மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான மூன்றாவது ஓடிஐ போட்டியில் இந்திய பௌலர்கள் 351 ரன்களை டிஃபென்ட் செய்ய முடியாமல் தோல்வியடைந்த நிலையில், அணியின் பௌலிங் தேர்வு மற்றும் மேனேஜ்மென்ட் முடிவுகளை முன்னாள் கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கடுமையாக விமர்சித்துள்ளார்.
நியூ சண்டீகரில் நடைபெற்ற இப்போட்டியில் முகமது சிராஜ் முழுமையாக ஓவர் வீசாததும், குர்னூர் ப்ரார் மற்றும் அன்ஷுல் கம்போஜ் போன்ற இளம் பிளேயர்களைக் களம் இறக்கி 146 ரன்களை விட்டுக்கொடுத்ததும் இந்திய ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீகாந்த் தனது யூடியூப் சேனலில் பேசும்போது, “முகமது சிராஜிற்கு இன்னும் இரண்டு ஓவர்கள் மீதமிருந்தன, அவர் 50வது ஓவரை பௌல் செய்திருந்தாலும் மொத்தம் ஒன்பது ஓவர்கள் மட்டுமே வீசியிருப்பார். அந்த லாஜிக் எனக்குப் புரியவில்லை. கம்போஜ் வீசிய கடைசி ஓவரை சிராஜ் தான் வீசியிருக்க வேண்டும். இந்திய அணியின் பௌலிங் ஒட்டுமொத்தமாக மிகவும் பலவீனமாக உள்ளது. இந்த பௌலிங்கை வைத்துக்கொண்டு உலகக்கப்பையை வெல்வதற்கு எந்த வாய்ப்பும் இல்லை.” என்று கூறி இருக்கிறார்.
மேலும் தொடர்ந்து பேசுகையில், “இந்திய அணி குர்னூர் ப்ரார், அன்ஷுல் கம்போஜ் போன்ற ரேண்டம் பிளேயர்களை உருவாக்க முயற்சிக்கிறது. இதற்கு பின்னால் எந்த லாஜிக்கும் இல்லை. வெஸ்ட் இண்டீஸ் அணியின் பலவீனமான அட்டாக்கை எதிர்த்து இந்திய அணி 350 ரன்கள் மட்டுமே அடித்தது. பும்ரா மற்றும் ஹர்திக் பாண்டியா தவிர இதுதான் முழுமையான அணி. வெஸ்ட் இண்டீஸ் போன்ற ஒரு அணியிடம் நீங்கள் தோற்கக் கூடாது.” என்று கூறி இருக்கிறார்.
அடுத்து நிதிஷ் குமார் ரெட்டி பற்றி ஸ்ரீகாந்த் பேசும்போது, “பந்து கொஞ்சம் பவுன்ஸ் ஆனாலே நிதிஷ் குமார் ரெட்டி தடுமாறுகிறார். ரன்களை விட்டுக்கொடுத்தாலும் அவருக்கு தொடர்ந்து பௌலிங் கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். அவரை எப்படியாவது ஒரு ஆல்ரவுண்டர் ஆக்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருக்கிறார்கள். இது இந்திய கிரிக்கெட்டிற்கு நல்ல அறிகுறி அல்ல. பவுன்சியான விக்கெட்டுகளில் அவரது பேட்டிங்கும் சந்தேகத்திற்குரியதாகவே இருக்கிறது.” என்று கூறி இருக்கிறார்.