி பக்கம் திருப்பிய சூரியகுமார் யாதவ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். அதன் பிறகு நடைபெற்ற தென் ஆப்பிரிக்கா அணியுடன் முதல் டி20 போட்டியில் கடினமான சூழலில் களமிறங்கி, வழக்கமான அதிரடியை வெளிப்படுத்தி, இந்திய அணிக்கு வெற்றியை பெற்று தந்திருக்கிறார்.

சூரியகுமார் யாதவ் இப்போட்டியில் 33 பந்துகள் சந்தித்து 50 ரன்கள் அடித்திருக்கிறார். இந்த வருடம் டி20 போட்டிகளில் 700 க்கும் அதிகமாக ரன்கள் அடித்திருக்கும் இவர், சர்வதேச டி20 தரவரிசை பட்டியலில் நல்ல முன்னேற்றம் கண்டிருக்கிறார்.

இதற்கு முன்னர் நான்காவது இடத்தில் இருந்த சூரியகுமார் யாதவ், தற்போது 801 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறார். 800 புள்ளிகளுக்கும் அதிகமாக வைத்திருந்த பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் 799 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறார். அதே பாகிஸ்தான் அணியை சேர்ந்த துவக்கவீரர் முகமது ரிஸ்வான் 861 புள்ளிகளுடன் வலுவான நிலையில் முதலிடத்தில் இருக்கிறார்.

நடைபெற்று வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் பாகிஸ்தான் அணியின் ஒரே நம்பிக்கையாக ரிஸ்வான் உள்ளார். இவர் 88, 8, 88, 63 என இரண்டாவது, மூன்றாவது, நான்காவது மற்றும் ஐந்தாவது டி20 போட்டிகளில் முறையே அடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஆல்ரவுண்டர் தரவரிசை பட்டியலில், ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடரில் மூன்று போட்டிகளில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி, அபாரமாக செயல்பட்ட அக்சர் பட்டேல் கிட்டத்தட்ட 15 இடங்கள் முன்னேறி 18 வது இடத்தில் இருக்கிறார்.

அனுபவம் மிக்க வேகப்பந்துவீச்சாளர் புவனேஸ்வர் குமார் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடரில் அதிக ரன்களை விட்டுக் கொடுத்தார். தற்போது தென்னாபிரிக்க அணிக்கு எதிரான தொடரில் அவர் இடம் பெறவில்லை. பந்துவீச்சு தரவரிசையில் சில இடங்கள் பின்னே தள்ளப்பட்டு பத்தாவது இடத்தில் உள்ளார்.

ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் முதல் 10 இடங்களுக்கும் இருக்கும் ஒரே இந்திய வீரர் ஹார்திக் பாண்டியா, தென் ஆப்பிரிக்க அணி உடனான தொடரில் இடம் பெறவில்லை. ஆதலால் 184 புள்ளிகளுடன் தொடர்ந்து ஐந்தாவது இடத்தில் நீடிக்கிறார்.