அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 19 ஆவது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா நடைபெற உள்ள நிலையில் அதற்கான ஆட்டக்களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி விட்டது.
இந்த சூழ்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளின் விவகாரம் குறித்து இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரான ஆகாஷ் சோப்ரா சில முக்கிய கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.
ஐபிஎல் தொடரில் வெற்றிகரமான அணிகளில் ஒன்றாக கருதப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கடந்த சீசனில் போதிய அளவு சிறப்பாக செயல்படாததால் தொடரின் முடிவில் கடைசி இடத்தைப் பிடித்து ஏமாற்றத்தை வெளிப்படுத்தியது. இருப்பினும் தேவையான வீரர்களை தொடர் நடந்து கொண்டிருக்கும்போதே எடுத்து அணியை வலுப்படுத்தினாலும் இன்னும் சில வீரர்களை நிரப்ப வேண்டிய கட்டாயத்தில் சென்னை அணி உள்ளது.
அதேபோல ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலும் சஞ்சு சாம்சன் கடந்த சீசனில் காயம் காரணமாக வெளியேற, அவருக்கு பிறகு ரியான் பராக் கேப்டனாக செயல்பட்டார். இதனால் அந்த அணியில் எதிர்கால கேப்டன் ரியான் பராக் இருப்பார் என்று கூறப்படும் நிலையில் சாம்சன் அணியை விட்டு வெளியேறுவதாக தகவல்கள் வெளிவருகிறது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சஞ்சு சாம்சனை தங்கள் அணிக்கு எடுத்து இதற்கு பதிலாக ரவீந்திர ஜடேஜாவை ராஜஸ்தான் அணிக்கு ட்ரேடிங் முறையில் மாற்றம் செய்யப் போவதாகவும் தகவல்கள் வெளிவருகின்றன.
இந்த சூழ்நிலையில் இதுகுறித்து இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரான ஆகாஷ் சோப்ரா கூறும்போது, ரவீந்திர ஜடேஜாவை ராஜஸ்தான் அணி கேப்டனாக நியமிக்காது என்று நான் நம்புகிறேன் எனவும், ஒரு வேலை அவர்கள் அவ்வாறு செயல்பட்டால் இளம் வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஏமாற்றம் அடைந்து அவரும் அணியை விட்டு வெளியேறலாம் என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
இதையும் படிங்க:என் தென் ஆப்பிரிக்க அணியே.. இந்த இந்திய வீரருக்கு எதிராக ஹோம் ஒர்க் பண்ணுங்க.. இல்லனா தோல்விதான் – மார்க் பவுச்சர் அறிவுரை
இதுகுறித்து அவர் கூறும் போது “ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஜடேஜாவை கேப்டனாக ஆக்குமா? என்று கேள்வியாக உள்ளது. ஆனால் அவர்கள் ஜெய்ஸ்வாலை கேப்டனாக நியமிப்பார்கள் என்று நான் நம்புகிறேன். இப்போது அவருக்கு கேப்டன் பதவியை வழங்காவிட்டால் அடுத்த மெகா ஏலம் வரும்போது அவரும் ராஜஸ்தான் அணியை விட்டு வெளியேறலாம். அப்போது நீங்கள் இவரையும் இழப்பீர்கள். தயவுசெய்து உங்களிடம் இப்போது உள்ளவரை நன்றாக பிடித்துக் கொள்ளுங்கள்” என்று அவர் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.