ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காகவும், உள்நாட்டு கிரிக்கெட்டில் மும்பை அணிக்காகவும் விளையாடிய துவக்க ஆட்டக்காரர் பால் வல்தாட்டி தற்பொழுது அமெரிக்காவில் உள்நாட்டு மைனர் லீக் கிரிக்கெட் தொடரில் வீட்டில் தண்டர்போல்ட்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
பால் வல்தாட்டி ஐபிஎல் தொடரில் 2011 ஆம் ஆண்டு சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக 63 பந்துகளில் 19 பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்கள் உடன் 120 ரன்கள் குவித்து இந்திய கிரிக்கெட்டில் எல்லோரையும் திரும்பி பார்க்க வைத்தார்.
சோகமான கிரிக்கெட் வாழ்க்கை
1990களின் பிற்பகுதியில் மும்பை கிரிக்கெட்டில் குறிப்பிட்ட வயதுக்கு உட்பட்டவர்களுக்கான கிரிக்கெட்போட்டிகளில் விளையாட ஆரம்பித்தார். அங்கிருந்து அவருக்கு 2002 ஆம் ஆண்டு அண்டர் 19 உலக கோப்பை தொடரில் இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. அப்பொழுது கண்ணில் ஏற்பட்ட காயம் இவருடைய கிரிக்கெட் வாழ்க்கையில் பெரிய தடையை உண்டாக்கியது.
இதற்குப் பிறகு மீண்டும் மும்பை அணிக்காக 2006 ஆம் ஆண்டு லிஸ்ட் ஏ போட்டிகளில் அறிமுகமானார். கண்ணில் ஏற்பட்ட காயம் பெரிய பின்னடைவை கொடுத்த போதிலும் மனம் தளராமல் போராடி மாநில கிரிக்கெட்டுக்குள் வந்தார்.
பிறகு 2009 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக வாங்கப்பட்டார். அங்கிருந்து பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக வாங்கப்பட்ட இவர் 2011 ஆம் ஆண்டு சிஎஸ்கே அணிக்கு எதிராக 120 ரன்கள் குவித்து அந்த நேரத்தில் பலருக்கும் அறிமுகமான வீரராக மாறினார். மேற்கொண்டு அவருக்கு ஐபிஎல் தொடரில் நல்ல போட்டிகள் மற்றும் சீசன்கள் அமையவில்லை.
இதையும் படிங்க : சாய் சுதர்சன் ருதுராஜ் கேப்டன்சியில் துலீப் டிராபி விளையாட மாட்டாரா.. இங்கிலாந்து கவுண்டி தொடரில் விளையாடுகிறாரா?
இதைத்தொடர்ந்து அவருக்கு மணிக்கட்டு காயமும் ஏற்பட்டது. மேலும் ஐபிஎல் தொடரில் 2013 ஆம் ஆண்டு அவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்தது. அதே சமயத்தில் அவர் 2023 ஆம் ஆண்டுதான் உள்நாட்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார்.
அமெரிக்காவில் கிடைத்த அங்கீகாரம்
இப்படியான நிலையில் தான் 40 வயதான அவருக்கு அமெரிக்காவின் மைனர் லீக் கிரிக்கெட் தொடரில் சீட்டில் தண்டர்போல்ட்ஸ் அணிக்கு தலைமை பயிற்சியாளராகும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஐபிஎல் தொடர் மற்றும் மும்பை அணிக்காக விளையாடிய கிரிக்கெட் அனுபவங்களை சீட்டில் தண்டர்போல்ட்ஸ் அணிக்கு பகிர்ந்து கொள்வதில் தான் மகிழ்ச்சி அடைவதாக அவர் தெரிவித்திருக்கிறார்