இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறது. தற்போது மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய கிரிக்கெட் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான முரளி கார்த்திக் முதல் போட்டியில் வாய்ப்பு பெற்ற இளம் வீரர் குறித்து சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
அறிமுகப் போட்டியில் கலக்கல்
வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடர் மற்றும் டி20 தொடரில் விளையாடி வரும் நிலையில் இதில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் இரண்டு போட்டிகளிலும் தோல்வி அடைந்து தற்போது டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் சூரியகுமார் யாதவ் தலைமையிலான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறது.
இதில் குறிப்பிடத்தக்க விதமாக ஐபிஎல் தொடரில் கலக்கிய அதிவேக புயல் வேகப்பந்துவீச்சாளர் மயங்க் யாதவ் வங்கதேச அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணிக்காக தனது சர்வதேச முதல் போட்டியில் அறிமுகமாகி இருக்கிறார். இந்த போட்டியில் சிறப்பாக பந்து வீசி தனது முதல் சர்வதேச விக்கட்டையும் வீழ்த்தியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்திய அணி முன்னாள் வீரரான முரளி கார்த்திக் மயங்க் யாதவிற்கு அறிமுக தொப்பியை வழங்கியது குறித்து சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இது ஒரு சிறப்பான தருணம்
இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “அதிவேகபந்துவீச்சாளர் மயங்க் யாதவிற்கு இது ஒரு மறக்க முடியாத நாளாக இருக்கும். இது 25 வருடங்களுக்கு முன்னதாக சச்சின் மற்றும் கபில்தேவ் பாஜியிடம் எனது சர்வதேச தொப்பியை நான் பெற்றது நினைவு கூறும் வகையில் இருந்தது. கௌதம் கம்பீர் அவர்கள் என்னிடம் தொப்பியை தனிப்பட்ட முறையில் மயங்க் யாதவிற்கு பரிசளிக்குமாறு கேட்டது மனதை தொடும் வகையில் அமைந்தது. இது ஒரு அற்புதமான தருணமாக இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.
தனது அறிமுக போட்டியில் விளையாடிய மயங்க் யாதவ் நான்கு ஓவர்கள் பந்துவீசி ஒரு ஓவர் மெய்டனுடன் 21 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தி இருக்கிறார். இவரது அதிவேகப் பந்துவீச்சு இந்திய ரசிகர்களால் பெருமளவில் கவரப்பட்டு வருகிறது. இன்னும் இரண்டு போட்டிகள் வங்கதேச அணிக்கு எதிராக இருக்கும் நிலையில் தனது முழு திறனை காண்பித்து அதிக விக்கட்டுகளை வீழ்த்துவார் என்று எதிர்பார்க்கலாம்.
இதையும் படிங்க:மூளையை பயன்படுத்து.. இல்லன்னா அது நடக்கவே நடக்காது.. யுவராஜ் சிங் அபிஷேக் ஷர்மாவை விமர்சனம்
ஐபிஎல் தொடரில் சில போட்டிகளை விளையாடியிருந்தாலும் குறிப்பிடத்தக்க விக்கெட்டுகளை வீழ்த்தி தனது திறமையை நிரூபித்திருக்கிறார். அதற்கு பிறகு காயமடைந்து வெளியேறிய நிலையில் தற்போது காயத்திலிருந்து குணமாகி இந்திய அணிக்காக விளையாடும் இவர் அடுத்த நட்சத்திர வீரராக வருவார் என்பதே அனைத்து ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.